This article is from Jun 28, 2021

லட்சக்கணக்கில் ஏமாற்றும் பலே ஆன்லைன் மோசடி! ice app சர்ச்சை

தொழில்நுட்பம் வளர வளர அதற்கு இணையாக அதன் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களும் பெருகிக்கொண்டே உள்ளது. சூதாட்டங்கள் மூலம் பண இழப்பு சம்பவங்கள் ஒரு பக்கம் நடக்க இணைய தொழில் எனும் பெயரில் முறையாக கட்டமைக்கப்பட்டு பணம் பறிக்கும் மோசடிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இயல்பான வாழ்வையும், போதிய வருவாயையும் இழந்து கொரோனா தொற்றால் பொதுவான பணத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் பல உள்ளன. இதுவரை கல்லூரியில், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள், வீட்டை பராமரிக்கும் பெண்கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருவாய்க்கு பங்களிக்க வேண்டும் எனும் சூழலுக்கு ஏதுவாக வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க முடியும் எனும் படியான ஆன்லைன் மோசடிகள் பல நடைபெறுகிறது. இவை சூதாட்டம் போன்று அல்லாமல் நாம் செய்யும் வேலைக்கு கிடைக்கும் ஊதியம் என இருப்பதால் பலரும் ஏமாற்றப்படுகின்றனர். அப்படி நிகழ்த்தப்படும் ஒரு மோசடி தான் ICE APP மோசடி.

ஐஸ் செயிலி மோசடி என்பது லைக், ஷேர் போன்று சமூக வலைதளங்கள் அடிப்படையில் நிகழும் ஒரு மோசடி. இதில் பாதிப்பு அடைந்த ஒருவர் யூடர்னைத தொடர்பு கொண்டு பேசினார். அதன்படி, முதலில் குறிப்பிட்ட தொகை (7000 முதல் 1லட்சம் வரை) கட்டி அதில் சேர்ந்துகொள்ள வேண்டும். கட்டிய தொகைக்கு ஏற்றவாறு லைக், ஷேர் செய்வதற்கான லிங்குகள் தரப்படும். ஒரு லிங்க்கை லைக் செய்தால் ரூ.15 கிடைக்கும். உதாரணமாக, 30 ஆயிரம் கட்டி ஒருவர் சேர்ந்தால் அவருக்கு நாளொன்றுக்கு 97 லிங்குகள் கொடுக்கப்படும். எனவே ரூ.1500 சம்பாதிக்கலாம். இதன்படி ஒரு மாதத்தில் 45000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்பதே இதன் வசீகரம்.

இது போக 30 ஆயிரம் கட்டினால் ஒரு குறிப்பிட்ட தொகை வாலட் என அழைக்கப்படும் அந்த செயிலியில் உள்ள கணக்கில் நமக்கு திருப்பிக் கொடுக்கப்படுகிறது. (இந்த தொகை நபருக்கு நபர் மாருபடுகிறது. 30 ஆயிரம் கட்டி சேர்ந்த அவருக்கு 12 ஆயிரம் ரூபாய் வாலெட்டில் அளிக்கப்பட்டதாகவும், மற்றொரு நண்பருக்கு 3 ஆயிரம் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார் ) அந்த தொகையை நம் வங்கிக் கணக்கில் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் இதனை செய்ய முடியாது. நம்மிடம் பேசிய நபர் சனிக்கிழமை அன்று இதில் சேர்ந்துள்ளதால் திங்கள் வரை பணத்தை வங்கிக் கணக்கில் மாற்ற காத்துள்ளார். ஆனால் மேலும் 2500 ரூபாய் வரி என்ற பெயரிலும், பரிவர்த்தனைக்காக 500 ரூபாயும் கொடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர். இவர்களுக்கு வாட்ஸ்அப் குழுக்கள் பல உள்ளது. நம்மிடம் தொடர்பு கொண்ட நபர் குழு 80-ல் உள்ளார். ஒரு குழுவிற்கு 300 நபர்கள் இருந்துள்ளனர். இவற்றில் அட்மின் எனப்படும் குழு தலைவர்கள் தான் செய்தி அனுப்ப முடியும். பணத்தைக் கட்டி சேர்ந்த நபர்கள் தனியாக அவர்களை தொடர்பு கொண்டோ , செய்தி அனுப்பியோ தங்களது புகார்களை தெரிவித்தால் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கிவிடுவோம் என மிரட்டுவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக iceapp whatsapp குழுவின் admin எண்களை நாங்கள் தொடர்புகொண்டு விளக்கம் அறிய முனைந்தபோது அவை அனைத்தும் வெளிநாட்டு எண்களாகவும் virtual எண்களாகவும் இருந்தது, மேலும் அவைகளின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

மேலும் iceapp இணையதளமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த app மற்றும் website (https://ice118.com/) தொடர்பான எந்த ஒரு தகவல்களையும் திரட்ட இயலவில்லை.

பல வித மோசடிகள் :

ஐஸ் ஆப் மோசடி போன்று பவர் பேங்க் எனும் பெயரில் இது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி தொழில் ரீதியான இளைஞர்களை குறிவைக்கும் மோசடிகள் ஒரு புறம் இருக்க, பெரியவர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பறிக்கும் பல மோசடிகள் நிகழ்கிறது.

பரிசு தருவதாக வங்கிக் கணக்குகளின் விவரங்களை பெறும் வகையிலான மோசடிகளை மக்கள் சுதாரிக்க , கணக்கில் சில சிக்கல்கள் உள்ளன, ஏடிஎம் காலாவதியாகிவிட்டது , சில சரிபார்ப்பு நடவடிக்கைக்காக உங்களை அழைக்கிறோம் என பல காரணங்களைக் கூறி வங்கிகளில் இருந்தே அழைப்பு விடுப்பது போல் நடித்து OTP எண்னை பெற்றுக்கொண்டு கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகின்றனர்.

எந்த ஒரு வங்கியும் OTP எண், ஏடிஎம் காட்டின் நான்கு இலக்க கடவுச்சொல் குறித்த விவரங்களை கேட்காது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா சூழலை மையமாகக் கொண்டும் மோசடிகள் நடந்து வருகிறது. அவற்றில் ஒன்று தான் தடுப்பூசி முன்பதிவு மோசடி. உங்களுக்கு தடுப்பூசி முன்பதிவு செய்து தருகிறோம் எனக் கூறி அழைப்பு விடுத்து பணப் பறிப்பதில் ஈடுபடுகின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள் :

தேவையான அனைத்துப் பொருட்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கொரோனா காலம் என்பதாலும், வசதியாக இருப்பதாலும் பலர் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுகின்றனர். இப்படி ஷாப்பிங் செய்வது தவறில்லை என்றாலும் , முறையாக கையாளவிட்டால் பணத்தை இழக்க நேரிடும்.

இன்றைய காலத்தில் யாராலும் முறையாக , நம்பக்கூடிய ஒரு வலைத்தளத்தையோ , செயிலியையோ உருவாக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் பாதுகாப்பானது என்ற பொருள் இல்லை.

முடிந்த அளவில் பெயர்பெற்ற, பிரபலமான தளங்களில் பொருட்களை வாங்கலாம். ஒரு வலைத்தளம் அல்லது செயிலி மீது சந்தேகம் ஏற்பட்டால் அந்த செயிலி குறித்து எதேனும் புகார்கள் உள்ளதா என தேடிப் பார்த்து பின்னர் முடிவெடுக்க வேண்டும்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மகளே இது போன்ற மோசடியில் சிக்கியுள்ளார். பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தளமான OLX-ல் விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சைபர் மோசடி கும்பல் அவரை அணுகி சோபாவை வாங்குவதற்காக வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தையும் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த சோஃபாவை வாங்குவதற்கு கெஜ்ரிவாலின் மகள் கூறிய தொகையைத் தருவதாக கூறி க்யூ.ஆர் கோடு (QR Code ) ஒன்றை ஸ்கேன் செய்யுமாறு அவரிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஸ்கேன் செய்த அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 34 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்து விட்டனர்.

ஒருவர் நமக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றால் நாம் தான் அவர்களுக்கு க்யூ.ஆர் கோடு அல்லது லிங்க்கை அனுப்ப வேண்டும், அவர்கள் அனுப்பிய லிங்கில் நாம் செல்லக் கூடாது என்பது ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் நபர்களுக்கு தெரியும். இருப்பினும் அதில் அனுபவம் பெற்ற இளைஞர்களே ஏமாற்றப்படுகிரார்கள் என்றால் சற்று கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலைவாய்ப்பு மோசடி :

வேலைவாய்ப்புக்கு பலர் திண்டாடிவரும் சூழல், அது தொடர்பான மோசடிகளையும் உடனிழுத்து வருகிறது. வேலை வாய்ப்புகளை பார்க்கவே பல செயிலிகளும் , வலைதளங்களும் உள்ளன. அவற்றில் உள்ள பெரும்பாலான தொடர்புகள் நம்பிக்கை மிகுந்ததாக இருப்பினும், மோசடிக்காகவே இயங்கும் பல விளம்பரங்கள் உள்ளது. பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என நம்பி பலர் தங்களது காசை பறிகொடுத்து வருகின்றனர். Linkedin, nakuri போன்ற நம்ப தகுந்த தளங்களிலும் பல போலிக் கணக்குகள் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகன்றனர்.

ஆபாச வீடியோ மோசடி :

டிஜிட்டல் உலகத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் பலர் ஏமாறும் ஒரு மோசடியாக ஆபாச வீடியோ மோசடிகள் உள்ளது. ஆசை வார்த்தைகள் காட்டி இந்த லிங்க்கில் பணம் செலுத்தினால் ஆபாச வீடியோ அனுப்புவதாக கூறி வாஸ்டாப், ஃபேஸ்புக், டெலிகிராம் என பல செயிலிகளில் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கப்படாமல், பயப்படாமல் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். காவல் துறை இதுபோன்ற புகார்களை ரகசியமாக கையாளும்.

கடன் மோசடிகள் :

ஆதார், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை கொடுத்து ஆன்லைன் மூலம் சில நொடிகளில் நமக்கு தேவையான தொகையைக் கடனாக பெற்று விட முடியும். நூற்றுக்கணக்கான வலைதளங்கள் இதற்காக இயங்குகின்றன. ஆனால் முதலில் ஒரு வட்டி சதவீதத்தை கூறிவிட்டு, பின்னர் அதிக வட்டி தர வற்புறுத்துவது, சீக்கிரம் பணத்தை தர சொல்லி தொடர்ந்து செல்பேசிகளில் அழைத்து பணம் செலுத்தவில்லை என்றால் தகாத வார்த்தையில் பேசுவது , மரியாதையற்ற முறையில் மிரட்டுவது என மன உளைச்சல் ஏற்படுத்தக் கூடியதாகவே இவை உள்ளன.

இதுமட்டும் அல்லாமல் சேவை மையம் மோசடி, இன்சூரன்ஸ் மோசடி என எல்லா வகையிலும் பல்வேறு வகையான மோசடிகளில் பலர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

என்ன செய்ய வேண்டும் :

இணையம் என்றாலே மோசடி தான் என அனைத்தையும் புறந்தள்ளி விட வேண்டாம். இணையத்தை முறையாக கையாள தெரிந்துகொள்வது அவசியம். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள், தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் நம்ப வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விசயம் என்றால் பல முறை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கில் சிக்கல் என தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அழைத்து அதனை தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் ஆக இருந்தால் சில அரசின் அதிகாரபூர்வப் பக்கங்களை பின்தொடர்ந்து, https://www.facebook.com/tnpoliceofficial/ . அதில் வரும் செய்திகளை வாசிக்கலாம்.

ஆன்லைன் மோசடி குறித்து அனைவரும் அறிந்து இருங்கள்.. எச்சரிக்கையாகவும் இருங்கள்..!

Please complete the required fields.




Back to top button
loader