இந்தியாவில் அதிகரிக்கும் வெறுப்புப் பிரச்சார குற்றங்களும், அதற்கான சட்டங்களும் – ஓர் முழுப் பார்வை !
இந்தியாவில் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் என்னென்ன? அது தொடர்பான வழக்குகளும், அவதூறுகளும் கூறுவதென்ன?

2023 ஜூலை 31 அன்று ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 3 இஸ்லாமிய பயணிகள் மற்றும் உடன் பணியாற்றிய காவல் அதிகாரியை ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவமும், அதே நாளில் ஹரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் பேரணியில் ஏற்பட்ட கலவரமும் மத வெறுப்பால் உருவானவை.
ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்தால் அங்குள்ள 14 கிராமங்களின் பஞ்சாயத்துகள், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து குருகிராமிலும் தற்போது இந்த வன்முறை பரவியுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் டெல்லி முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளன. இந்த பேரணிகள் பெரிய அளவிலான வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அவசரமாக உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் ஷகீன் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை (Shaheen Abdulla Vs Union of India & Ors) கடந்த ஆகஸ்ட் 11 அன்று விசாரித்தது.
வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆராய ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இந்த மனு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு இந்த விசாரணையை மீண்டும் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்து.
இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ள வெறுப்புப் பிரச்சார குற்றங்கள்:
பொதுவாக ஒரு மனிதனையோ அல்லது ஒரு தனிப்பட்ட குழுவையோ மதம், சாதி, மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளப்படுத்தி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக வேண்டுமென்றே அவர்களை வேற்றுமைப்படுத்துவதே வெறுப்புணர்வு. இந்த வெறுப்புணர்வின் காரணமாகவே இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2021-ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, கடந்த 2001-இல் மட்டும் இந்தியாவில் நடந்துள்ள குற்றங்களின் (IPC Crimes) எண்ணிக்கை 17,69,308 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2011-இல் 23,25,575 ஆகவும், 2019-இல் 32,25,597 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த NCRB தரவுகளின் படி, இதுவரை 2021-ஆம் ஆண்டு வரையிலான தரவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2021-இல் மட்டும் நிகழ்ந்துள்ள மொத்த குற்றங்களின் (IPC) எண்ணிக்கை 36,63,360 ஆக உள்ளது.
இதே போன்று தனிமனிதனை அடையாளப்படுத்தி பரப்பப்பட்ட வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக கடந்த 2014-இல் மட்டும் 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2020-ல் 1,804 வழக்குகளாக அதிகரித்துள்ளது.
வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக உள்ள இந்தியச் சட்டங்கள்:
2014-க்கு முன்பு வரை இந்தியாவில் எந்த சட்டத்திலும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான சட்டவிதிகள் எதுவும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. 2014-இல் அமைக்கப்பட்ட பெஸ்பருவா கமிட்டி ஐபிசியின் பிரிவு 153 C மற்றும் பிரிவு 509 A ஆகியவற்றில் திருத்தம் செய்ய முன்மொழிந்தது. அதேபோன்று 2019-இல் அமைக்கப்பட்ட விஸ்வநாதன் கமிட்டி மதம், இனம், சாதி, சமூகம், பாலினம், பாலின அடையாளம், பாலின நோக்குநிலை, பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் குற்றத்தைச் செய்யத் தூண்டுவதற்காக ஐபிசியில் பிரிவுகள் 153 C (B) மற்றும் பிரிவு 505 A ஆகியவற்றைச் சேர்க்க முன்மொழிந்தது.
ஆனால், பெஸ்பருவா கமிட்டி மற்றும் விஸ்வநாதன் கமிட்டி மூலம் முன்மொழியப்பட்ட சட்டப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
பின்வரும் சட்டங்கள் வெறுப்புணர்வை பரப்புவதையும், மத உணர்வுகள் தாக்கப்படுவதையும், தீண்டாமையை ஊக்கப்படுத்தும் விதமாக தகவல்கள் பொதுவெளியில் பரப்பப்படுவதையும் தடுக்கின்றன.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்த உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை. பிரிவு 19(2) மூலம் இந்த உரிமைக்கு சில வரம்புகளையும் கொடுத்துள்ளது. அதன்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலன்களுக்காக, எந்தவொரு சட்டத்தையும் உருவாக்க இது அரசிற்கு (State) அனுமதியளிக்கிறது.
அதன்படி மேற்கூறிய சட்டங்கள் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வதில்லை, ஆனால் அரசியலமைப்புச் சட்டம் 19(2) இன் நியாயமான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த விதிகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றத்தால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இவை சில வகையான பேச்சுகள் மற்றும் வெளிப்பாடுகளை தடைசெய்வது பற்றி மட்டுமே விவரிக்கின்றன.
எனவே அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சார குற்றங்களை தடுக்க IPC-யில் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பான ஒவ்வொரு குற்றங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டு, அவை தனித்தனி குற்றங்களாக (Seperate Offences) சேர்க்கப்பட வேண்டும் என்பதை சட்ட ஆணையம் முன்மொழிந்துள்ளது.
அதே போன்று இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக பல நிகழ்வுகள் நடந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அதன் தளத்தில் கடந்த 2018-இல் (ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில்) மட்டும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக கிட்டத்தட்ட 3 மில்லியன் பதிவுக்களை நீக்கியுள்ளன. இதே போன்று யூடியூப் நிறுவனம் தனது தளத்திலிருந்து 25,000 வீடியோக்களை நீக்கியுள்ளது.
எனவே சில குறிப்பிட்ட வகுப்புவாத சித்தாந்தங்களை மட்டும் பின்பற்றி வாழ்வதையும், ஒரு மனிதனையோ அல்லது ஒரு தனிப்பட்ட குழுவையோ இனம், மதம், சாதி மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளப்படுத்தி அவர்களை மற்றவர்களிடத்திலிருந்து வேற்றுமைப்படுத்துவதையும் தடுக்க, ஒரு மனிதனுக்கு அவனுடைய குழந்தை பருவத்திலிருந்தே சமூக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளாகவே சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது..!!