இந்து இளைஞர் முன்னணி நகரத்தலைவர் கார் கண்ணாடியை உடைத்தது இந்து முன்னணியினரே !

மிழகத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெட்ரோல் குண்டு வீச்சு, கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பு நிர்வாகிகளைக் குறிவைக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ்(21) என்பவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரின் கார் கண்ணாடி செப்டம்பர் 26ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. இவர் இந்து இளைஞர் முன்னணியின் நகரத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடைப்பெற்றது.

இதற்கிடையில் தகவல் அறிந்த இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டின் முன் திரண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா செய்தியாளர்களிடம் பேசுகையில் “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கலவரம் உண்டாக்குவதற்கான பெரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. சட்ட விரோதமாகப் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமியர்களும், பயங்கரவாதிகளும் தங்கி இருக்கிறார்கள். PFI மற்றும் SDPI போன்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு முழுவதும்  ஒரே மாதிரி பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர். இவை திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், ” உளவுத்துறை தூங்குகிறதா ” என்ற தலைப்பில் இந்து முன்னணி தலைவரின் பேட்டியை தினமலர் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

பெட்ரோல் குண்டு, இஸ்லாமியர்கள் சதி என இந்து முன்னணியினர் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், போலீஸ் விசாரணையில் ஹரிஷ் கார் கண்ணாடியை உடைத்தது அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன் என்பது தெரியவந்தது. இதில் தமிழ்ச்செல்வன் என்பவர் இந்து முன்னணியின் நிர்வாகி.

இதைப்பற்றிக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அளித்த பேட்டியில், “இந்து இளைஞர் முன்னணி நகர்த்தலைவர் ஹரிஷ்(21) என்பவரின் கார் கண்ணாடியை உடைத்தது அதேப் பகுதியை சேர்ந்த இந்து முன்னணியின் நிர்வாகி தமிழ்ச்செல்வன்(24) மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன்(25). விநாயகர் சதுர்த்தியின் போது நடந்த முன்விரோதத்தின் காரணமாக இதைச் செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியின் போது யார் அந்தப் பகுதியில் சிலை வைப்பது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கடைசியில் ஹரிஷ் என்பவர் சிலை வைத்துள்ளார். இதனைப் பழி தீர்க்கவே அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது” என்று விவரித்தார்.

மேலும், “சட்டவிரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுழற்சி முறையில் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்” கூறினார்.

மேலும் படிக்க : வைரலாகும் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்ட சம்பவங்கள் !

இதற்கு முன்பாகவும், வலதுசாரிகள் மற்றும் இந்து அமைப்பினர் தங்களது சொந்த விரோதங்களுக்காகவும், விளம்பரத்திற்காகவும், பதவிக்காகவும் தங்கள் மீதும், தங்களது அமைப்பினர் மீதும் பெட்ரோல் குண்டு, கல் வீச்சு போன்றவற்றை வீசிய சம்பவங்கள் இங்கு ஏராளம். தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் இந்தச் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader