பாக், சீனாவின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறதா குஜராத் அரசு.. அவை இந்தியாவிற்கு சொந்தமில்லையா ?

ஒன்றிய அரசு 10,000 கோடி செலவில் நாட்டில் உள்ள 3 ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மாற்றி அமைக்க உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் ரயில் நிலையமும் ஒன்று. இதுகுறித்து, குஜராத் முதலமைச்சர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திட்டக்காட்சி காணொளி (Project Graphic Video) ஒன்றை பதிவிட்டது.

அந்த ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் இந்தியாவின் வரைபடம் காண்பிக்கப்பட்ட போது,  இந்திய எல்லையைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(PoK) மற்றும் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர்(Aksai Chin) எனப் பிரித்துக்காட்டியுள்ளது. இந்தப் பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

Archive Link

இந்திய வரைபடத்துக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள வரைபடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(PoK) பாகிஸ்தானுக்கு சொந்தம் என்றோ அல்லது அக்சய் சின்(Aksai chin) சீனாவிற்கு சொந்தம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை.

Official Map

இங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சய் சின் ஆகியவற்றின் வரலாறு மிக நீண்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK):

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மன்னராட்சியில் இருந்த பிராந்தியங்களுக்கு 3 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்தியா உடன் சேருவது, பாகிஸ்தான் உடன் சேருவது அல்லது தன்னிச்சையாக  இருப்பது. இதில் காஷ்மீர் தன்னிச்சையாக இருப்பதாக முடிவு செய்தது. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் 97% மற்றும் 3% சிறுபான்மையினர் வாழ்ந்து வந்தனர். 1947ல் பாகிஸ்தான் பயங்கரவாத ஊடுருவல் காரணமாக அன்றைய ஜம்மு காஷ்மீர் அரசர் மகாராஜா ஹரி சிங்க் இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்.

அந்தச் சமயத்தில் இந்திய அரசு காஷ்மீரிடம் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்ததில்(Instrument of Accession) கையெழுத்து வாங்கி அதற்கு உதவி செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, வெளியுறவு விவகாரத்தில் மட்டும் இந்திய பாராளுமன்றம் முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்பிறகு இந்தியா பாகிஸ்தான் போர் 1947-48ல் நடைப்பெற்றது. இந்தப் போரின் பிறகு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கட்டுக்குள் இருந்த வடமேற்கு பகுதிகளைப் பாகிஸ்தான் தனது எல்லையாக அறிவித்தது. இந்த எல்லையை Line of Control என்று அழைப்பார்கள்.

ஆனால், இந்த எல்லையை இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. இவை இந்தியாவின் எல்லை என்றேக் கருதப்படுகிறது.

அக்சய் சின் (Aksai chin):

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை 1947 முன்பு இருந்தே நடந்து கொண்டு இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ஆட்சியில் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்க இரண்டு எல்லைகளை வரையறுத்தது. 1865ல் முன்மொழியப்பட்ட Johnson’s Line அக்சய் சின் இந்திய எல்லையான லடாக்கிற்குச் சொந்தம் எனச் சொல்லப்பட்டது. 1893ல் முன்மொழியப்பட்ட McDonald’s line-ல் அக்சய் சின் சீனா எல்லைக்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதில் இந்தியா Johnson’s line தான் உண்மையான எல்லை எனவும், சீனா McDonald’s line தான் உண்மையான எல்லை என்ற நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. இருப்பினும் 1947க்கு முன்பு இருந்தே அக்சய் சின் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.

அக்சய் சின் எனும் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 5000 மீட்டர் உயரத்தில், இந்திய சீன எல்லைக்குட்பட்டு இருக்கும்  ஒரு உப்புப் பாலைவனம்.

1950-களில் திபெத்(Tibet) மற்றும் சின்சியாங்(Xinxiang) இடங்களை இணைக்கப் பாதுகாப்பு சாலை ஒன்று சீனாவால் கட்டப்பட்டது. இதற்கு இந்தியா வலுவான எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்(Tawang) என்ற பகுதியை சீனா  தன்னுடையதாக கருதுகிறது. ஆனால் சிம்லா ஒப்பந்தத்தின்படி அந்தப் பகுதி இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு சொந்தமானதாகும். இந்த எல்லை McMohan line என அழைக்கப்படுகிறது. இதனை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை

இதுபோன்ற எல்லை பிரச்சனைகளே 1962 இந்தியா சீனா போர் வருவதற்கான காரணம். போரின் முடிவில் சீனா இந்தியாவின் எல்லையில் 38,000 சதுர கிமீ இடங்களைத் தக்க வைத்துக்கொண்டது.

ஜம்மு காஷ்மீரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த எல்லை தற்பொழுது Line of Actual Control என அழைக்கப்படுகிறது. எல்லையின் கிழக்கு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனா இதனை Xinjiang மாகாணத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் இவை இந்தியாவிற்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சய் சின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின்  எல்லையாகவே தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தில் இந்தியா அறிவித்திருக்கிறது.

சமீபத்தில், ஸ்ரீநகரில் உள்ள ஏரிப் பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எனக் குறிப்பிட்டதற்காக தி இந்து நாளிதழ் சீனாவின் குரலாக இருப்பதாகவும், அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மொத்தமும், அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதியும் இந்தியாவிற்குச் சொந்தம் என்ற நிலைப்பாட்டிற்கு மாறாக பாஜக ஆளும் குஜராத் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட காணொளியில் இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை நீக்கி காண்பித்து இருப்பது எதிர்ப்பையும், சர்ச்சையையும் சந்தித்து வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader