அரசுப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை : அமைச்சர் சிவசங்கர் !

நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துத்துறையை சமாளிக்க திமுக தலைமையிலான தமிழக அரசானது போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும், முதல் கட்டமாக சென்னையில் 1,000 பேருந்துகளை இயக்க தனியாரை அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் 25 சதவீத பேருந்து போக்குவரத்து தனியார்மயமாக்கப்படும் என போக்குவரத்து வட்டாரத் தகவல் தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன்பாக தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.
அரசுப் போக்குவரத்தை தனியார்மயமாக்க போவதாக ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து, தமிழக பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியார் மூலம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், முதல்கட்டமாக சென்னையில் 1,000 வழித்தடங்களிலும், மாநிலம் முழுவதும் 25 சதவீத வழித்தடங்களிலும் தனியார் மூலம் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.(1/3) pic.twitter.com/0qJJo0Ka4S
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 12, 2022
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரயில்வே தனியார் மயம் ஆவதை கைவிட வலியுறுத்தப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிடுவது;
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஏழை, எளிய மக்களின் பயணத்துக்கு உதவும் அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பது;
இது தான் திராவிட மாடலா? pic.twitter.com/41fsbbIPqZ
— Puthiya Tamilagam (@PTpartyOfficial) July 12, 2022
மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா?
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் கண்டனம் https://t.co/dm0HqPmsWG@CMOTamilnadu | @mkstalin pic.twitter.com/WvQwf3kubv
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) July 12, 2022
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு தி.மு.க அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 12, 2022
மேலும், அரசுப் பேருந்துகளை தனியாவசம் போக அனுமதிக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக வலைதளவாசிகளும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், அரசுப் பேருந்து இயக்கம் தனியார்வசம் போவதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாரை அனுமதிக்கும் எந்த திட்டமும் இல்லை. அரசுப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசுக்கு இருக்கும் நற்பெயரை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் ” எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க : மே 18 முதல் உயரும் பேருந்து கட்டண விவரங்கள் எனப் பரவும் செய்தி உண்மையா ?
இதற்கு முன்பாக, கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், புதிய பேருந்து கட்டணத்தின் விலைப்பட்டியல் என பழைய விலைப்பட்டியல் ஒன்றை வதந்தியாகப் பரப்பி இருந்தனர். அப்போதும், அது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.