1248 அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

பரவிய செய்தி
தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்பட்டு, நூலகங்களாக மாற்றப்படும். நூலகங்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அங்குள்ள ஆயாக்களே பணியாற்றுவார்கள் – கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.
மதிப்பீடு
சுருக்கம்
அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை, அதற்கு பதிலாக நூலகங்களாக மாற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.
விளக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருவதால் பள்ளிகளை மூடும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாவது உண்டு. இந்நிலையில், மாணவர்கள் குறைவாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்ற அரசு முடிவு செய்து இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.
ஜூலை 17-ம் தேதி சென்னையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இலவச மடிக்கணினிகளை வழங்கி உள்ளார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,
” ஜீரோவில் இருக்கும் அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இந்த அரசுக்கு இல்லை, மூடப்போவதும் இல்லை. அவை நூலமாக செயல்பட்டு கொண்டிருக்கும். 1248 அரசு பள்ளிகளில் ஒன்பதுக்கு கீழே மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆசிரியருக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.50,000. ஒருவருமே இல்லாத பள்ளியில் ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது என்பதை நீங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து நூலகமாக திறந்து வைப்போம்.
கூடுதலாக தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கப்படும் பொழுது அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 1,500 பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் இருக்கின்றன. முதலில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் ஜீரோ எண்ணிக்கை இருக்கின்றதோ அங்கு புத்தகங்களை அனுப்பி வைப்போம். அங்குள்ள பெரியவர்கள், படித்து முடித்தவர்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அவர்களே அரசு பள்ளிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நூலகத்தில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சி ஏதும் தேவையில்லை. புத்தகங்களை எடுத்து வைக்க அங்குள்ள ஆயாக்களே போதும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை.
மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார். #TNGovt #TNEducation
— K.A Sengottaiyan (@KASengottaiyan) July 17, 2019
” பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார் ” என ட்விட்டரில் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
அரசு பள்ளிகளில் தரம் குறைந்து விட்டது எனக் கூறி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் சூழல் எப்பொழுதோ உருவாகி விட்டது. ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருப்பதை அமைச்சரே தெரிவித்து இருக்கிறார்.
சில அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருப்பதால் அங்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என சில சமயம் செய்திகளில் படிப்பதுண்டு. அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வந்தால் மட்டுமே அரசு பள்ளிகள் இப்படி நூலகங்களாக மாறுவதை தடுக்க முடியும்.