ஹெச்.ராஜா பதிவிட்ட, பகிர்ந்த புரளிகளின் தொகுப்பு !

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டார். ஹெச்.ராஜா என்றால் யார் என தமிழகத்தில் பெரும்பாலோனோருக்கு நன்றாக தெரியும்.

பெரியார் முதல் உயர் நீதிமன்றம் வரையில் சர்ச்சையான பல கருத்துக்களை பேசி பிரபலமடைந்தவர். தன் சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்ட சர்ச்சையான கருத்துக்களை நான் பதிவிடவில்லை, என் அட்மின் தான் பதிவிட்டார் என கூறியவர் ஆவார். இக்கட்டுரையில், ஹெச்.ராஜா அவர்கள் பதிவிட்ட வதந்திகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.

Advertisement

1. 15 லட்சம் விவகாரம் :

ஜூன் 2018-ல் ஹெச்.ராஜா அவர்கள் பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக எங்கும் கூறவில்லை எனக் கூறினார். மேலும், அவ்வாறு கூறியதை நிரூபித்தால் தாம் வகிக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பேட்டி அளித்து இருந்தார்.

விரிவாக படிக்க : 15 லட்சம் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பேட்டி|ஹெச்.ராஜா பதவி விலகுவாரா ?

மத்திய அமைச்சரான ராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிரா மாநில இஸ்லாம்பூரில் டிசம்பர் 18-ம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ 15 லட்சம் ரூபாய் ஒரே தடவையாக வராது, ஆனால், மெதுவாக சிறிது சிறிதாக வரும். அரசிடம் அதிக அளவில் பணம் இல்லை. ஆர்.பி.ஐ-யிடம் கேட்டதற்கு பணம் கொடுக்க மறுக்கின்றனர். ஏதோ தொழில்நுட்ப பிரச்சனைகள் எனக் கூறுகின்றனர். ஆனால், நரேந்திர மோடி திறன்பட செயல்படும் பிரதமர் மற்றும் மக்களின் பல பிரச்சனைகளைச் சந்தித்து உள்ளார் “ என தெரிவித்தார்.

Advertisement

2.கதுவா சிறுமி கொலை : 

கதுவா சிறுமி அப்பகுதியில் இருந்த கோவிலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார் என வெளியான செய்திக்கு எதிராக கதவே இல்லாத கோவிலில் எவ்வாறு ஒரு சிறுமியை 7 நாட்கள் அடைத்து வைக்க முடியும் என்ற கேள்வியை ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

விரிவாக படிக்க : சிறுமி ஆஷிஃபா வன்புணர்வு கொலை சம்பவத்தில் வதந்திகளும், உண்மைகளும்…

ராசனா பகுதியில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள காளி வீர் மந்திர் என்ற கோவிலில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. பாபா காளி வீர் கடவுளுக்காக கட்டப்பட்ட அக்கோவிலில் மூன்று கதவுகளும், அதற்கென மூன்று பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சாவிகள் மூன்று கிராமத்திற்கும் ஆளுக்கு ஒன்றாக உள்ளது. இதில், ஒரு சாவி கோவிலின் பாதுகாவலரும், சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளியுமான சஞ்சி ராமிடன் இருந்துள்ளது.

இவ்வாறு உண்மையை அறியாமல் தவறான கேள்வியை ஹெச்.ராஜா எழுப்பி இருந்தார்.

3. ராமலிங்கம் கொலை சம்பவம் :

TNnews24 என்ற இணைய செய்தி தளத்தில் திருபுவனம் ராமலிங்கம் கொலையில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்க ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டி வருவதாக எழுதி இருந்தனர். மேலும் ஹெச்.ராஜாவும் ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டி வருவதாக கூறி ஒரு வாட்ஸ் ஆஃப் பார்வர்ட் செய்தி ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

விரிவாக படிக்க : மத கலவரம் உள்பட போலிச் செய்திகளை வெளியிடும் TNnews24 இணையதளம் !

ஆனால், ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டுவதாக எழுந்த சர்ச்சைக்கு அந்நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. பிப்ரவரி 8-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “ தவறாக பரவும் அவதூறு பரப்புரையை கண்டிப்பதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ” என கூறி இருந்தனர்.

4. பெரியார் சிலை :

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் சர்ச்சை உருவாக காரணமானது ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தின் பதிவு. அதில், “ லெனின் யார் ? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில்… இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை ” என்று மிரட்டும் நோக்கத்தில் பதிவிடப்பட்டது.

விரிவாக படிக்க : உடையும் சிலை, வெடிக்கும் வன்முறை !

2018 மார்ச் 7-ம் தேதி ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஹெச். ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது மற்றும் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பதிவை எனது அனுமதி இல்லாமல் என் முகநூல் பக்க அட்மின் பதிவிட்டுள்ளார் “. அதை நான் அறிந்து நீக்கியுள்ளேன் என தெரிவித்து இருந்தார்.

அச்சமயத்தில் பாஜக கட்சியின் நகரச் செயலாளர் முத்துராமன் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தின் முன்பு இருந்த பெரியாரின் சிலையை இரவில் சேதப்படுத்தியுள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

5. பிரான்மலை கோவில் :

1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி. இந்துக்களின் உரிமைகள் திராவிடத்தால் அழிக்கப்படுகிறது என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம் – ஹெச்.ராஜா

விரிவாக படிக்க : பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா ?

பிரான்மலை குறித்த ஹிந்து சமயம் செய்தியில் கோவில்கள், மசூதி வெவ்வேறு இடங்களில் இருப்பதை அவர்களே குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், தலைப்பினை மட்டும் கோவிலை இடித்து அங்கு மசூதி கட்டப்பட்டது என வைத்துள்ளனர். பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறுவது தவறான தகவல்களே. இதை அறியாமல், ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் இச்செய்தியை பகிர்ந்து இருந்தது.

6. டெல்லி நவோதயா பள்ளி :

மத்திய அரசால் இலவசமாக நடத்தப்படும் நவோதய பள்ளி எவ்வளவு வசதியுடன் கட்டப்பட்டுள்ளன என பதிவிட்ட முகநூல் வீடியோவை ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.

விரிவாக படிக்க : அரசு பள்ளியை நவோதயா பள்ளி என பகிர்ந்த ஹெச்.ராஜா !

ஹெச்.ராஜா முகநூலில் பகிர்ந்த அந்த வீடியோவில் தெளிவாக டெல்லி அரசு பள்ளி எனக் குறிப்பிட்டு உள்ளார். அதை கவனிக்காமல் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் என தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close