தேர்தல் பத்திரம் : மிரட்டிய வழக்கறிஞர்கள், சளைக்காத சந்திரசூட்!

தேர்தல் பத்திரம் வெளியிடப்பட்டது தெரியும்! ஆனால், நீதிபதிகளை ‘வந்து பார்’ என்ற அளவில் இடையூறு செய்த வழக்கறிஞர்கள். அவர்களை நிதானமாக கையாண்ட நீதிபதி சந்திரசூட். நெருப்பை கையில் ஏந்தியுள்ளார் சந்திரசூட். சுடாமலா இருக்கும். என்னென்ன நடந்தது தெரியுமா?

‘தேர்தல் பத்திரம் திட்டம்’ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம், கடந்த பிப்ரவரி 15,2024 அன்று அத்திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் குறித்த முழுத் தகவல்களையும் மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிடுமாறும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்.பி.ஐ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியது.

தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை வெளியிட எஸ்.பி.ஐ கேட்ட கால அவகாசத்தை வழங்க மறுத்து உடனடியாக (மார்ச் 12,2024) அத்தகவல்களை வெளியிடவேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் மார்ச் 11,2024 அன்று உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் தகவல் மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்ட அரசியல்கட்சிகளின் தகவல் ஆகியவற்றை தனித்தனியாக எஸ்.பி.ஐ வெளியிட்டது. 

அதிகபட்சமாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜக 8251.75 கோடி பெற்றது தெரியவந்தது. 

மேலும், தேர்தல் பத்திரம் மூலம் எந்த கட்சிக்கு யாரிடமிருந்து பணம் சென்றது என்பதை அறிய உதவும் ‘தனித்துவமான ஆல்ஃபா நியுமெரிக் எண்’ மற்றும் அப்பத்திரங்களின் ‘சீரியல் எண்’ ஆகிய அனைத்தையும் மார்ச் 21க்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 18) அன்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை பிறப்பித்தபோது உச்சநீதிமன்றத்தில் மிகவும் காரசாரமான நிகழ்வுகள் நடந்தேறின. திடீரென்று மார்ச் 18 அன்று வழக்கிற்குள் வர முயன்ற 3 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தினார்கள். அதிலும் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா மிரட்டல் விடாதகுறையாக தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களிடம் கூச்சல் இட்டார். இதுவரை அதற்கு அவமதிப்பு வழக்கு போடப்படாமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.  

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய ‘ஆல்பா நியுமெரிக் எண்’களை எஸ்.பி.ஐ. இன்று (மார்ச் 21) வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

மார்ச் 18, 2024 அன்று இவ்வழக்கில் நடந்த பல்வேறு தரப்பு வாதங்களை இங்கே பார்க்க இருக்கிறோம்.    

வழக்கறிஞர் முகுல் ரோத்தகியின் பட்டியலிடப்படாத மனு :

‘FICCI’ (Federation of Indian Chambers of Commerce & Industry) மற்றும் ‘ASSOCHAM’ (Associated Chambers of Commerce and Industry of India) ஆகியவை  அரசு சார்பற்ற வணிக கூட்டமைப்புகள். இவ்வமைப்புகளுக்கு சார்பாக இவ்வழக்கில் வாதாடுவதற்கு, மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாக, இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறினார். 

மேலும் அவர், ‘தனித்துவமான ஆல்ஃபா நியுமெரிக் எண்’ வெளியிடுவதை ஒத்திவைக்கக்கோரினார். 

இதற்கு பதிலளித்த இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நீங்கள் சொல்வதுபோல எந்த மனுவும் இங்கே பட்டியலில் இடம்பெறவில்லை. நீங்கள் முறையாக மனு அளியுங்கள், அது பட்டியலானவுடன் உங்கள் வாதங்களை கேட்கிறோம். இப்போதைக்கு உங்களின் வாதங்களை கேட்க இயலாது. உங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கமுடியாது ரோத்தகி. தீர்ப்பு வழங்கிய பின்னர் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.” என்றார்.

வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாராவின் இடையறாத கூச்சல் :

வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோரின் மேற்கண்ட உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே இடையில் குறுக்கிட்ட வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, “இந்த முழுத் தீர்ப்பும் மக்களின் முதுகுக்கு பின்னே கொடுக்கப்பட்ட ஒன்று. இந்தத் தீர்ப்பு செல்லாது.” என்று கூச்சல் எழுப்பினார். 

அவர்தாம் பேசுவதை நிறுத்திவிட்டு நீதிபதி அமர்வு சொல்வதைக் கேட்குமாறு நீதிபதி சந்திரசூட் கூறியபோதும் அவற்றுக்கு காதுகொடுக்காமல், “நான் ஒரு இந்தியக் குடிமகன்” என்று கூச்சல் எழுப்பியபடி இருந்தார் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா.        

இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி சந்திரசூட், “என்னிடம் கத்தாதீர்கள்” என்று கடிந்துகொண்டார். பதிலுக்கு “நான் தன்மையாகவே பேசுகிறேன்” என்று ஒரு நொடி பணிந்தார் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா.

தொடர்ந்துபேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “இது தெருமுனைக்கூட்டம் அல்ல, நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கிறீர்கள். ரோத்தகிக்கு சொன்னதுதான் உங்களுக்கும் பொருந்தும்.” என்றார். இடையிலேயே மீண்டும் வழக்கறிஞர் நெடும்பாரா குறுக்கிட முயன்றபோது, “ஒரு தலைமை நீதிபதியாக என்னுடைய முடிவை உங்களுக்கு அளித்துவிட்டேன். உங்கள் வாதத்தை இப்போது நாங்கள் கேட்கமுடியாது, நீங்கள் முறையாக பேசுவதை நாங்கள் கேட்பதற்கு முதலில் மனு ஒன்றை மின்னஞ்சல்மூலம் தாக்கல் செய்யுங்கள். அதுதான் நீதிமன்றத்தில் பின்பற்றவேண்டிய விதி.” என்று அழுந்தந்திருத்தமாகக் கூறினார் தலைமை நீதிபதி சந்திரசூட்.

மீண்டும் மீண்டும் நீதிபதி அமர்வு சொல்வதை பொருட்படுத்தாமல், “இந்த முழுத் தீர்ப்பும் மக்களின் முதுகுக்கு பின்னே கொடுக்கப்பட்ட ஒன்று, நாடாளுமன்றமே இங்கே பொருட்படுத்தப்படவில்லை. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது” என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார் வழக்கறிஞர் நெடும்பாரா.

“ஏற்கனவே பாம்பே உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாங்கியதுபோல மீண்டும் இங்கு  இன்னொரு வழக்கு வாங்கவிருக்கிறீர்களா? நீதியை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் தடையாக செயல்படுகிறீர்கள்! ” என நீதிபதி கவாய் வழக்கறிஞர் நெடும்பாராவை எச்சரித்தார். அதன்பின்னரும், “எங்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். நானும் என் நண்பரும் இரவு 1 மணிக்கு விமானம் மூலம் கேரளாவிலிருந்து டெல்லி வந்துள்ளோம்.” என்று தொடர்ந்து பேசியபடியே இருந்தார் வழக்கறிஞர் நெடும்பாரா.

“நீதிமன்ற அமர்வு சொல்லிய நடைமுறையை நீங்கள் பின்பற்றாதவரை உங்கள் வாதத்தை நாங்கள் கேட்கமாட்டோம்” என்று நீதிபதி கண்ணா கூறினார். 

நீதிமன்ற அமர்வில் உள்ள தலைமை நீதிபதி மூன்று வெவ்வேறு நீதிபதிகள் குறுக்கிட்டு சரியான வழிமுறையை பின்பற்ற சொன்னபோதும், வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா நீதிமன்றத்தில் இடையறாது கூச்சல் எழுப்பியபடியே இருந்தார். 

இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்   3 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். பின்னர் நிபந்தனையில்லா மன்னிப்புக் கடிதம் எழுதிகொடுத்ததாலும், ‘இனி இதுபோன்று நடந்துகொள்ளமாட்டேன்’ என்ற உத்தரவாதம் தந்ததாலுமே அவரின் சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அப்போது அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. 

அதிஷ் அகர்வாலா கடிதம் :

மூத்த வழக்கறிஞரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான அதிஷ் அகர்வாலா, தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு கடந்த மார்ச் 15 அன்று கடிதம் எழுதினார். அதில், தேர்தல் பத்திரம் குறித்தான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை, தலைமை நீதிபதியே தாமாக முன்வந்து (Suo Moto) மீண்டும் மறுபரிசீலனை (Review) செய்யுமாறு வேண்டியிருந்தார். ஏனெனில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த பல்வேறு பெருமுதலாளிகளின் விவரம் வெளியே தெரிந்தால் அது அவர்களுக்கு பாதகமாக முடியும் என்பதாலேயே தீர்ப்பை மறுபரிசீலனைக்கு கேட்பதாக எழுதியிருந்தார்.  

வழக்கறிஞர் நெடும்பாராவைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் அதிஷ் அகர்வாலா, தான் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து குறிப்பிட்டு பேசினார், “தாமாக முன்வந்து தாங்கள் தங்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு என் கடிதத்தில் கேட்டுள்ளேன். தாங்கள் விரும்பும் முடிவை எடுக்கவும். நான் நீதிபதிகளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்றார். 

அவருக்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “டாக்டர் அகர்வாலா நீங்கள் மூத்த வழக்கறிஞர் என்பதைத்தாண்டி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறீர்கள். தாமாக முன்வந்து செயல்படும் (Suo Motu Jurisdiction) என் அதிகார வரம்பை பயன்படுத்தக்கோரி எனக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு இங்கே இதை சொல்வதற்கு எந்த இடமும் இல்லை. விளம்பரத்துக்காக நீங்கள் செய்வனவற்றை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தயவுசெய்து அதை (கடிதத்தை) அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் நான் கசப்பாக ஏதாவது சொல்லவேண்டிவரும்.” என்று மிகக்கடுமையாக தன் கண்டனத்தை தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய இந்திய ஒன்றிய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, “அகர்வாலா குறிப்பிட்ட கடிதத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை ஒன்றிய அரசின் சார்பில் நான் இங்கே தெரிவிக்கிறேன். இது (அகர்வாலா தன் கடிதத்தை சூட்டிய வாதம்) தேவையற்றது.” என்றார்.

துஷார் மேத்தா:

சமூக வலைத்தளங்களில் இத்தீர்ப்பினால் என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டிருக்கிறது என வழக்கறிஞர் துஷார் மேத்தா ஒன்றிய அரசின் சார்பில் வாதாடினார். 

“நீதிபதிகள் தாங்கள் உண்மையான உலகத்தின் நடைமுறையிலிருந்து விலகி உயரமான கோபுரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். தங்களுடைய தீர்ப்பு எம்மாதிரியாக வெளியே திரிக்கப்பட்டு உள்வாங்கிக் கொள்ளப்படுகிறது என்பது தங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும். இந்த நீதிமன்றத்தின் முன் நின்றவர்கள் பேட்டிகள் கொடுத்து நீதிமன்றத்தை அவமானத்துக்கு உள்ளாக்குகிறார்கள். 

வெளியான புள்ளிவிவரங்களை சமூக வலைத்தளங்களில் தன்விருப்பம்போல் பலர் வளைத்துக்கொள்கிறார்கள். இவ்வாறுவளைக்கபட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு நிறையபதிவுகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு வாக்காளர் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறாரா? எதிராக வாக்களிக்கப்போகிறாரா? என்பதை இந்த தகவல் நிர்ணயம் செய்யும் என்று தோன்றுகிறது.” என்றார். 

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “ நீதிபதிகளாக நாங்கள் கொடுத்த உத்தரவுகள் குறித்துதான் எங்களுக்கு கவலை. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படியே முடிவு செய்தோம். நாம் சட்டத்தின் ஆட்சியால் நிர்வாகிக்கப்படுபவர்கள். ஒரு அரசாங்க நிறுவனமாக நீதிமன்றம் தன் வேலையை செய்தாகவேண்டும். சமூகவலைத்தளங்களில் வரும்  விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் அளவுக்கு எங்கள் தோள்கள் பரந்துபட்டதாகவே உள்ளது. ஒரு தீர்ப்பை வெளியானவுடன் அது பொதுச்சொத்தாக ஆகிவிடுகிறத. அது இந்நாட்டின் சொத்து.” என்றார். 

சமூக வலைத்தளங்களில் இடப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த பதிவுகள் குறிப்பிட்ட அரசியல் கட்சியை பாதிக்கும் என்ற எண்ணமே இந்த வாதத்தில் மேலோங்கியிருப்பது புலனாகிறது.

ஒட்டுமொத்தமாக, ஒன்றிய அரசின் சார்பில் வாதாடும் துஷார் மேத்தா தவிர்த்த மீதம் 3 வழக்கறிஞர்களான முன்னாள் தலைமை வழக்கறிஞர் ரோத்தகி, மேத்யூ நெடும்பாரா மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அகர்வாலா ஆகியோர் அவசரகதியாக வழக்கிற்குள் திடீரென்று வந்தது தலைமை நீதிபதிக்கு மறைமுகமான அழுத்தத்தை கொடுப்பதற்கு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் மேத்யூ நெடும்பாரா விடுத்தது மிரட்டலுக்கு சற்றும் குறைவில்லாத தொனி. மேலும், இவர் 1 மணிக்கு கேரளாவிலிருந்து பறந்து வந்து யார் சார்பாக இந்த வழக்கில் வாதாட வந்தார் என்பது குறித்து எவ்வித தெளிவான செய்திகளும் இதுவரை கிடைக்கவில்லை.
  

ஆதாரங்கள்:

  1. https://www.livelaw.in/top-stories/electoral-bonds-case-live-updates-from-supreme-court-hearing-on-whether-sbi-should-disclose-bond-numbers-252584?infinitescroll=1
  2. https://www.barandbench.com/news/electoral-bonds-supreme-court-discounts-centres-claim-that-court-verdict-being-misused-misinterpreted-on-social-media
  3. https://www.etvbharat.com/en/!bharat/heated-argument-during-supreme-court-hearing-on-sbi-electoral-bonds-issue-enn24031805915
  4. https://www.livemint.com/news/india/electoral-bonds-data-supreme-courts-fresh-order-to-sbi-and-election-commission-in-5-points-11710752986370.html
  5. https://www.news18.com/india/dont-shout-at-me-cji-dy-chandrachud-rebukes-senior-lawyer-during-electoral-bond-hearing-8820349.html
  6. https://www.livelaw.in/top-stories/supreme-court-electoral-bonds-bar-association-adish-aggarwala-letter-publicity-oriented-252639
  7. https://www.livelaw.in/top-stories/supreme-court-electoral-bonds-state-bank-of-india-252608
  8. https://www.thequint.com/news/india/electoral-bonds-ficci-assocham-move-sc-against-alpha-numeric-codes-disclosure
  9. https://youtu.be/8t2XNWSJy5c?si=tyKj_RMdV3wS3RlB
  10. https://youtu.be/dsto27EQQKM?si=y3LA475Z5AVIQ3Ms
Please complete the required fields.




Back to top button
loader