சிறுவயதிலேயே சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்.. புகையிலைப் பயன்பாட்டில் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா!

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் புகையிலைப் பயன்பாடு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் புகையிலை பயன்பாடு சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்ற பல வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே புகையிலை குறித்த விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்தும் நோக்கில், உலக புகையிலை எதிர்ப்பு தினம், ஆண்டுதோறும் மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும், குறிப்பாக 124 க்கும் மேற்பட்ட நாடுகளில் வளமான நிலங்கள் யாவும் புகையிலை விவசாயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று WHO அறிக்கை வெளியிட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாக “புகையிலையை அல்ல, உணவை வளர்ப்போம்” (“Grow food, not tobacco”) என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

புகையிலை பயன்பாட்டின் காரணமாக இருதய நோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் (chronic lung diseases) போன்ற பல நோய்களும்,  குறிப்பாக இந்தியாவில் 27% புற்றுநோய்களும் ஏற்பட்டாலும் கூட, உலகிலேயே சீனாவிற்கு அடுத்தப்படியாக புகையிலையின் இரண்டாவது பெரிய நுகர்வோராகவும் (Consumer), இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் (producer) இந்தியா உள்ளது என்று WHO தெரிவித்துள்ளது. 

சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வு கூறுவதென்ன?

சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வின் நான்காவது சுற்று, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐஐபிஎஸ் நிறுவனத்தால் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியாவில் 13-15 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளின் புகையிலை பயன்பாடு குறித்த மதிப்பீடுகளை இக்கணக்கெடுப்பு விளக்குகிறது. இந்த கணக்கெடுப்பில் 987 பள்ளிகளைச் சேர்ந்த 97,302 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 

பாலினம், வயது, பள்ளி அமைந்துள்ள இடம் (கிராமப்புறம், நகர்ப்புறம்), பள்ளி நிர்வாகம் (தனியார், அரசுப்பள்ளி) ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவில் உள்ள சிறுவர்கள் (38 சதவீத சிறுவர்கள்) 10 வயதிற்குள்ளாகவே, புகையிலையை சிகரெட், பீடி என ஏதாவது ஒரு வடிவத்தில் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் வழங்கியுள்ளது.

மேலும் மாணவர்களில் 8.5% பேர் புகையிலையின் ஏதாவது ஒரு வடிவத்தை பயன்படுத்துகின்றனர் என்றும், இதில் 9.6% ஆண்கள், 7.4% பெண்கள் என்றும் இந்த தரவு கூறுகிறது.

இதற்கு முந்தைய கணக்கெடுப்புகளையும் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த பத்தாண்டுகளில் 13-15 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகளிடையே புகையிலை பயன்பாடு 42% குறைந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது. குறிப்பாக 2009-10 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் இந்தியாவில் 35% ஆக இருந்த புகையிலையின் பயன்பாடு, இதற்கு அடுத்த 2016-17 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் 28.6% ஆக குறைந்துள்ளது. 

இறுதியாக வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான தரவுகளின் படி, இந்தியாவில் புகையிலையின் பயன்பாடு 8.5% ஆக உள்ளது.

மேலும் மாநிலவாரியாக ஆய்வு செய்ததில், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காணப்படும் புகையிலைப் பயன்பாடு அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக சிக்கிம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் உள்ளன. இமாச்சலப் பிரதேசம், கர்நாடக, கோவா போன்ற மாநிலங்களில் இந்த புகையிலை பழக்கம் மாணவர்களிடையே மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் மாணவர்களிடையே புகையிலைப் பயன்பாடு 4.8% ஆக உள்ளது.

மேலும், இந்தியாவில் 21 சதவீத மாணவர்கள், செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கர்ஸ் ஆக (ஒருவர் சிகரெட் புகைக்கும்போது அருகே இருந்து அந்தப் புகையை சுவாசிப்பவர்) பொது இடங்களில் பாதிக்கப்படுவதாகவும், 11 சதவீத மாணவர்கள் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கர்ஸ் ஆக தனது வீட்டிலேயே பாதிப்பிற்குள்ளாவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் நான்கு சுற்றுகளில் ஆய்வு செய்யப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், 2019 ஆம் ஆண்டில் புகையிலைப்பயன்பாடு மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமாக குறைந்தே காணப்படுகிறது. ஆனால் 2019-க்கு பின்பு இந்த கணக்கெடுப்பு குறித்த தரவுகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை..!

ஆதாரங்கள்: 

World No Tobacco Day: Tobacco farming adding to global food crisis, says WHO

https://www.who.int/india/health-topics/tobacco

https://ntcp.mohfw.gov.in/assets/document/surveys-reports-publications/Global-Adult-Tobacco-Survey-India-2009-2010-Report.pdf

https://ntcp.mohfw.gov.in/assets/document/surveys-reports-publications/Global-Adult-Tobacco-Survey-Second-Round-India-2016-2017.pdf

https://ntcp.mohfw.gov.in/assets/document/National_Fact_Sheet_of_fourth_round_of_Global_Youth_Tobacco_Survey_GYTS-4.pdf

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader