This article is from Oct 19, 2021

மதுவால் தமிழர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு அதிகரிப்பு என்ற ஹெச்.ராஜா.. கருணாநிதி மட்டுமே காரணமா ?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக மாறாமல் இடம்பெறுவது மதுவிலக்கு, ” டாஸ்மாக் ” கடைகளை படிப்படியாக குறைப்போம் என்பதாகும். ஆனால், தற்போது வரை தமிழ்நாட்டில் மது விற்பனை அதிகரிக்கவே செய்கிறது. இந்நிலையில், மதுபான கடைகளால் தமிழர்களின் குழந்தை பெரும் திறன் குறைந்து, செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அதிகரித்து உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசி உள்ளார்.

திண்டுக்கல் அடுத்துள்ள சில்வார்பட்டி பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட பாஜகவினரை சந்தித்த ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” 30 வருடங்களுக்கு முன்பாக ‘இரண்டு குழந்தை போதும் குடும்பக்கட்டுப்பாடு பண்ணுங்க ‘ என ஊர் முழுவதும் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போ அந்த இடங்களில் செயற்கை கருத்தரிப்பு மையம் என இருக்கிறது. தமிழன், தமிழ் பெயரில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள்.. ஏனா கருணாநிதி வந்த பிறகு கொண்டு வந்தது தான், 1969-க்கு முன்பு தமிழ்நாட்டில் மதுபானம் கிடையாது. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் முதல் மதுபானக் கடை, சாராயக் கடை வந்தது. இதனால் என்ன ஆகிருக்கு, தமிழன் தன் மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைக்கு வந்து விட்டான் ” எனப் பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு வரலாறு : 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதுவை விற்கவோ, அருந்தவோ எந்தத் தடையும் இல்லை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சியை காங்கிரஸ் முயற்சித்தது. அதற்கு சென்னை உள்ளிட்ட மாகாணங்கள் ஒப்புக்கொள்ளவும் செய்தன. 1948-ல் ஓமந்தூர் ராமசாமியின் முயற்சியால் சென்னை மாகாணத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.

1948-ல் தொடங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மாகாணத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. இது அண்ணாவின் ஆட்சியிலும் தொடர்ந்தது. ஆனால், வருவாய் இழப்பு, சட்ட ஒழுங்குச் சிக்கல்கள் என பல காரணங்களால் பிற மாகாணங்களில் இருந்த அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்த முடியாமல் இருந்தன. 1970-ல் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர காங்கிரஸ் அரசு முயற்சித்த போது பெரும்பாலான மாநிலங்கள் அதற்கு உடன்படவில்லை. அப்போது, தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்தது.

ஆனால், அண்டை மாநிலங்களில் நடக்கும் மதுவிற்பனையை சுட்டிக்காட்டி பேசிய கருணாநிதி, 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி மதுவிலக்கை தள்ளி வைப்பதாகவும், இது தற்காலிக நடவடிக்கை என்றும் அறிவித்து இருந்தார். இருப்பினும், ஒருசில ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. 1973-ம் ஆண்டு கள்ளுக் கடைகளும், 1974-ல் சாராயக் கடைகளும் மூடப்படும் என கருணாநிதி அறிவித்தார். இதை பலரும் பேசுவதில்லை.

கருணாநிதி ஆட்சிக்கு பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர்ந்தது. ஆனால், கள்ளச்சாராயம், சட்டஒழுங்கு, நிர்வாக நெருக்கடியால் 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்ய்யப்பட்டு மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார். 1983-ம் ஆண்டு மதுவை மொத்தமாக விற்பனை செய்யும் பணிக்காக டாஸ்மாக் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். இதன் பிறகு அரசாங்கத்திற்கு முதல் ஆண்டு வருமானமாக 183 கோடி வந்தது. அப்போது தனியார் மது விற்பனையும் இருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே மதுக்கடைகள் நிரந்தரமாக திறக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி 1989-ல் மலிவு விலையில் மதுவை அறிமுகம் செய்தார். தற்போது போல் பெண்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்புகள் இருக்கவே செய்தது. அடுத்ததாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை ரத்து செய்தார். 2003 முதல் டாஸ்மாக் மூலமாக அரசே நேரடியாக மது விற்பனை செய்வதை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதேபோல், மினி குவாட்டர் போன்ற மது அளவுகளும் விற்பனைக்கு வந்தன. அந்த நடைமுறையே தற்போது வரை தொடர்கிறது.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக ஜெயலலிதா இருந்த போதே வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மது விற்பனை தொடரவே செய்கிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழ்நாடு முழுவதும் பரவி ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மதுக்கடைகளுக்கு எதிராக தற்போது போராட்டம் செய்கிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் இருக்கையில் உருவாக்கப்பட்ட டாஸ்மாக் குறித்து எங்கும் பேசுவதில்லை. அதேபோல், மதுக்கடையை கருணாநிதி திறந்தாலும், அதே கருணாநிதி ஆட்சியில் மீண்டும் மதுக்கடைகளை மூடப்பட்டு மதுவிலக்கு தொடர்ந்தது பற்றி பலரும் அறிவதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் அதிமுகவோ, திமுகவோ யாராக இருந்தாலும் டாஸ்மாக் வருமானத்தை முதன்மையாக வைத்து ஒரே நிலைப்பாட்டின் கீழ் வருகிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

2 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் வரலாறு குறித்தும், அதன் ஆண்டு வருவாய் மற்றும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விரிவான வீடியோ வெளியிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




Back to top button
loader