ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம்|மும்மொழிக் கொள்கை கட்டாயமில்லை.

ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் மூன்றாம் மொழியாக ஹிந்தி மொழி கட்டாயம் என்ற அம்சம் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவு இந்திய அளவில் எதிர்ப்பை சந்தித்து. குறிப்பாக, தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என கடுமையான எதிர்ப்புகள் உருவாகின.
மே 31-ம் தேதி புதிய அமைச்சரவைக்கு தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டம் 2019 சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. அதில் முக்கிய அம்சமாக நாடு முழுவதிலும் மும்மொழிக் கொள்கை பரிந்துரைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டன. இந்த வரைவு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை பரிந்துரை எதிர்ப்பை சந்தித்தது. ஏனெனில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலத்தில் தாய்மொழி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் பட்சத்தில் மூன்றாவது அயல் மொழியாக ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும்.
அதேபோன்று, ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி, இணைப்பு மொழியாக ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியாக ஓர் அயல் மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
புதிய மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு இருந்தது. மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்ற ஹாஷ்டக் உலக அளவில் ட்ரென்ட் ஆகின. பெரும்பாலான பதிவுகள் ” நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல , ஹிந்தி திணிப்பிற்கு எதிரானவர்கள் ” எனத் தெரிவித்தன. எதிர்ப்புகள் எழும் பொழுதே தமிழக கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டம் 2019 வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது கட்டாயமில்லை. ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வரைவில் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்களின் விருப்பத்தின் படி மூன்றாம் மொழியை தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரை மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புகள் இருந்த நிலையில் அத்தகையை பரிந்துரை மத்திய அரசால் நீக்கப்பட்டுள்ளது.
Proof :
National Education Policy 2019: Government revises 3 language formula, makes Hindi optional