‘இந்து கும்பல்’ நாச வேலைக்குத் திட்டம் – கதிர் செய்தி.. உண்மை என்ன ?

ஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில், நாட்டில் அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகை நாட்களில் மிகப்பெரிய நாச வேலையில் ஈடுபட இந்து கும்பல் திட்டமிட்டு இருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர் எனக் கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. 

பாகிஸ்தானின், ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் ஆயுதம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதியைப் பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து கதிர் நியூஸ் தங்களது இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

Archive link 

பண்டிகை காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய நாச வேலை – வெளியான பகீர் தகவல்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரையில், பல்வேறுச் சொற்றொடர் பிழைகளையும், எழுத்துப் பிழைகளையும் காண முடிகிறது.

அந்த செய்திக்கு இடையில் இரண்டு புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் செய்தியின் கடைசியில் இன்புட் & இமேஜ் கார்டசி என்று தினமலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தினமலரில் பதிவிட்டுள்ள செய்தியில் புகைப்படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

கதிர் நியூஸ் பதிவிட்டிருந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அதில் 4 பயங்கரவாதிகள் உள்ள புகைப்படம், 2022, மே மாதம் 10ம் தேதி ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரிலுள்ள பெமினா என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது.

ஒருவர் மட்டும் உள்ள புகைப்படம்,  ஜம்மு காஷ்மீரிலுள்ள பெர்முளா என்ற இடத்தில் 2022, மே 10ம் தேதி கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் புகைப்படம் என அறிய முடிகிறது.

மே மாதம் நிகழ்ந்த கைது தொடர்பான புகைப்படத்தினை, அதனுடன் தொடர்பில்லாத அக்டோபர் மாத நிகழ்வு குறித்தான செய்திக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதில் புகைப்படமே பதிவிடாத தினமலருக்கு இமேஜ் கர்டசி வேறு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அச்செய்தியின் கடைசி பத்தியில் “இது அடுத்த பண்டிகை நாட்களில் மிகப்பெரிய நாச விலையில் ஈடுபட இந்து கும்பல் திட்டமிட்டு இருப்பதாகவும் போலீஸ் தெரிவித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், தினமலரில் இந்த வாக்கியம் இப்படியாக இல்லை. “அடுத்தடுத்த பண்டிகை காலங்கள் வருவதால், மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபட இந்த கும்பல் திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த கும்பல்” என்பதற்குப் பதிலாக “இந்து கும்பல்” எனக் குறிப்பிட்டு இருக்கிறது கதிர் நியூஸ். 

கதிர் நியூஸ் ஆனது பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூரியாவினால் நடத்தப்படுகின்ற ஒரு செய்தி இணையதளமாகும். அதில் நாச வேலையில் ஈடுபட இந்து கும்பல் திட்டமிட்டது என்று தவறாகவும், பல எழுத்துப் பிழைகளுடனும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதை அந்த இணைய தளத்தின் ஆசிரியர் கவனித்துச் சரிசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Links: 

J-K police arrest 4 hybrid terrorists of TRF/LeT in Srinagar, 2 terrorist associates in Awantipora

Soldier, 2 civilians injured in Shopian encounter: J&K Police 

Please complete the required fields.
Back to top button
loader