காப்பீட்டு திட்டத்தில் கருணாநிதி படம் எதற்கு, கொதிக்கும் பாஜக.. இதற்கு முன் ஜெ படம் இருந்தது !

தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட இணையதளத்தில் இடம்பெற்ற பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளதாகவும், பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என்றும், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் பங்களிப்பு மறைக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பாஜகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4 வருடங்களில், 54.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கியதற்கு மத்திய @narendramodi அவர்கள் அரசு 1106.56 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக பயன்பெற்ற மாநிலம் நம்முடைய தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது!
— K.Annamalai (@annamalai_k) December 26, 2021
மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டரில், ” ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4 வருடங்களில், 54.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கியதற்கு மத்திய @narendramodi அவர்கள் அரசு 1106.56 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பயன்பெற்ற மாநிலம் நம்முடைய தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது!. ஆனால், அங்கீகாரமோ அல்லது பிரதமரின் புகைப்படமோ இல்லை ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
#கட்டுமரம் எப்படி பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில்?🙄
அப்போது தேர்தல் அறிக்கையில் கொடுத்த எல்லாம் பிரதமரின் திட்டமா @mkstalin? pic.twitter.com/Eqgtrc9Ca4
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) December 26, 2021
இதேபோல், தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சிடிஆர்.நிர்மல்குமார், “பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் கருணாநிதி புகைப்படம் எதற்கு ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
2018-ல் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவக் காப்பீடுத் திட்டத்திற்கு முன்பாகவே பல்வேறு மாநிலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்தி வந்தன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது 2009 ஜூலை 23-ம் தேதி முதல் கலைஞர் காப்பீடுத் திட்டம் என்ற பெயரில் 51 நோய்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, 2011-ல் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் என்ற பெயரில் புதிய திட்டமாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்தி இருந்தார். இதன் கீழ் தமிழகத்தில் 1.57 கோடி குடும்பங்கள் பயன் பெறுவதாக கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் அமலில் இருந்தது. அந்த திட்டத்துடன் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவக் காப்பீடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இணைக்கப்பட்டது. இந்த திட்டத்துடன் மருத்துவமனைகள், மாநில அரசுகள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
