69% இடஒதுக்கீட்டில் பணி என்ற அமைச்சர் மா.சு.. சாதி சான்றிதழே கேட்கவில்லை எனக் கூறும் விண்ணப்பதாரர்கள் !

டிசம்பர் 18-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” கிராம சுகாதார சேவையை மேம்படுத்த நலவாழ்வு மையங்களில் தற்காலிக அடிப்படையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். செவிலியருக்கு ரூ.14 ஆயிரம், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றியவர்கள், உள்ளூரில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில், சமூக நீதியை காக்கும் வகையில் தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448 பேர், இடைநிலை சுகாதார பணியாளர்கள் 4,848 பேர் என மொத்தம் 7,296 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், பணியிடத்திற்கான விண்ணப்பங்களில் சாதி குறித்தோ அல்லது சாதி சான்றிதழை இணைக்க வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை என விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கான தற்காலிக பணியிடங்கள் குறித்து நவம்பர் 29-ம் தேதி தேசிய சுகாதாரப் பணி தமிழ்நாடு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டியதில் சாதி சான்றிதழ் பற்றி குறிப்பிடவில்லை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் இடங்கள் குறித்து இடம்பெறவில்லை. மாவட்ட வாரியான பணியிடங்கள் மட்டுமே கூறப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் எல்லாம் பெறப்பட்ட பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் 69% இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என அறிவித்து இருந்தார்.

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் தற்காலிக பணியிடங்கள் தொடர்பான விண்ணப்பங்களிலும், அறிவிப்பிலும் சாதி குறித்து குறிப்பிடவோ, சான்றிதழை இணைக்கவோ சொல்லவில்லை. இப்படி இருக்கையில், எப்படி 69% இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவார்கள் என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள்.

மேலும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பணி ஆணை வழங்கும் தேதியே நெருங்கி விட்டது. இருப்பினும், சாதி சான்றிதழ் குறித்து எதுவும் கேட்கவில்லை என விண்ணப்பதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தேசிய சுகாதாரப் பணி தமிழ்நாட்டின் இணை இயக்குனர் மதுசூதனன் அவர்களிடம் பேசுகையில், ” மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது போன்று இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். அதற்கான வழிகாட்டுதல்கள் மாவட்டவாரியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக பணியிடங்கள் குறித்த செயல்முறை நடந்து கொண்டு இருக்கிறது. விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் சாதி சான்றிதழ்களை பெறுவார்கள். இடஒதுக்கீடு முறையில் பணி வழங்கப்படும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

மாவட்டவாரியாக வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறி இருந்தாலும், விண்ணப்பத்தில் அல்லது கோரப்படுகிற சான்றிதழ்களில் சாதி குறித்து இல்லை எனும் போது இந்த குழப்பம் இருக்கவே செய்கிறது. இதைப்பற்றிய முழுமையான தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு சரி செய்யுமா, இதை விண்ணப்பதிலேயே கொண்டு வருவார்களா ?

Link : 

HI Notification

Please complete the required fields.




Back to top button
loader