This article is from Dec 06, 2019

பாலியல் வழக்கில் கைதான 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொலை| உ.பி-யில் மற்றொரு கொடூர சம்பவம்.

நவம்பர் 27-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் என நான்கு பேர் திட்டம் தீட்டி பாலியல் வன்புணர்வு செய்ததோடு கொன்று எரித்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்தனர்.

மேலும் படிக்க : இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு, கொலையில் மத சாயம் பூச நினைப்பது ஏன் ?

குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, போராட்டம் நாடு முழுவதிலும் எழுந்தது. இந்த வழக்கை விரைந்து முடித்து வைக்க மாநில அரசும் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் ஹைதராபாத் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பாய் பேசப்படுகிறது.


Twitter link  

பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று நடந்த சம்பவத்தை கூறும்படி கேட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பிக்க போலீசாரை தாக்க முயன்றதில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும், இந்த சம்பவத்தின் போது இரு காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த இடம் மெஹபூப் நகர் மாவட்டத்தின் சத்தன்பள்ளி எனும் கிராமத்தில் அரங்கேறியுள்ளது. இவ்விடம் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும், என்கவுண்டர் சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்று இருக்கிறது.

இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து எரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்று உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கி உள்ளனர். எனினும், என்கவுண்டர் சம்பவத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இறந்த பெண்ணின் தந்தை, ” எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும். காவல்துறைக்கும், அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ” என ஏஎன்ஐ செய்திக்கு தெரிவித்து உள்ளார். இதேபோல், டெல்லி நிர்பயாவின் பெற்றோர்களும் போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கையை வரவேற்று உள்ளனர்.

உத்தரப்பிரதேச சம்பவம் : 

உ.பி-யில் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் விசாரணைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். எனினும், அங்குள்ளவர்கள் மூலம் காப்பாற்றப்பட அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடலின் 90% பகுதி தீயில் எரிந்த காரணத்தினால் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காக போராடும் போது எரித்து கொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது.

மேலும் படிக்க : ஒரே நாளில் பெண்களுக்கு எதிராக வெளியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் !

இதுமட்டுமின்றி, தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் கொல்லப்பட்ட செய்தி வெளியான தினத்திலேயே நாடு முழுவதிலும் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. துப்பாக்கி முனையில் பெண்ணை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடங்கி நேற்று (டிசம்பர்4) பாதிக்கப்பட்ட பெண் எரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் வரை பல கொடூரங்கள் நடந்து உள்ளது.

அந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், அவை பேசு பொருளாகவில்லை என்பதே உண்மை. அந்த பெண்களுக்காகவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் அல்லவா. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கியே தீர வேண்டும்.

Proof links : 

Hyderabad rape-murder victim’s family expresses joy after accused killed

Unnao rape survivor set on fire by accused out on bail, shifted to Lucknow with 90% burns

Please complete the required fields.




Back to top button
loader