கோமதிக்கு இடைக்கால தடை |” பி ” மாதிரி சோதனை பயனளிக்குமா ?

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மீதான ஊக்கமருந்து விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோமதி தடகள போட்டியில் பயன்படுத்திய ஷூ ஒரு விவாத பொருளாக மாறியது. தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி இடைக்கால தடையை பெற்றுள்ளார்.

Advertisement

30 வயதான கோமதி மாரிமுத்து ஒட்டப்பந்தயத்தில் 800 மீட்டரை 2:02:70 நேரத்தில் கடந்து தங்கம் வென்றார். சமீபத்தில் போலந்து நாட்டிற்கு பயிற்சிக்கு செல்ல இருந்தார். பெற்ற வெற்றி, அடுத்து மேற்கொள்ள இருந்த பயிற்சி என அனைத்தையும் மாற்றும் விதமாக தற்போது வெளியான ஊக்க மருந்து சோதனை முடிவுகள் அமைந்து விட்டன.

 கோமதி மாரிமுத்து, பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் நான்ட்ரோலோன் என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. பரிசோதனை முடிவுகள் கோமதிக்கு தோல்வியாக இருந்ததால் போலந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து பேட்டி அளித்த கோமதி மாரிமுத்து, ” இந்த குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. என் வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை பயன்படுத்தியது இல்லை ” எனக் கூறி இருந்தார்.

கோமதி பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி என இரு சோதனைகளிலும் தோல்வி அடைந்து உள்ளார். எனினும், இவை ” ஏ ” மாதிரி பிரிவு சோதனை என்றே கூறப்படுகிறது. ” பி ” பிரிவு சோதனையிலும் தோல்வி அடைந்தால் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கூறுகின்றனர்.

” இரு சோதனையிலும் தோல்வி அடைந்த காரணத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. பி மாதிரி சோதனை பற்றிய முடிவை கேட்க அவருக்கு உரிமை உள்ளது. அவ்வாறு கேட்கப்படும் பி மாதிரி சோதனையில் வெற்றி பெற்றால் தடை நீக்கப்படும். மாறாக தோல்வி அடைந்தால் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் ” என இந்திய தடகள சம்மேளத்தின் தலைவர் அடிலி சுமரிவாலா பேட்டியில் கூறி இருந்தார்.

Advertisement

” பி ” மாதிரி சோதனையின் முடிவுகளில் பெரிதாக மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள். போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஊக்க மருந்து பரிசோதனைகள் நடத்தப்படும். கடந்த மார்ச் மாதமே பெடரேஷன் கோப்பை சோதனை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், கோமதி தேசியப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத காரணத்தினால் அப்போட்டியின் போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் முடிவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்(NADA) உடனடியாக வெளியிடவில்லை. இதுவே பிரச்சனைகளுக்கு காரணமாகி உள்ளது. தோஹாவிலும், மார்ச் மாதம் எடுக்கப்பட்ட சோதனையிலும் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்து உள்ளார். மார்ச் மாதம் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் ஆசிய போட்டிக்கு முன்பே வந்து இருந்தால், இத்தகைய பிரச்சனையே எழுந்து இருக்காது.

சோதனை முடிவுகள் கோமதிக்கு எதிராக வந்துள்ளதை பற்றி தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் ஒரு மாதம் காலமாக கூறவில்லை. இது மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. ” பி ” மாதிரி பிரிவு சோதனை முடிவுகள் கோமதிக்கு சாதகமாக வரும் பட்சத்தில் அவர் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து வெளிவருவார். இல்லையேல், விளையாட்டில் 4 ஆண்டுகள் தடையை பெறுவார்.

Gomathi Marimuthu fails dope test twice

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button