‘ தமாசா ‘ இந்த பெயரில் கடன், வங்கிகளுக்கு ரூ.148 கோடி காலி !

இந்தியாவில் அடுத்த வாராக் கடனால் நிறுவனத்தின் சொத்தை ஏலம் விடும் வங்கி. கிரேட் இந்தியன் நௌதங்கி எனும் நிறுவனம் ஐடிபிஐ , எச்.டி.எஃப்.சி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.148 கோடி கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால் அதற்கு உத்தரவாதமாக அளிக்கப்பட்ட கிரேட் இந்தியன் தமாசா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை ஏலம் விடுவதாக வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐடிபிஐ வங்கியில் ரூ.86.48 கோடியும், எச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ6.26 கோடியும் மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ49.23 கோடியும் கிரேட் இந்தியன் நௌதங்கி நிறுவனம் கடன் பெற்றுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் உத்தரவாத அளித்த கிரேட் இந்தியன் தமாசா நிறுவனத்தின் நிலத்தை ஏலம் விடுகிறது.

ஐடிபிஐ வெளியிட்ட ஏல அறிவிப்பின்படி, ” 2022 மே 1 வரையில் உள்ள நிலுவை தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.92.69 கடனிற்காக கர்நாடகாவின் குடகு மாவட்டம் பேரூர் கிராமத்தில் ரூ11.53 கோடி மதிப்புள்ள 107.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிரேட் இந்தியன் தமாசா நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் ஜூலை 27-ம் தேதி அன்று இணையம் வழியாக ஏலம் விடப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த கிரேட் இந்தியன் நௌதங்கி & தமாசா ?

2007-ம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்யப்பட்ட கிரேட் இந்தியன் நௌதங்கி நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கலாச்சாரம் மற்றும் கலை நிகழ்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நௌதங்கி என்பது வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற நாடக அரங்கு நிகழ்ச்சி வடிவங்களில் ஒன்றாகும்.

இந்நிறுவனத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று டெல்லி அருகே குர்கானில் உள்ள கனவுகளின் இராஜ்ஜியம்(Kingdom of dreams)எனும் சுற்றுலா தளம். அதுமட்டுமின்றி, நௌதங்கி மஹால் மற்றும் கலாச்சார கல்வி உள்ளிட்டவையும் அடங்கும். 2008 ஜனவரியில் நிறுவப்பட்ட கிரேட் இந்தியன் தமாசா நிறுவனமானது ரூ.2 கோடி மதிப்பில் பங்கு மூலதனத்துடன் அரசு சாரா நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் உத்தரவாததாரர்கள் மற்றும் இயக்குநர்களாக அனுமோத் சர்மா, டாக்டர் அணு அப்பையா, விராப் சர்காரி மற்றும் சஞ்சய் சவுத்ரி, எஸ்ஜி இன்வெஸ்ட்மென்ட்ஸ், கிரேட் இந்தியன் தமாசா நிறுவனம் மற்றும் விஸ்கிராஃப்ட் இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.

2011-ம் ஆண்டில் கிரேட் இந்தியன் நௌதங்கி நிறுவனம் 20% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் எதிர்கால விரிவாக்கதிற்காக ரூ.200 கோடியை திரட்ட நினைத்தது. 2013-ல் விஸ்கிராஃப்ட் இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான அப்ரா குரூப் உடன் இணைந்து மும்பையில் 500 கோடி மதிப்பில் இரண்டாவது நேரடி பொழுதுபோக்கு மையத்தை( கனவுகளின் இராஜ்ஜியம்) அமைக்க திட்டங்களை உறுதி செய்தது.

” 2014-ல் இந்நிறுவனத்தால் இயக்கப்படும் குர்கானில் உள்ள கனவுகளின் இராஜ்ஜியம் (Kingdom of dreams) நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. 2010-ல் தொடங்கப்பட்ட கனவுகளின் ராஜ்ஜியம் ஆடிடோரியம் வளாகம் தொடர்ந்து செயல்பட இந்திய சுற்றுலா அமைச்சகத்திடம் நிறுவனம் நிதி உதவி கோரியது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுலா அமைச்சகத்திடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய்க்கு அந்நிய செலாவணி நிதிக்கு விண்ணப்பித்து இருந்தோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுமோத் சர்மா தெரிவித்ததாக ” இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” ஹரேந்திர திங்கரா என்பவர் பெற்ற ஆர்.டி.ஐ தகவலில், கனவுகளின் இராஜ்ஜியம்(Kingdom of dreams) சுற்றுலா மையத்தை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வாடகைக்கு ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் நிறுவனம் பெற்றது. ஆனால், தற்போது வரை ஒரு ரூபாய் அந்நிறுவனம் கூட செலுத்தவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான தொகை ரூ42 கோடியாகும். இதைவிட மோசமாக அந்த நிலத்தின் பேரில் இந்நிறுவனம் ஐடிபிஐ மற்றும் பிற வங்கிகளில் இருந்து ரூ.150 கோடி வரை கடன் பெற்றுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார் ” என ” 2017-ல் மனிலைஃப் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

கிரேட் இந்தியன் நௌதங்கி நிறுவனத்தால் இயக்கப்படும் கனவுகளின் இராஜ்ஜியம் மையம் அமைந்துள்ள நிலம் சார்ந்த சிக்கல் இருந்துள்ளது. மேலும், அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் இருந்து வருவதால்  ஐடிபிஐ , எச்.டி.எஃப்.சி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.148 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாமல் உத்தரவாதமாக அளித்த  கிரேட் இந்தியன் தமாசா நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் ஏலம் விடப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் பெறும் கோடிக்கணக்கான ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் வாராக் கடனாக மாறுவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அந்த கடன்களுக்காக சிறிதளவிலான தொகை மட்டுமே வங்கிகளால் ஏலம் விடப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே தாராளமாக கடன்களை வழங்குகின்றன என்றும், சாதாரண மக்களுக்கு மட்டும் கடன் வழங்க வங்கிகள் பல கெடுபிடிகளை கடைப்பிடிப்பதாக கேள்விகள் எழுந்து வருகிறது.

Links : 

IDBI Bank puts properties of Great India Tamasha Company on sale

To recover Rs 148-cr bad loans, banks to auction Great Indian Tamasha Co assets

kingdom-of-dreams-operator-to-sell-20-stake-raise-rs-200-crore

Wizcraft, Apra plan Kingdom of Dreams 2

gurgaon-s-kingdom-of-dreams-faces-funds-crunch-uncertain-future

https://www.mca.gov.in/Ministry/pdf/llpreg_2008.pdf

gurugrams-kingdom-of-dreams-gets-a-rti-nightmare

Please complete the required fields.




Back to top button
loader