This article is from Aug 17, 2020

கூகுள் பே, பிளிப்கார்ட் கஸ்டமர் கேர் நம்பர் என பரவும் போலி எண்கள்.. மக்களே உஷார் !

ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பது போன்று ஆன்லைன் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் பிரச்சனை தொடர்பாக கஸ்டமர் எண்ணிற்கு அழைப்பது வழக்கம். இப்படி, கஸ்டமர் சேவைக்கான எண்களை கூகுளில் தேடும் போது பரவி இருக்கும் போலியான எண்களால் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை மக்கள் பெரும்பாலும் அறியாமல் உள்ளனர்.

கூகுள் பே கஸ்டமர் எண் எனக் கூறி ” 7866844996 ” எனும் தொலைபேசி எண் முகநூல் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டு உள்ளது. அந்த தொலைபேசி எண் ஸ்பேம் என அறிந்து கொள்ள முடிந்தது. அதேபோல், அதே எண் பிளிப்கார்ட் உடைய கஸ்டமர் கேர் எண் என பரப்பப்பட்டு இருக்கிறது. இப்படி அனைத்து ஆன்லைன் நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண் என முறைகேடுகளை செய்து வருகிறார்கள்.

கூகுள், பிளிப்கார்ட் மட்டுமின்றி உபர்,ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்கள் என போலியான எண்கள் பல முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்கள் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தளத்தில் வழங்கப்பட்டு இருக்கும். அதைத் தவிர்த்து, கூகுள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் போலியான எண்களை தொடர்பு கொண்டு பணத்தினை இழக்க வேண்டாம்.

2019-ம் ஆண்டில் சென்னையில் உபர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவி பின்னர் ஆர்டரை கேன்சல் செய்து பணம் திரும்ப வரவில்லை என்பதால் கூகுளில் இருந்த போலியான கஸ்டமர் எண்ணை தொடர்பு கொண்டு 40,000 ரூபாயை இழந்தார். இதுபோல், ஹைதராபாத்தில் சோமாட்டோ செயலி மூலம் ரூ.200க்கு இனிப்பு ஆர்டர் செய்து இருக்கிறார். அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு கூகுள் மூலம் போலியான கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.70,000த்தை இழந்துள்ளார். இணையத்தில் உலாவும் போலியான கஸ்டமர் கேர் எண்களால் பணத்தை இழந்த பல்வேறு சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஆகையால், போலியான கஸ்டமர் கேர் எண்களை நம்பி பணத்தை இழக்காதீர்கள்.

Links : 

Fake customer care centres duping people of thousands

ordered-76-rupees-biryani-lost-40-thousand

Please complete the required fields.




Back to top button
loader