This article is from Oct 06, 2021

ஜி.எஸ்.டி-க்கு மாறாமலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது எப்படி ?

இந்தியாவில் நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலை மக்கள் மீதான சுமையை அதிகரிக்கவே செய்கிறது. இன்றைய நாளில் 100ரூபாய்க்கு மேல் விற்கப்படும் பெட்ரோலில்  ஒன்றிய அரசு 33ரூ, மாநில அரசு 22ரூ என வரி விதிப்பதை மக்கள் அறிய தொடங்கி விட்டனர். அரசுகளின் வரி விதிப்பால் தான் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக விற்கப்படுகிறது என வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்தால் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு என தனித்தனியாக அதிக வரிகள் நீங்கி விலை குறையும் என அரசியல் கட்சிகள், பொதுமக்களும் குரல் கொடுத்து வந்தனர்.

சமீபத்தில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூட பெட்ரோல், ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரலாமா என எழுப்பப்பட்ட விவாதத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகா உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பே தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ” பாஜக அரசு பொறுப்பேற்ற போது பெட்ரோல் வரி 10ரூ ஆகவும், டீசல் வரி 5ரூபாயாகவும் இருந்தது. ஆனால், தற்போது பெட்ரோல் வரி 32 ஆகவும், டீசல் வரி 31 ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வரி வழியாக வருகிறது. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி-க்குள் வர தயார் ” என நிபந்தனையுடன் பேசி இருந்தார்.

செஸ் வரி எவ்வளவு ?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒன்றிய அரசு கலால்/செஸ் வரியாக 32.90 ரூபாய் விதிக்கிறது. இதில் அடிப்படை கலால் வரி ரூ.1.40 , சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் ரூ.18, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் ரூ.2.50 மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி ரூ.11 என நிர்ணயித்து இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதிகரித்தாலும் பெட்ரோல், டீசல் மீதான ஒன்றிய அரசு விதித்த வரி மாறாது, நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலில் செஸ் வரி எதற்காக விதித்து இருக்கிறதோ அந்த திட்டத்திற்காகவே செலவு செய்யப்பட வேண்டும். ஆகையால், செஸ் வரியில் இருந்து மாநிலங்களுக்கு என பங்கு அளிக்கப்படாது. இந்த செஸ் வரிகளால் வரும் பெட்ரோல், டீசல் விலையின் மீது மாநில அரசின் வாட் வரி விதிக்கப்படுவதால் விலை இன்னும் உயரவே செய்கிறது.

ஜி.எஸ்.டி-க்குள் வரும் பொருட்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசின் வரி பங்கு 28%-க்குள் முடிந்து விடும் என்பதால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர குரல் எழுப்பப்படுகிறது.

ஆனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்றால் ஒன்றிய அரசு அதன் மீதான செஸ் வரியை கைவிட வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். அதற்கு காரணம், 2017-ல் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 19-வது கூட்டத்தில் சிகரெட் மீதான 28% ஜி.எஸ்.டி உடன் செஸ் வரி விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க : பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசலில் வசூலித்த கலால் வரி 14.4 லட்சம் கோடி – ராஜ்யசபாவில் பதில் !

பாஜக அரசு தன்னுடைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது வசூலித்த கலால்/செஸ் வரி 14.4 லட்சம் கோடி. இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கவே செய்கிறது. ஆகையால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர ஒன்றிய அரசு விருப்பம் கொள்ளாது, அதேபோல் மாநில அரசுகளும் விருப்பம் கொள்ளாது. இரு அரசுகளும் பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வரியை பெரிதும் நம்பி இருக்கிறது.

பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய அரசு விதிக்கும் 32.90ரூபாயில் செஸ் வரியை குறைக்க ஒன்றிய அரசு முன் வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். ஆனால், செஸ் வரி குறைப்பு பற்றி யாரும் ஒன்றிய அரசிற்கு எதிராக குரல்கள் எழுவதில்லை. அதேபோல், சமீபத்தில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.3 குறைத்தது போன்று மாநில அரசுகளும் தங்கள் வரியை குறைக்க வேண்டும். இவ்விரு வரி குறையும் ஒன்று சேர்க்கையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

Link : 

Excise duty, cess collected from petrol, diesel used for infrastructure development: Govt

.
Please complete the required fields.




Back to top button
loader