கட்சிப் பதவிக்காக தன்னைத் தானே வெட்டிக் கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் !

இருவேறு மதங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கவும், கட்சியில் பதவி மற்றும் பிரபலத்திற்காக தங்கள் வீடுகளில், காரில் குண்டு வீச சொல்வது, தங்களையே அரிவாளால் வெட்ட சொல்வது, வாகனங்களை எரிப்பது போன்ற காரியங்களை அரசியலில் இருப்பவர்கள் செய்வதை தொடர்ந்து படித்து வருகிறோம். தற்போது அதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்முன்னேகாண முடிகிறது. அப்படியான இரு சம்பவங்கள் கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது.
திருப்பூர் சம்பவம் :
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பகவான் நந்து என அழைக்கப்படும் நந்தகோபால் என்பவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். அவர் அப்பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
மார்ச் 17-ம் தேதியன்று கடையை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த நந்துவை மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதையடுத்து, அவர் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பகவான் நந்துவிற்கும், மற்றொரு மதத்தைச் சேர்ந்த சிலருக்கும் மோதல்கள் இருந்த காரணத்தினால் இக்கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்து இருக்கக்கூடும் என கட்சியினர் இடையே பேசப்பட்டது. இதனால் இரு மதத்தினர் இடையே பிரச்சனை சூழல் உருவானது. ஆகையால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகளை கண்டறிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
போலீசார் தேடலில், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் பகவான் நந்துவின் ட்ரைவர் ருத்ரமூர்த்தி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். போலீசார் விசாரணையில் அதிரவைக்கும் தகவலை ருத்ரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
” கட்சியில் நல்ல பதவி கிடைக்க வேண்டும், ஊரில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அண்ணன் தான் அவரை வெட்டச் சொன்னார் என ருத்ரமூர்த்தி கூறியுள்ளார். அவர் சொன்னது போல் பகவான் நந்துவின் முதுகில் வெட்டி உள்ளனர். பின்னர் தன் உடலில் சில இடங்களில் அவரே வெட்டியதாக கூறப்படுகிறது. கட்சியில் பதவி, பிரபலம் ஆவதற்கு தன்னை வெட்ட ஆள் செட் செய்துள்ளார் பகவான் நந்து. பழியை பிற மதத்தினர் மீது போட்டு விடலாம் என ஐடியா கொடுத்துள்ளார் “.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ” சுய விளம்பரத்திற்காக மற்றும் லாபத்திற்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படும் நோக்குடன் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ” எனத் தெரிவித்து உள்ளார்.
திருச்சி சம்பவம் :
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டட ஒப்பந்த பணிகளில் செய்து வருகிறார். அரசியல் மீது ஆர்வத்தினால் சமீபத்தில் இந்து முன்னணியில் இணைந்துள்ளார்.
மார்ச் 10-ம் தேதி நள்ளிரவில் வீட்டின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேல் மற்றும் அவரின் நண்பர்கள் இருவரும் சேர்ந்த பைக்கை எரித்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
” கட்சியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும், பைக் லோனை கட்டாமல் ஏமாற்றவும் தனது பைக்கை நண்பர்களுடன் சேர்ந்து கொளுத்தி விட்டு மர்மநபர்கள் கொளுத்தியதாக நாடகமாடியதாக சக்திவேல் போலீசாரிடம் கூறியுள்ளார் “.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.