ஹெச்.ராஜா தம்பி நிரூபரைத் தாக்கியதாக வைரலாகும் வீடியோ.. உண்மையா ?

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் தம்பி ஊழல் வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகிய போது தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற நிரூபரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும், போக்குவரத்துத்துறையில் 32.84 லட்சம் ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் ஹெச்.ராஜாவின் தம்பி சுந்தர் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 20 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link 

Facebook link  

இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

ஹெச்.ராஜா தம்பி நிரூபரைத் தாக்கியது குறித்து தேடுகையில், வைரலாகும் வீடியோ 2018 பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்றும், 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

” தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான ரூ.32.84 லட்சம் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்த ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர் உள்பட 21 மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் காரணமாக பணி ஓய்வு பெறும் அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை நகல், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 2018 பிப்ரவரி 09-ம் தேதி வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொண்டவர்கள், அங்கிருந்து வெளியேறினர். அப்போது, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த விகடன் புகைப்பட கலைஞர் மணிகண்டனை நோக்கி ஆவேசமாக வந்த சுந்தர், அவரைத் தாக்கி கேமராவை பறிக்க முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சுந்தர் கிளம்பிச் சென்றார் ” என மின்னம்பலம் மற்றும் இந்து தமிழ் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

2018-ல் திருச்சி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த ஹெச்.ராஜாவின் தம்பி சுந்தரை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்பட கலைஞரை சுந்தர் தடுத்து கேமராவை பறிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது நடந்தது போல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Please complete the required fields.
Back to top button
loader