இந்து கோவில்கள் சாத்தான்களின் அரண் எனக் கூறிய கிறிஸ்தவ மத போதகரின் விளக்கம்

கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ் இந்து மத கடவுள்களையும், கோவில்களையும் இழிவாக பேசியதாகக் கூறி அவரின் மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் மூன்று வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவில்களை பற்றி லாசரஸ் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியதால் வழக்குகள் பாய்ந்துள்ளன. அவரின் மீது section 153A மற்றும் 295A பிரிவுகளில் பொள்ளாச்சி, சூலூர், கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த பிஜேபி(இரு வழக்கு) மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் வழக்கு பதிந்தனர்.
2016-ல் பேசிய வீடியோவில் இருப்பது:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை போன்று சாத்தன்களின் அரண் எங்குமில்லை. வேறு எங்கும் இங்கு இருப்பது போன்ற கோவில்கள், சாத்தான்களின் அரண்கள் இல்லை. வட இந்தியா சென்றால் சில இடங்களில் பிர்லா மந்திர் போன்ற இடங்கள் மட்டுமே பெரிதாக காணப்படும். அவை பிர்லா கம்பெனி தனது புகழுக்காக கட்டியது.
மற்றபடி அமிர்தசரஸ் பொற்கோவில் போன்றவை மட்டும் தான். தமிழ்நாட்டில் உள்ள இவ்வளவு பெரிய கோபுரங்கள், இடங்கள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டை ஏன் சாத்தான் இவ்வளவு குறி வைத்து வலிமையாக உள்ளான்.
கும்பகோணம் நாம் கிரகிக்க முடியாத அளவிற்கு சாத்தான்கள் அத்தனை கோவில், அத்தனை இடங்களில் வேரூன்றி இருக்கிறான்.
இவ்வாறு வைரலான வீடியோவில் பேசி இருந்தார் கிறிஸ்துவ மோகன் சி லாசரஸ்.
லாசரஸ் தான் பேசியது குறித்து விளக்கம் :
இந்து மதத்தை நான் இழிவுப்படுத்தி பேசியதாக செய்தி வெளியிட்டு கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் அதில் இந்து மதத்தை பற்றியோ, இந்து மத கடவுள்கள் பற்றியோ குறிப்பிடவில்லை. பொது இடத்தில் பேசப்பட்ட காரியம் அல்ல. இது எந்தவொரு பொது மக்களும் சொல்லப்பட்ட வார்த்தையும் அல்ல.
நான் எந்த பொதுக் கூட்டத்திலும் அவ்வாறு கூறியது இல்லை, எந்த பேட்டியிலும் அவ்வாறு பேசியதில்லை. இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன்னாள் சென்னையில் கிறிஸ்தவ ஊழியர்கள் சிறு கூட்டமாய் கூடி இருந்த இடத்தில் இந்தியாவில் உள்ள மத நம்பிக்கை, இந்தியாவில் உள்ள மத நம்பிக்கை குறித்து வேதம் சொல்லும் காரியம், அதைப் பற்றி அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் சொன்ன போது அவர்களுக்கு விளக்கி சொன்ன காரியம்.
பொது இடத்தில் ஒரு மதத்தை பற்றியோ, அவர்களின் தெய்வங்களை இழிவுப்படுத்தியோ பேசியது இல்லை. இது எங்களுக்குள் குறிப்பிட்ட 100 ஊழியர்களுக்குள் வேதம் பற்றி அவர்களின் கேள்விகளுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகள்.
எல்லா மதத்தில் உள்ளவர்களையும் ஒரே மாதிரி நேசிக்குறேன். எந்த மதத்தையும் இழிவுப்படுத்தி பேசுவதில்லை. யாரையும் மத மாற்றம் செய்ய முயற்சிப்பதும் இல்லை. என் சொந்த சகோதரிகள் இரண்டு பேர் இன்றும் இந்து மதத்தில் தான் உள்ளனர்.
இந்து சகோதர சகோதரிகள் நான் பேசியதை கேட்டு வருத்தம் அடைந்து இருந்தால் நான் வருத்தப்படுகிறேன். உங்களை வருத்தப்பட வைப்பது என் விருப்பமும் அல்ல என் நோக்கமும் அல்ல என கூறியுள்ளார்.
கோவில்கள் சாத்தான்களின் அரண் ஆக உள்ளது என கூறிவிட்டு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுப்படுத்தவில்லை என்பது எவ்விதத்தில் நியாயம். பிற மனம் புண்படும்படி பேசிவிட்டு அதற்காக வருந்துகிறேன் என்று விளக்கம் அளிப்பதால் தவறு மாறுமா?
பிற மதங்களை இழிவுப்படுத்தும் எண்ணத்தை எந்த மதமும் கூறவில்லை, மத நல்லிணக்கம் கொண்ட தேசத்தில் மத வெறியர்களும், மத வியாபாரிகளும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சில் வன்மத்தை மட்டுமே விதைக்கின்றனர். அதனால் மட்டுமே அவர்களுக்கு லாபம்.
இம்மாதிரியான மத வியாபாரிகளையும், மத வெறியர்களையும் எம்மதத்தில் இருந்தாலும் உள்ளிருப்பவர்களே அவர்களுக்கு எதிராக கேள்வியை முன்வைக்க வேண்டும். பேசுவதை எல்லாம் பேசி விட்டு நான் பேசவில்லை, அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்பது இன்றைய வழக்கம் போல.
Evangelist Mohan Lazarus booked for remarks on temples
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.