முஸ்லீம் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்வோம் எனக் கூறியவரை ‘மரியாதைக்குரிய மதக்குரு’ என்ற அரசு வழக்கறிஞர்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சுக்களை ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்தார். நுபுர் சர்மா விவகாரத்திற்கு பிறகு ஜுபைர் மீது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்விட்டர் பதிவிற்கு எதிராக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாக, மகந்த் பஜ்ரங் முனி, யதி நரசிங்கானந்த் மற்றும் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை ” வெறுப்புணர்வாளர்கள் ” என பதிவிட்ட ட்விட்டர் பதிவின் அடிப்டையில் உத்தரப் பிரதேச காவல்துறை ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், முகமது ஜுபைர் ஜாமீன் மனு மீதான வழக்கில் பேசிய அரசு தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, பஜ்ரங் முனி ஒரு “மரியாதைக்குரிய மதத் தலைவர் “.. சீதாபூரைச் சேர்ந்த அவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். நீங்கள் ஒரு மதத் தலைவரை வெறுப்புணர்வாளர் என்று அழைத்தால் அது பிரச்சனைகளை உருவாக்குகிறது.

ஒரு மதத் தலைவரை வெறுப்புணர்வாளர் என அழைப்பதன் மூலம் பல்வேறு வகையான மக்களிடம் மத ஒற்றுமையின்மை மற்றும் தவறான எண்ணத்தை ஊக்குவிக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள். நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தால் காவல்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கலாம். ஏன் ட்வீட் செய்தீர்கள் ? ” என நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

ஆனால், அரசு தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலால் ” மரியாதைக்குரிய மதத்தலைவர் ” எனக் கூறப்பட்ட பஜ்ரங் முனி தன்னுடைய வெறுப்பு உரையில் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக பலாத்கார மிரட்டல் விடுத்தவர். 

ஏப்ரல் மாதம் உ.பியின் சீதாபூரில் பேசிய பஜ்ரங் முனி, ” ஒரு இந்துப் பெண் துன்புறுத்தப்பட்டாலும், உங்கள் மகள்களையும், உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை கொண்டு வந்து பாலியல் பலாத்காரம் செய்வேன் ” எனக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இருக்கும் போதே பேசிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியது. அவரின் வெறுப்பு பேச்சு வைரலானதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை ஜுபைர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

வெறுப்புப் பேச்சால் பஜ்ரங் முனி வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே, மன்னிப்புக் கேட்கும் வகையில் வீடியோ வெளியிட்டார். எனினும், பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், வெளியே வந்த பிறகு, ” நான் பேசியதில் எனக்கு எந்த குற்றமும்  இல்லை. மதத்தையும், பெண்களையும் பாதுகாக்க ஆயிரம் முறை சிறைக்குச் செல்வேன் ” எனப் பேசி இருந்தார்.

வெறுப்புப் பேச்சு என ஜுபைர் வெளியிட்ட பஜ்ரங் முனி பேசிய வீடியோவை செய்தி ஊடகங்களும் வெளியிட்டன. பஜ்ரங் முனி கைது செய்யப்பட்ட செய்தியையும் ஜுபைர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

உச்சநீதிமன்றம் ஜுபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தாலும் டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற காவலில் இருப்பார் எனக் கூறப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஜுபைர் தரப்பு வாதத்தில், ” வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்ட நபர்கள் ஜாமீனில் விடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களை அம்பலப்படுத்திய நபர் சிறையில் உள்ளார் ” எனக் கூறப்பட்டு உள்ளது.

links : 

Bajrang Muni A Respected Religious Leader; Zubair’s Tweet Offended His Followers : UP Police To Supreme Court

Sitapur Mahant Bajrang Muni Das Hate Speech: 

Please complete the required fields.




Back to top button
loader