நீங்கள் ‘இந்துவா?’ – ஆர்.எஸ்.எஸ் அல்லது வி.ஹெச்.பி-யிடம் சான்று அவசியம் – தமிழ்நாட்டில் இந்த நிலை ?

ந்து மதத்திற்கு மாறும் ஒருவரை ’இந்து’ என அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் அல்லது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளிடமிருந்து பெற்ற மத மாற்றுச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மதம் மாறுவது  என்பது எப்போதும் சென்சிடிவான விஷயம்தான். இதனையே முதலீடாகக் கொண்ட அமைப்புகளும் இருக்கின்றன.  “மாற்று மதத்தில் உள்ளவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புங்கள்” என வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தினை செய்து வருகின்றனர். இதற்கு ‘கர் வாப்சி’ என்று பெயர்.

இதுதொடர்பான சுவையான தகவல் ஒன்று யூ டர்னுக்கு கிடைத்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இந்து மதத்திற்கு மாறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெயரை இந்துவாக மாற்றிப் பதிவு செய்ய தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். அவ்விண்ணப்பத்துடன் தான் மதம் மாறியதற்கான மத மாற்று சான்றிதழை ஆன்மிக அமைப்பு ஒன்றிடமிருந்து பெற்று சமர்பித்துள்ளார்.

ஆனால், மனுதாரர் சமர்பித்த அச்சான்றிதழை நிராகரித்து தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை துணை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், மதமாற்று சான்றிதழ் அளிக்க தகுதி பெற்ற மத அமைப்புகளின் பட்டியலை (இந்து, கிறிஸ்துவம் மற்றும்  இஸ்லாம்) குறிப்பிட்டுள்ளார்.  

அதன்படி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் போதகர், தலைமை போதகர், பேராயர் மற்றும் தகுதி பெற்ற மதகுருமார்களிடம் இருந்து சான்றிதழ் பெறலாம். அதேபோல, இஸ்லாம் மதத்திற்கு  மாறியவர்கள் இமாம், முத்தவல்லி, காஜி மற்றும் தகுதி பெற்ற மதகுருமார்களிடம் இருந்து சான்றிதழ் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்து மதத்திற்கு மாறியவர் ஆர்ய சமாஜம், விஸ்வஹிந்து பரிஷத் தபோவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மடாதிபதிகள், ஆதீனங்கள், தகுதி பெற்ற பிற இந்து மதகுருமார்களிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக அரசு அலுவலகத்தை மனுதாரர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதில் குறிப்பிட்ட அமைப்பு மட்டும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமும் சான்றிதழ் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கிறிஸ்துவராக மதம் மாறுகிறார் என்றால், தேவாலயத்தில் ஞானஸ்தானம் எடுத்து, தனது பெயரை பதிவு செய்து கொள்கிறார். இதேபோல், முஸ்லீமாக மாறுகின்றவரின் அருகில் உள்ள ஜமாத்தில் பதிவு செய்து கொள்கிறார். அவரது திருமணம், இறப்பு என அனைத்திற்கும் அதன் வழியாகத்தான் அந்நபரை அணுகுவார்கள். இவை எல்லாம் நிறுவனமயமாக்கப்பட்டவை.

ஆனால், இந்து மதத்திற்கு  குறிப்பிட்ட ஒரு அமைப்பு என்று ஏதுமில்லை. பொதுவாக சைவ, வைணவ மடங்கள், ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்குவது வழக்கம். ஆன்மீக மடங்களாக இல்லாத அமைப்புகள் வழங்கும் சான்றிதழ்களை மதமாற்ற சான்றுகளாக ஏற்க முடியாது என்பதுதான் லாஜிக். 

ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வஹிந்து பரிஷத்:

ஆனால், தமிழ்நாடு  எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை துணை இயக்குநர் அலுவலகமோ, ஆர்.எஸ்.எஸ். அல்லது விஸ்வஹிந்து பரிஷத்திடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் போதும் என்று சொல்லியிருப்பது சமூக ஆர்வலர்களையும் அரசியல் விமர்சகர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ’ஒருவரை இந்துவாக அங்கீகரிக்க இவர்கள் யார்?; அந்த அதிகாரம் இவர்களுக்கு யாரால் அளிக்கப்பட்டது ?’ என்ற கேள்விகள் எழுகிறது.

ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்றுதான் அதன் நிறுவனர்கள் முதல் இன்றைய தலைவர்கள் வரை சொல்லி வருகிறார்கள். இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சான்றிதழை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால், நாளைக்கு யார் வேண்டுமானாலும் ஒரு அறக்கட்டளையை நிறுவி, ‘இந்து’ சான்றிதழை இஷ்டம்போல வழங்கிக்கொண்டிருக்கலாம். 

இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள். அவரை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே, இந்து மகாசபையைச் சேர்ந்தவர். அதன் வழி வந்ததுதான் ஆர்.எஸ்.எஸ். கடந்த ஆண்டு, மீரட் மேயர் தேர்தலின்போது இந்து மகாசபை வெளியிட்ட தேர்தல் அறிக்கை கவனிக்கத்தக்கது. ”நாங்கள் மீரட் மேயர் பதவியைப் பிடித்தால் மீரட் நகரை, ‘நாதுராம் கோட்ஸே நகர்’ என்று மாற்றுவோம்” என்று அது குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். சுதந்திர இந்தியாவில்  3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, தமிழ்நாடு அரசின் ஒரு துறை முழுமனதோடு ஏற்றுக்கொள்வது வெகு இயல்பானது அல்ல.

அடுத்ததாக விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பை பற்றி பார்ப்போம். 1992ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் இவ்வமைப்புக்கும் பஜ்ரங் தள் அமைப்புகளுக்கு நேரடி தொடர்பு இருந்ததை அனைவரும் அறிவோம்.  இவ்வமைப்பும் கலாச்சார அமைப்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு சம்பவங்கள் ஒரு உதாரணம் மட்டுமே. இன்றளவிலும் இந்தியாவில் நிகழும் மதம் தொடர்பான மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சனைகளில் இவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. 

சமூக நீதி, சமத்துவம் என ஆட்சி செய்யும் திமுக-வின் கொள்கைக்கு நேர் எதிராக இவ்வமைப்புகள் உள்ளன. ஆனால், இத்தகைய அமைப்புதான் ஒருவர் இந்துவாக மதம் மாறியதற்கான சான்றிதழ் அளிக்க அதிகாரம் கொண்டவர் என தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார் என்பதே நகைமுரணாக இருக்கிறது. 

ஒருவரை இந்துவாக அங்கீகரிக்க ஆன்மீக அமைப்புகள், மாடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் மத குருமார்கள் இருக்கின்றனர். இவற்றை மீறி சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தினை ஒரு அமைப்பிற்கு அளிக்க வேண்டுமெனில்,  தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு அளிக்கலாம். 

ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்புகளுக்கு எந்த தகுதியின் அடிப்படையில், எந்த அரசு அறிவிப்பின் அடிப்படையில் இந்த அதிகாரம் அளிக்கப்பட்டது ?

இந்த தேசத்தில் மக்கள் சாதி, மதத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாகக்கூடாது என்று போராடி, அதற்கு விலையாக தன் உயிரையே நீத்தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி எனும் பெருங்கிழவன். அவரது குருதி சிந்திய நாளில் (ஜன.30-காந்தி கொல்லப்பட்ட நாள்) அதன் காரண கர்த்தாவான கோட்சேவின் மானசீக வாரிசுகளான வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்க்கு தமிழ்நாடு அரசின் முக்கியத்துறை அளித்துள்ள ஏற்பை கடும் அதிர்ச்சியோடு தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Please complete the required fields.




Back to top button