This article is from Apr 26, 2018

டாஸ்மாக்கை மூட வேண்டுமா கிராம சபைக்கு போங்க !

சமீபத்தில் கமல்ஹாசன் கூட இதைப் பற்றி பேசினாரே, கிராம சபை அப்படினா என்ன?

இந்திய அரசியலமைப்பின் 73 வது திருத்தச் சட்டத்தின்படி மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னாள் 24.04.1993 ல் பாராளுமன்றத்தில் நாட்டின் உள்ளாட்சிக்கு அதிகாரம் வழங்க “கிராம சபை” வித்திட்ட நாள்.

அதாவது கிராமம் தம்மை தாமே சுயமாக ஆளுவதற்கு, தங்கள் கிராம வரவு/செலவுகளை நிர்ணயிக்க, தங்களுக்கு தேவையான ஊரகச் சாலைகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், தமது கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குதலுக்கான ஏற்பாடு செய்தல், தங்கள் கிராமத்தில் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொள்ளும் வண்ணம் கிராம மக்கள் கூடி திட்டமிட்டு செயல்படுவதற்கான தளம் தான் “கிராம சபை” .

எங்கெல்லாம் இருக்கு?

31 மாவட்டங்களில் (சென்னை மாநகரம் தவிர்த்து) 79,394 குக்கிராமங்கள் உள்ளடக்கிய 12,524 கிராமங்களில் உள்ளாட்சிகள் இருக்கு.

இணைப்பு : https://www.tnrd.gov.in/databases/tn_village_details_tamil.pdf

அது எப்போ யாரால்? எப்போதெல்லாம் கூட்டப்படும்?

பொதுவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் கிராம சபைக் கூட்டத்தை குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு நாட்களில் கட்டாயம் கூட்டுவார். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருக்கலாம்.

கிராம சபைக் கூட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் அதாவது மொத்த வாக்காளர்களில் 10% பேர் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.

தமிழ்நாட்டில் தான் உள்ளாட்சி தேர்தல் 18 மாதமாக நடத்தவே இல்லையே, இது போன்ற சமயங்களில் ஊராட்சி ஆய்வாளர்(மாவட்ட ஆட்சியர்) ஒவ்வொரு ஊராட்சியிலும் “கிராம சபை” நடத்த ஏற்பாடுகளை செய்யவேண்டும், அதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்

கிராம சபையில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் தரப்படவேண்டும்.    

மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?

முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை

கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்? எத்தனை நாள் செல்லுபடியாகும்?

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விவாதித்து மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கும்

கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதுமா?

போதாது..! கிராம இளைஞர்கள் முயற்சி எடுத்து அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உள்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த அழுத்தம் தரப்படவேண்டும். பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள்

கிராம சபையின் தீர்மானத்தால் பலன் கிடைக்குமா? கிராம சபையில் எது போன்ற தீர்மானங்கள் கொண்டுவரலாம்?

நிச்சசயம் கிடைக்கும். கிராமத்தில் வாழ்வாதார பிரச்சனை அனைத்திற்கும் கிராம சபையில் தீர்மானமாக நிறைவேற்றலாம்.

சில எடுத்துக்காட்டுகள்:

1) கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 2017 ல் உத்தரவிட்டது .

2) திருவள்ளூர், குத்தம்பாக்கத்தில் கிராம சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அங்கு குப்பைகளை கொட்ட சென்னை உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு தடைவிதித்தது .

3) விதி 110 கீழ் சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வழிவகை செய்வது கிராம சபை தீர்மானம் .

4) 2017-ல் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பெருமாநாடு கிராம பஞ்சாயத்தில் “டாஸ்மாக்” எதிரான தீர்மானத்தால் அங்கு டாஸ்மாக் பூட்டப்பட்டது. இதேபோன்று 20க்கும் மேலான கிராம பஞ்சாயத்தில் கடந்த ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இதுபோன்ற நிறைய உதாரணங்களால் சில கிராமங்கள் தன்னிறைவு பெற்றுள்ளது. நீங்கள் செயல்பட்டால் உங்கள் கிராமமும் முன்னுதாரணம் ஆகும்.

இந்திய அரசியலமைப்பின் 73 வது சட்ட திருத்தம் பற்றி அறிய அரசின் வலைத்தளம் :

 http://www.panchayatgyan.gov.in/home   &  https://www.tnrd.gov.in/index.html

கிராம ஊராட்சி தேர்தலில் போட்டியிட என்ன செய்ய வேண்டும்?

மக்கள் பங்குபெற வேண்டும் என்பதால் தான் கிராம சபைக்கான தேர்தல் கட்சிகளோ, அதற்குரிய சின்னங்களோ இல்லாமல் தேர்தல் நடத்தப்படுகிறது. அதனால் ஊராட்சியில் வாக்குரிமை உள்ள யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

கிராம சபை மூலம் கிராமத்தை வளர்ச்சி பெற செய்ய எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?

ஐந்தாண்டுக்கு ஒருமுறை வளர்ச்சி திட்டங்கள் மக்கள் தொகைக்கேற்ப சுமார் 17 லட்சம் முதல் 20 லட்சம் ஒதுக்கப்படுகிறது. நான்கு கிராமங்கள் கொண்ட பெரிய பஞ்சாயத்திற்கு 30 லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, ஊரக வளர்ச்சித் துறை தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் வெறும் 50,162 கோடியாக இருந்த ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 2017-18ம் ஆண்டில் 1,09,042,45 கோடியாக உயர்த்தப்பட்டது (இந்தியாவின் மொத்த கிராம பஞ்சாயத்துகள்: 2 லட்சத்து 39 ஆயிரத்து 165). ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் சுமார் 4000 கோடி கொடுக்கப்படவில்லை.

நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்போதுதான் உள்ளாட்சி பற்றி கேட்க ஆரப்பிச்சிருக்கீங்க போக போக உங்களுக்கே புரியும்.

இந்த கிராம சபைக்கு நீங்க போகலைன்னா யார் யாரோ போவாங்க, ஏதேதோ கணக்கு எழுதுவாங்க அப்புறம் மொத்தமா அடிச்சிட்டு போயிடுவாங்க..

போதும் போதும் இங்க கேள்வி கேட்டது, மறந்துடாமல் வருகிற மே – 01, 2018 உங்க கிராம பஞ்சாயத்தில், கிராம சபையில் கேள்வி கேட்டுட்டு வாங்க, புரியலையா மேலும் கேள்விகள் இருக்குன்னா “You Turn” உள் டப்பிக்கு வாங்க..

R.K , தோழன் அமைப்பு . 9941142188

Please complete the required fields.




Back to top button
loader