இந்தியை ஏற்காதவர்கள் நாட்டின் மீது நேசமில்லாதவர்கள் – திரிபுரா முதல்வர்.

இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் எழுந்தது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி நாளன்று கூறிய கருத்தே இந்தியை திணிக்காதீர்கள் என்ற முழக்கத்திற்கு காரணமாகி இருந்தது.
” இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் ” என்ற கருத்தை தெரிவித்து இருந்தார்.
இந்தி மொழியை திணிக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், நாட்டில் அதிகம் பேசும் மொழி என்பதால் அதன் மூலம் தான் நாட்டை அடையாளப்படுத்த முடியும் என ஒரு தரப்பினரும் கருத்துக்களை வெளியிடத் துவங்கினர். இந்நிலையில், திரிபுரா மாநில முதல்வர் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
” இந்தியாவை தேசிய மொழியாக ஏற்காத மக்கள் அனைவரும் நாட்டின் மீது நேசமில்லாதவர்கள். நான் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறேன். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தி மொழியை பேசுகின்றனர். பிரிட்டிஷ்க்காரர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால், அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலத்தின் தேவை இருந்திருக்காது ” என அகர்தலாவில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிராந்திய புற்றுநோய் மையத்தின் திறப்பு விழாவின் பொழுது திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார்.
இருப்பினும், அவர் ஆங்கில மொழிக்கு எதிராக பேசவில்லை மற்றும் இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், ” அரசாங்க அலுவலங்களில் பெங்காலி அல்லது கொக்போரோக் மொழிகளில் பேசி உதவி கேட்டால் அதிகாரிகளுக்கு உதவ நேரம் எடுப்பதை பார்க்க முடிந்தது. அதே ஆங்கிலத்தில் கேட்டால் உடனே உதவி விடுகின்றனர். அப்படி இருக்கக் கூடாது ” எனவும் தெரிவித்து இருக்கிறார்.
All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state’s culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019
இதற்கு முன்பாக கர்நாடகாவில் ஆளும் பிஜேபி அரசின் முதல்வர் எடியூரப்பா, ” நமது தேசத்தில் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் சமமானவை. இருப்பினும், கர்நாடகாவை பொறுத்தவரையில் கன்னட மொழியே முதன்மையானது. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியவத்துவதில் இருந்து நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் ” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற முயற்சிகள் எப்பொழுது எழுந்தாலும் நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு முழக்கமாக மாறி விடுகிறது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசம். அதுவே உலக அளவில் இந்தியாவிற்கான அடையாளமாகவும் இருந்து வருகிறது.
links :
No love for Hindi is no love for India: Tripura CM Biplab Kumar Deb
Those who oppose Hindi as common language do not love India, claims Tripura CM Biplab Kumar Deb
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.