இரண்டு மடங்காக அதிகரித்துள்ள இந்தியர்களின் மாதாந்திர வீட்டு செலவுகள்.. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் இதோ !

இந்தியாவிலேயே அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் தான் தனிநபர் மாதந்திர செலவு ₹12,105 ஆக உள்ளது !

ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்Household Consumption Expenditure Survey 2022-23” என்ற பெயரில் மாதாந்திர குடும்ப செலவுகள் தொடர்பான ஆய்வை கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2023 ஜூலை வரை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் பிப்ரவரி 24 அன்று ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சத்தின் கீழ் செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் (NSSO) வெளியிடப்பட்டன. 

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வு, பல ஆண்டுகளாக வெளியிடப்படாத நிலையில், சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அணுக முடியாத சில கிராமங்களைத் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,61,746 குடும்பங்களில் (1,55,014 கிராமப்புறக் குடும்பங்கள், 1,06,732 நகர்ப்புறக் குடும்பங்கள்) இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் :

உணவுக்காக குறைவாக செலவழிக்கும் இந்தியர்கள்:

இந்த தரவுகளின் படி 2022-23 ஆம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு, கிராமப்புறங்களில் ரூ.3,773 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.6,459 ஆகவும் உள்ளது. மேலும் இந்தியர்கள் உணவுக்காக குறைவாகவே செலவழித்து வருகின்றனர் என்பதை இந்த தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது. 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் உணவுக்காக நகர்ப்புறங்களில் 39 சதவீதமும், உணவு அல்லாத மற்ற செலவுகளுக்காக நகர்ப்புறங்களில் 61 சதவீதமும் செலவழித்துள்ளனர். இதே போன்று கிராமப்புறங்களில் உணவுக்காக 46 சதவீதமும், உணவு அல்லாத மற்ற செலவுகளுக்காக 54 சதவீதமும் செலவழித்துள்ளனர்.

இரண்டு மடங்காக அதிகரித்துள்ள இந்தியர்களின் மாதந்திர வீட்டு செலவுகள் :

கடந்த 2011-12 இல் கிராமப்புறங்களில் ₹1,430 ஆக இருந்த இந்தியர்களின் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு, 2022-23 ஆம் ஆண்டில் ₹3,773 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று நகர்ப்புறங்களில் ₹2,630 ஆக இருந்த இந்தியர்களின் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு, 2022-23 ஆம் ஆண்டில் ₹6,459 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் சராசரி மாதச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது.

கல்வியை விட போக்குவரத்துக்கு அதிக செலவு செய்யும் இந்தியர்கள் :

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற குடும்பங்களில் தற்போது கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காகவே மக்கள் அதிகம் செலவு செய்கின்றனர் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

1999-2000 இல் கிராமப்புறங்களில் தானியங்கள் மீதான செலவிற்கு மட்டும் கிட்டத்தட்ட 22% செலவழித்துள்ளனர். ஆனால் தற்போது இது 4.91 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போன்று நகர்புறங்களிலும் 3.64% ஆக குறைந்துள்ளது. இதே போன்று உணவு பொருட்களை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களுக்கே இந்தியர்கள் அதிக செலவு (கிராமபுறங்களில் 8.3%, நகர்ப்புறங்களில் 7.22%) செய்கின்றனர்.

நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகள்:

கிராமப்புறங்களில் கீழ்மட்டத்தில் உள்ள 5% பேர் (வர்க்க நிலையின் அடிப்படையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்), சராசரியாக ₹1,373 ஐ சராசரி மாதாந்திர தனிநபர் செலவாகக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் மேல் வரிசையில் உள்ள பிரிவினர் ₹10,501 ஐ சராசரி மாதாந்திர தனிநபர் செலவாகக் கொண்டுள்ளனர். இதே போன்று நகர்ப்புறங்களில் கீழ்மட்டத்தில் உள்ள 5% மக்களுக்கு இது ₹2,001 ஆக உள்ளது. மாறாக மேல் வரிசையில் உள்ள மேல்வர்க்க மக்கள் ₹20,824 ஐ சராசரி மாதாந்திர தனிநபர் செலவாகக் கொண்டுள்ளனர்.

MPCE ஆனது சாதிய அடிப்படையிலும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, SC மற்றும் ST பிரிவினரின் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு (MPCE) , மற்ற சமூக பிரிவினர்களை விட குறைவாக உள்ளதை கீழே உள்ள அட்டவணையின் மூலம் அறிய முடிகிறது. இதன்மூலம் இந்தியாவில் நிகழும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சமத்துவமின்மையையும் அறிந்து கொள்ள முடிகிறது.

மாநிலங்கள் வாரியாக MPCE :

மாநிலங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தால், அதிக மாதாந்திர தனிநபர் செலவைக் கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. அங்கு கிராமப்புறங்களில் ₹7,731 ஆகவும், நகர்ப்புறங்களில் ₹12,105 ஆகவும் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு (Monthly Per Capita Consumption Expenditure) உள்ளது. அதே சமயம் குறைந்த MPCE கொண்ட மாநிலமாக சத்தீஸ்கர் (கிராமபுறத்தில் ₹2,466, நகர்ப்புறத்தில் ₹4,483) உள்ளது. இதே போன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சராசரி மாதாந்திர தனிநபர் செலவு கிராமப்புறங்களில் ₹5,310 ஆகவும், நகர்ப்புறங்களில் ₹7,630 ஆகவும் உள்ளது.

இலவசமாகப் பெற்ற பொருட்களின் மதிப்புகளையும் சேர்த்து சராசரி மாதாந்திர தனிநபர் செலவு (Estimates of MPCE with imputation):

இந்த கணக்கெடுப்பில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா உட்பட பல்வேறு சமூக நலத் திட்டங்களின் மூலம் குடும்பங்கள் இலவசமாகப் பெற்ற பொருட்களின் மதிப்பு புள்ளிவிவரங்களையும் சேர்த்து (Estimates of MPCE with imputation), சராசரி மாதாந்திர தனிநபர் செலவினங்கள் ருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு, இலவசமாகப் பெற்ற பொருட்களின் மதிப்புகளையும் சேர்த்து கிராமப்புறங்களில் ரூ.3,860 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.6,521 ஆகவும் உள்ளது.

ஆதாரங்கள்:

Household Consumption Expenditure Survey 2022-23 Report

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2008737

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader