This article is from Jun 05, 2019

இளையராஜா பாடல்களை வணிக பயன்பாட்டிற்கு அனுமதியின்றி பயன்படுத்த தடை !

சமீபகாலத்தில் திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், மேடை நிகழ்ச்சிகளில் இளையராஜா உடைய பாடல்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில வருடங்களாவே தனது பாடல்களுக்கான காப்புரிமை பெறுவதில், நீதிமன்றத்தில் வழக்கு என தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் இளையராஜா.

அவரின் பாடல்களை டிவி நிகழ்ச்சிகள், ஆன்லைன் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல இடங்களில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர் என்பதே இளையராஜா நீதிமன்றம் செல்ல காரணமாய் அமைந்தது.

மேலும், இளையராஜாவின் பாடல்களை AGI இசை நிறுவனம்(2013), எக்கோ மியூசிக் நிறுவனம்(2014) மற்றும் கிரி ட்ரேட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடுத்த வழக்கில் இடைக்கால தடையை விதித்தது உயர் நீதிமன்றம்.

வழக்கின் இறுதி விசாரணைகளுக்கு பிறகு அளித்த தீர்ப்பில், அந்நிறுவனங்கள் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதித்ததோடு, அவரின் பாடல்கள் திரையரங்குகள் தவிர வேறெங்கும் பாடக் கூடாது என நிரந்தர தடை விதித்து நீதிபதி அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஆன்லைன், ரேடியோ நிறுவனங்கள், இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போட்டிகள் உள்ளிட்ட வருவாய் ஈட்டுபவைகளில் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

AGI நிறுவனம் 2007-ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு பாடல்களுக்கான உரிமை பெற்று இருப்பதாக தெரிவித்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமை இருப்பதாக கூறிய இளையராஜா உடைய வாதத்தை ஏற்று AGI இசை நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தாம் இசைத்த பாடல்களுக்கு காப்புரிமை பெறுவதில் மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதையே தான் தாமும் செய்வதாகவும், ஆனால் கால தாழ்ந்த செயல் என இளையராஜா தெரிவித்து இருந்தார்.

பல முக்கிய செய்தி நிறுவனங்கள் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை என்றே குறிப்பிட்டு வருகின்றனர். வணிக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லாமல் பயன்படுத்தவே தடை என்பதை முக்கிய செய்திகளில் குறிப்பிடாமல் உள்ளனர். மக்களும் அதனை தவறாக புரிந்து கொன்டு உள்ளனர்.

இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என அறிவித்தது சமூக வலைத்தளங்களில் வேறுவிதமாகவும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அவரின் அனுமதி இல்லாமல் வாகனத்தில், வீட்டில் கூட கேட்கக் கூடாது என்று கூறுவார் என கிண்டல் செய்து வருகின்றனர். ஆகையால், இளையராஜா குறிப்பிட்டு தவறான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு இசைக்கலைஞர் தன் பாடல்களுக்கு காப்புரிமை பெறுவது தவறான செயல் அல்ல. இளையராஜா விவகாரத்தில் வருவாய் ஈட்டும் விதத்தில் பிற நிறுவனங்கள் அவரின் அனுமதியை பெறாமல் இருந்து உள்ளன. இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் இசை போட்டிகள் என பலவற்றிலும் அவரின் பாடல்களே முதன்மை வகிக்கின்றனர்.

எனினும், இந்த உத்தரவால் அவரின் பாடல்களை Youtube தளத்தில் ரீமிக்ஸ் செய்து தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் இளைஞர்களுக்கு பாதிப்பாக இருக்கக்கூடும்.

இளையராஜாவின் அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஆதரவான தீர்ப்பினை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து உள்ளதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியல்ல.

Ilayaraja Has Exclusive Rights Over His Compositions, Rules Madras HC

Please complete the required fields.




Back to top button
loader