கேலோ இந்தியா திட்டத்தில் அதிக நிதி.. ஆசிய விளையாட்டில் பதக்கம் வாங்காத குஜராத்.. சர்ச்சையும், பின்னணியும் !

சிய விளையாட்டு போட்டி என்பது ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசியா கண்டத்தை மட்டும் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்வு. இதன் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்றன. இந்த விளையாட்டு போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியா இந்த போட்டிக்கு 26 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் இருந்து 655 தடகள வீரர்களை அனுப்பியது. இதன் மூலம் அதிக விளையாட்டு வீரர்களை அனுப்பிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹரியானாவிலிருந்து 89 வீரர்களும், மகாராஷ்டிராவிலிருந்து 73 விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர். மேலும் பதக்கப்பட்டியலில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023ல் முடிவுற்ற பிறகு, பலரும் சமூக ஊடகங்களில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்தின் நிதியுடன், விளையாட்டு வீரர்கள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை மாநிலவாரியாக ஒப்பிட்டு பார்த்து பதிவிட்டு வருகின்றனர்.  அந்த பதிவுகளில் “தமிழ்நாடு மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் குறைந்த நிதியைப் பெற்றாலும் அதிக பதக்கங்களுடன் உள்ளனர். ஆனால் குஜராத் அதிகபட்சமாக ரூ 608 கோடி நிதியைப் பெற்றும் ஒரு பதக்கம் கூட வாங்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கேலோ இந்தியா திட்டம்’ – விளக்கம்:

ராஜீவ் காந்தி கேல் அபியான் (RGKA), நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டம் (USIS) மற்றும் தேசிய விளையாட்டு திறமை தேடல் திட்டம் (NSTSS) ஆகிய மூன்று திட்டங்களும் கடந்த 2016ல் ‘கேலோ இந்தியா‘ என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 2017-இன் போது தொடங்கப்பட்டது.

இந்த கேலோ இந்தியா திட்டம் வெகுஜன மக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும், வீரர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு 12 பிரிவுகளாகப் (12 Verticals) பிரிக்கப்பட்டுள்ளது.

    • மாநில அளவிலான கேலோ இந்தியா மையங்கள்
    • ஆண்டு விளையாட்டுப் போட்டி
    • திறமை தேடல் மற்றும் மேம்பாடு
    • விளையாட்டுகளின் பயன்பாடு மற்றும் உருவாக்கம்/மேம்படுத்துதல்
    • தேசிய/ பிராந்திய/மாநில விளையாட்டுக் கல்வியாளர்களுக்கான ஆதரவு
    • பள்ளி மாணவர்களின் உடல் தகுதி
    • பெண்களுக்கான விளையாட்டு
    • மாற்றுத்திறனாளிகள் மத்தியில் விளையாட்டை ஊக்குவித்தல்
    • அமைதி மற்றும் வளர்ச்சிக்கான விளையாட்டு
    • கிராமப்புற மற்றும் பழங்குடியின விளையாட்டுகளை ஊக்குவித்தல்

இந்த 12 பிரிவுகளும் பின்வரும் 5 பிரிவுகளாக சுருக்கப்பட்டுள்ளன.

    • விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
    • விளையாட்டு போட்டிகள் மற்றும் திறமை மேம்பாடு
    • கேலோ இந்தியா மையங்கள் மற்றும் விளையாட்டு அகாடமிகள்
    • ஃபிட் இந்தியா இயக்கம்
    • விளையாட்டு மூலம் உள்ளடங்கியுள்ள திறமைகளை ஊக்குவித்தல்

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு நிலைகளில் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக திறமையான வீரர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தின் மூலம் 20,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3,000 விளையாட்டு வீரர்கள் ‘Khelo India Atletes (KIAs)‘ என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் தற்போது கேலோ இந்தியா அகாடமிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு மாதம் ₹10,000 உதவித்தொகை, பயிற்சி, உபகரணங்கள், உணவு மற்றும் கல்வி ஆகியவற்றிற்காக வழங்கப்படுகிறது. 

மேலும் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பழங்குடியின விளையாட்டுகளான மல்லர்கம்பம், களரி என்று சொல்லப்படுகின்ற களரிபயட்டு, கட்கா, தங்-டா, யோகாசனம் மற்றும் சிலம்பம் ஆகியவை அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கேலோ இந்தியா இயக்கத்தின் கீழ் ஆண்டுதோறும் மூன்று தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவை இளைஞர்களுக்கான விளையாட்டுபோட்டிகள் (Khelo India Youth Games), பல்கலைக்கழகங்களுக்கான விளையாட்டு போட்டிகள் (Khelo India University Games), மற்றும் குளிர்கால விளையாட்டு போட்டிகள் (Khelo India Winter Games).

Khelo India Youth Games 2023 என்ற விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் முறையே 161, 128 மற்றும் 96 பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 52 பதக்கங்களுடன் 8-வது இடத்திலும், குஜராத் 20 பதக்கங்களுடன் 15-வது இடத்திலும் உள்ளன.

Khelo India University Games 2023 என்ற விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் பஞ்சாப் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவின் ஜெயின் பல்கலைக்கழகம் முறையே 69, 68 மற்றும் 32 பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

Khelo India Winter Games 2023 என்ற விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் முறையே 76, 27 மற்றும் 31 பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில்  உள்ளன. ஹரியானா 31 பதக்கங்களையும், தமிழ்நாடு 14 பதக்கங்களையும், குஜராத் 6 பதக்கங்களையும் பெற்றுள்ளது.

கேலோ இந்தியா திட்ட நிதியுதவிகள்:

இது ஒன்றிய அரசின் திட்டம் என்பதால், இதற்கான நிதி 100%-ம் ஒன்றிய அரசாலேயே வழங்கப்படுகிறது. இதற்காக மாநில வாரியாக பட்ஜெட் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படாமல், நம்பகத்தன்மையின் அடிப்படையில் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்கான நிதி, திட்ட வாரியாகவும் வழங்கப்படுகிறது.

கேலோ இந்தியா திட்டமானது மொத்தமாக ரூ.2716 கோடிக்கு அனுமதி வாங்கியுள்ளது. இதில் 2016-17 முதல் 2022-23 வரையிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக (சுமார் 293 திட்டங்களுக்காக) மார்ச் 2023 வரை ரூ.1512.89 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.33 கோடியில் இருந்து 9 திட்டங்களுக்கு இதுவரை ரூ.13 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று ஹரியானாவுக்கும் அனுமதிக்கப்பட்ட ரூ.82.33 கோடியில் இருந்து 5 திட்டங்களுக்காக மொத்தம் ரூ.61.86 கோடி வரை தற்போது வழங்கப்பட்டு உள்ளது. 

கேலோ இந்தியா திட்டத்தில் குஜராத் மாநிலத்திற்கு தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.606.37 கோடியில் இருந்து 5 திட்டங்களுக்காக இதுவரை ரூ 305.38 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் ரூ 583.99 கோடி ஒரு திட்டத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள நாரன்புராவில் விளையாட்டு வளாகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டதாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒலிம்பிக் அளவிலான விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட உள்ளது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பிப்ரவரி 2021-இல் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாரன்புராவில் உள்ள விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அளவிலான தடகளப் பாதை, சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கான ஒரு மைதானம் உட்பட எட்டு டென்னிஸ் மைதானங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இரண்டு நீச்சல் குளங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பிப்ரவரி 2021-இல் மொட்டேராவில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்கிளேவ் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “சர்தார் படேல் விளையாட்டு மைதானம், கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் நாரன்புராவில் உள்ள விளையாட்டு வளாகம் ஆகியவை அகமதாபாத்தில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகள் இந்தியா சார்பாக நடத்தப்படுவதற்கு உதவியாக இருக்கும்.” என்று பேசியுள்ளார். இதன் மூலம் குஜராத்தில் ரூ 583.99 கோடியில் கட்டப்படவுள்ள விளையாட்டு வளாகம் 2036 ஒலிம்பிக் போட்டிகளை முன்னிறுத்தி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள்:

https://thebridge.in/asian-games/state-wise-list-of-indian-medallists-44361

https://olympics.com/en/news/khelo-india-youth-games-2022-medal-table-winners-tally

https://olympics.com/en/news/asian-games-2023-overall-medal-table-complete-list

https://olympics.com/en/news/khelo-india-winter-games-2023-medal-table-winners-tally

https://olympics.com/en/news/khelo-india-university-games-2022-medals-tally-kiug-winners-list

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1845122

https://kheloindia.gov.in/about.html

https://yas.nic.in/sites/default/files/Khelo%20India%20Scheme%20Dated%2022.04.2016.pdf

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/KI.pdfhttps://data.gov.in/catalog/khelo-india-scheme

https://olympics.com/en/news/khelo-india-games-youth-university-school-history-winners

https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1593393

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader