குஜராத் வந்த பிரிட்டன் பிரதமர்.. வெள்ளை துணியால் மறைக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் !

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு முறைப் பயணமாக இந்திய வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 4 கி.மீ தூரத்திற்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அகமதாபாத் நகருக்கு சென்ற போரிஸ் ஜான்சன் முதலில் காந்தி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு ராட்டையில் நூல் நூற்று, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
நரேந்திர மோடி பிரதமராகிய பிறகு இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பெரும்பாலும் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அப்படி அழைத்து செல்லப்படும் மற்ற நாட்டுத் தலைவர்களின் கண்ணில் இருந்து குடிசைப் பகுதிகளை மறைக்கும்படி செய்வது வழக்கமாக ஒன்றாக மாறி விட்டது.
Ahead of the visit if @BorisJohnson, the slum near #SabarmatiAshram in #Ahmedabad gets covered with white cloth on Thursday morning. pic.twitter.com/NoSlR0PROK
— DP (@dpbhattaET) April 21, 2022
” பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகைக்காக அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமம் அருகே உள்ள குடிசை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி வெள்ளை துணியால் மறைக்கப்பட்டு உள்ளதாக ” குஜராத் அரசியல் பற்றி எழுதக்கூடிய எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையாளர் டிபி பட்டாச்சார்யா ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
வெள்ளை துணியால் மறைக்கப்பட்ட பகுதிகளில் பிரிட்டன் பிரதமரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டு இருக்கிறார்.
இதேபோல், 2020 பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வந்த போது, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.