தேர்தலில் தோற்றால் உயிரை விடுவேன் என வைரலான போஸ்டர்.. மறுத்த விஜயபாஸ்கர் !

விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுகவின் பழனியப்பனும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், விராலிமலை தொகுதியில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் தோல்வி அடைந்தால் உயிரை விட்டு விடுவதாக கூறி மக்களை பீதியடையச் செய்துள்ளதாக தினமலர் உள்ளிட்ட செய்திகளும் வெளியாகி இருந்தது.
இதற்கிடையில், ” வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டு விடுவேன் என்று கூறும்பொழுது, 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும். முடிவு உங்கள் கையில் ” என அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர் விடும் புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டது.
இப்படியான போஸ்டரும், டாப் தமிழ் நியூஸ் எனும் இணையதளத்தில் வெளியான செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் படமும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தன்னைப் பற்றி பரவும் போஸ்டர் குறித்து விஜய பாஸ்கர் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து உள்ளார்.
விஜயபாஸ்கரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ” இது முழுக்க முழுக்க தவறான செய்தி! என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும் என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது, உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது..நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன்.
எனது முகநூல் (Dr.C.Vijayabaskar), டிவிட்டர் (vijayabaskarofl) இன்ஸ்டாகிராம் (vijayabaskarofl) பக்கங்களில் என் கைப்பட நான் பதிவிடும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே முற்றிலும் உண்மையானவை! மற்ற குழுப்பதிவுகளிலோ பிற பக்கங்களிலோ என்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. இந்த போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது, எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் சித்தரிக்கப்படுபவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ” என வெளியாகி இருக்கிறது.