This article is from May 16, 2021

பாரிசாலன் காட்டிய ஆய்வு கட்டுரையை முழுமையாக படித்தாரா? மருத்துவர் விளக்கம்!

“மாஸ்க் போடாதீர்கள்” , “மூக்கின் அருகில் காற்றாடி(ஃபேன்) வைத்தாலே ஆக்சிஜன் அளவு அதிகரித்து விடும்” என ஹீலர் பாஸ்கர் பேசிய வீடியோவில் ஆரம்பித்த இந்த விவகாரம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஹீலர் பாஸ்கர் மாஸ்க் குறித்தும், மூக்கின் அருகே காற்றாடி(ஃபேன்) வைப்பது குறித்தும் பேசியே வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதீத கவனத்தை ஈர்க்கவே, இந்த புரளியை தெரியப்படுத்தும் பொருட்டு (ICMR) நோய்கள் பரவல் மற்றும் தடுப்பு (epidemiology) விஞ்ஞானி திரு.கணேஷ் குமாருடன் யூடர்ன் ஒரு நேர்க்காணலை நடத்தியது.

அதில், அவர் ஹீலர் பாஸ்கரின் கூற்றை பற்றி எழுப்பப்பட்ட கேள்வியில், மூக்கின் அருகில் காற்றாடியை வைத்தால் அது ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்குமே தவிர ஆக்சிஜன் அளவை அதிகரிக்காது என தெளிவாக பதிலளித்தார். இந்த நேர்காணலின் அடிப்படையில் ஒரு விரிவான செய்தி கட்டுரையை ஏற்கனவே யூடர்ன் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், “மூக்கின் அருகில் காற்றாடி(ஃபேன்) வைத்தாலே ஆக்சிஜன் அளவு அதிகரித்து விடும்” எனும் ஹீலர் பாஸ்கர் தெரிவித்த கூற்றை மீண்டும் பாரி சாலன் என்பவர் உறுதிப்படுத்தும்படி ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அந்த வீடியோவும் வைரலாகவே மீண்டும் அதை பற்றிய செய்தியை பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

அந்த வீடியோவில் பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் (NCIB)-ல் 2010 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட ஒரு மருத்துவ சோதனை அறிக்கையின் முடிவுகளை மேற்கோள் காட்டி ஹீலர் பாஸ்கரின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக பேசியுள்ளார்.

அந்த மருத்துவ சோதனை குறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறிய பதில்கள் பின்வருமாறு, “அந்த ஆய்வு நீண்ட காலமாக மூச்சு திணறல் உடைய (ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்று) 50 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும் ”

அந்த ஆய்வில் அவர்கள் மூச்சுத் திணறலை உணரும்போது காற்றாடியைப்(ஃபேன்) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பின்னர் அவர்களின் மூச்சு திணறலில் இருந்து முன்னேற்றத்தைக்(( visual analogue scale) கண்டறிந்து உள்ளார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அந்த ஆய்வில் அவர்களின் மூச்சு திணறலில் முன்னேற்றத்தைக் கண்டறிந்துள்ளார்களே தவிர ஆக்சிஜன் அளவுகளில் இல்லை.

இது போன்ற ஆய்வுகள் 1987 முதலே நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கூட நிலையான நாள்பட்ட மூச்சுத் திணறல் கொண்ட நோயாளிகளுக்கு கையடக்க காற்றாடியைப் பயன்படுத்த ஆலோசனை வழங்குகிறது. காற்றாடி பயன்படுத்துவதன் மூலம் இரத்த ஆக்சிஜன் அளவு (SaO2) அதிகரிக்கப்படுவதற்கான சான்றுகள் ஏதும் கிட்டப்படவில்லை என அந்த ஆய்வறிக்கையிலேயே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இங்கு நாம் தெளிவுப்படுத்த வேண்டியவை :

1.1987-ம் ஆண்டு முதல் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய நுட்பம் தான் இந்த காற்றாடி முறை. இப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.

2. ஹீலர் பாஸ்கர் ஒரு இயற்கை மருத்துவ ஆலோசகராக இருக்கும் போதிலும், ஒரு நவீன மருத்துவத்தை அறிவுறுத்துவது, அதுவும் அவரை பின்தொடர்வோர் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் பேசுவது மிகவும் அதிசயமாக உள்ளது.

3. இந்த நுட்பங்கள் அனைத்தும் நாள்பட்ட நிலையான மூச்சுத் திணறலுக்கான வழிமுறையே அன்றி கொரோனாவிற்கான வழிமுறை அல்ல. (கொரோனா காரணமாக கடுமையான சுவாசப் பிரச்சனைகள் இருந்த போதிலும் இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படவில்லை)

4. வசதியாக சுவாசித்தல்(Breathing comfort) என்பது வேறு, ஆக்சிஜன் அளவு அதிகரிப்பது என்பது வேறு.

5. காற்றாடிகள் காற்றின் ஓட்டத்தை காம்போர்ட் நிலையில் வைத்திருக்குமே தவிர ஆக்சிஜன் அளவை அதிகரிக்காது.

6. எனவே தயவு செய்து அரசாங்க வழிகாட்டுதல்களையும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பின்பற்றி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என டாக்டர் பிரவீன் விரிவாகத் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்கமாஸ்க் அணியாமல் இருந்தால், மூக்கின் அருகே ஃபேன் வைத்தால் ஆக்சிஜன் அதிகரிக்குமா ?

மேற்காணும் கட்டுரையை நாம் வெளியிட்ட போதே, கையடக்க ஃபேன்(காற்றாடி) தொடர்பான வேறு சில ஆய்வுக் கட்டுரைகளையும் நமக்கு கமெண்ட் செய்து விளக்கி கூறுமாறு கேட்டு இருந்தனர்.

ersjournals-ல் வெளியான ஆய்வில், ” 3 வெல்வேறு சோதனைகள்(BIS, CHAFF, FAB சோதனைகள்) பற்றி அவர்கள் விவாதித்த ஆய்வு. அவர்கள் நேர்காணல் செய்தது சுமார் 140 நோயாளிகள். இவர்கள் கோவிட் நோயாளிகள் அல்ல. அவர்கள் COPD(நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்) நோயாளிகள். நோயாளியின் நிவாரணத்தை கேள்விகள் மற்றும் தொலைபேசியில் நேர்காணல் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கவில்லை(ஆக்சிமீட்டர் அல்லது இரத்த வாயு பகுப்பாய்வு பயன்படுத்தவில்லை). இவர்கள் குறைந்த ஆக்சிஜன் அளவு இல்லாத நிலையான நோயாளிகள். கையடக்க ஃபேன் கொடுத்த பிறகு நோயாளிகளின் அனுபவத்தைக் கண்டறிந்து நோயாளியின் கம்போர்ட்டை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால், ஆக்சிஜன் அளவு மற்றும் தமனி இரத்த வாயு ஆகியவற்றின் முக்கிய பிரச்சினைக் குறித்து செய்யப்படவில்லை ” என மருத்துவர் பிரவீன் விளக்கி இருந்தார்.

மருத்துவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், மூக்கின் அருகே கையடக்க ஃபேன் வைப்பதன் மூலம் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக பேசும் ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் ஆகியோரின் கூற்று உண்மையென ஆதாரமாக காண்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் நோயாளிகளுக்கு கையடக்க ஃபேன் பயன்படுத்துவதன் மூலம் சுவாசம் விடுதலில் முன்னேற்ற (வசதியாக சுவாசித்தல்) நிலையில் இருப்பதாகவே தெரிவிக்கின்றன. ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவில்லை, அது குறித்து குறிப்பிடவும் இல்லை என தெளிவாய் அறிய முடிகிறது.

Links : 

https://www.jpsmjournal.com/article/S0885-3924(10)00160-0/fulltext

Contributions of a hand-held fan to self-management of chronic breathlessness

Does the use of a handheld fan improve chronic dyspnea? A randomized, controlled, crossover trial

PIIS0885392410001600

Leaflet 2: Hand-held fan

Please complete the required fields.




Back to top button
loader