சிலை கண்ணைத் திறந்தால் கண்ணாடி உடையும் எனப் பரவும் பொய்யான வீடியோ !

திரைப்பட ஹீரோக்கள் கரண்டுக்கே ஷாக் கொடுப்பது, துப்பாக்கி தோட்டாவை விட வேகமாக ஓடுவது என அபரிவித சக்திகளைக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கற்சிலையின் கண்களைத் திறந்ததும் எதிரில் உள்ள கண்ணாடி உடையும் அதிசயத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

விருதுநகர் மாவட்டம் நடுவப்பட்டி சத்திரம் என்னும் பகுதியில் கண்ணன் கோயில் உள்ளது. அக்கோயிலில் உள்ள கண்ணன் சிலையின் கண்கள் திறக்கப்பட்டதும் எதிரில் வைத்திருந்த கண்ணாடி உடைந்து சிதறுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. குறிப்பாக ‘Bharat Mail24’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் இச்சம்பவம் குறித்துப் பதிவிட்ட வீடியோ சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 

இந்த வீடியோ ‘அதிசயம்… ஆன்மீக மண் தமிழ்நாட்டின் மர்மங்கள்’ எனக் குறிப்பிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.

வீடியோவில் இருப்பது என்ன ?

இந்து மதக் கடவுளாகக் கருதப்படும் கண்ணன் கற்சிலையின் கண்கள் நீலநிற துணியால் மூடப்பட்டுள்ளது. சிலைக்கு முன்பு முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொண்டு ஒருவர் நிற்கிறார். சிலைக்குப் பின்னால் உள்ளவர் ’கண்ணைத் திறப்பதை மட்டும் பார்க்க வேண்டும்’ எனக் கூறுகிறார். இவர்களைச் சுற்றி சுமார் 10 பேர் உள்ளனர். 

வீடியோ எடுப்பவர் சிலையையும் கண்ணாடியையும் மாற்றி மாற்றிக் காண்பிக்கிறார். சிலையைச் சுற்றி இருப்பவர்கள் ஏதோ மந்திரம் சொல்ல, பிறகு கற்சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணி அவிழ்த்ததும் கண்ணாடி உடைகிறது. தற்போது மீண்டும் உடைந்த கண்ணாடி காண்பிக்கப்படுகிறது. 

உண்மையில் என்ன நடக்கிறது?

ஒரே ஃப்ரேமில் சிலையும் கண்ணாடியும் காட்டப்படவில்லை. சிலை கண்களில் கட்டியுள்ள துணியை அவிழ்க்கும் போது சிலை மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது. அதன் பிறகு கேமராவை திருப்பி கண்ணாடி உடைந்தது காண்பிக்கப்படுகிறது. 

வீடியோவை Slow motion-ல் பார்த்தால் கண்ணில் இருந்து துணி அவிழ்ப்பதற்கு முன்பே கண்ணாடி உடைந்து சிதறி சிலையின் மீது விழுவதைக் காண முடிகிறது. கண்ணாடியைப் பிடித்திருப்பவர்தான் அதனை உடைத்துள்ளார்.

கற்சிலையில் இருந்து எப்படி சக்தி வரும்? அது கண்ணாடியை எப்படி உடைக்கும் என்கிற அடிப்படை கேள்வி வீடியோ பார்த்ததும் எழ வேண்டும். ஒரு வேலை அப்படி சக்தி வெளிப்பட்டிருந்தால் எதிரில் உள்ள நபருக்கு ஏன் எதுவும் ஆகவில்லை என்பது அடுத்த கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இதனைக் கேள்விக்கே உட்படுத்தாமல் ’ஜெய் ஸ்ரீராம்’ என கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.

இப்படி சிலையின் கண்களை திறந்ததும் கண்ணாடி உடைவது போன்று வேறொரு வீடியோவும் யூடியூபில் உள்ளது. அதில் ஒருவர் கண்ணாடியை கையால் அழுத்தி உடைப்பதை காண முடிகிறது. அப்படிதான் இதையும் செய்துள்ளனர்.

கடந்த மாதம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பின் போதும் குழந்தை ராமர் சிலை கண் திறந்ததும் முகத்தில் கண்ணாடி காட்டப்பட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஏனெனில், கருவறையில் புதிதாக திருச்சிலை நிறுவப்பட்ட பிறகு கும்பாபிஷேகம் மற்றும் மந்திரங்களால் சிலையில் இருந்து வெளிப்படும் சக்தி மீண்டும் சிலைக்கே திரும்ப கண் திறந்த உடன் கண்ணாடி காட்டுவதாக நம்பப்படுகிறது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க :  அருப்புக்கோட்டை கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததா ?

இதற்கு முன்பாக, அருப்புக்கோட்டை தட்டாங்குளம் லிங்கேஸ்பரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிலை கண் திறந்த நிலையில் இருப்பதாக தவறான தகவல் பரப்பப்பட்டது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்யும் அதிசய வீடியோ என விளக்கின் வெளிச்சத்தில் மழை தனியாகத் தெரியும் வீடியோவை தவறாகப் பரப்பினர். இலங்கையில் உள்ள தேவாலயத்தில் மாதா சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததாக வதந்தி பரப்பிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது.

மேலும் படிக்க : சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா ?

கோயில் கருவறையில் சிலையை நிறுவும் போது சிலையின் கண்ணை கட்டி திறக்கும் நேரத்தில் கண்ணாடியை காட்டுவதை பல இடங்களில் வழக்கமாகச் செய்து வருகிறார்கள். ஆனால் சிலையின் ’கண்ணைத் திறந்தால் கண்ணாடி உடையும்’ என்பதெல்லாம் பொய் பிரச்சாரம். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader