சரியாகத்தான் வேலை செய்கிறதா இந்திய வானிலை ஆய்வு மையம் ?

கடந்த காலங்களில் பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.

டிசம்பர் மாதம் 4,5 தேதிகளில் சென்னையில் கனமழை பெய்து அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநகரமே பலத்த பொருட்சேதம் அடைந்தது, பல உயிர்கள் பறிபோயின. சில இடங்களில் வெள்ளம் வடிய பல நாட்கள் ஆயின.

அதனை தொடர்ந்து தற்போது தென் தமிழ்நாட்டில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மிக மிக அதிகமான கனமழை பெய்து பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் இடிந்து விழுந்து, கால்நடைகள் உயிர் பறிபோகி பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு முக்கிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ்(X)தளத்தில் வெளியிட்ட பதிவில் ‘இந்திய வானிலை ஆய்வு மையம் சரியான கணிப்பை வழங்கவில்லை, சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் வழங்கவில்லை, மழையின் தீவிரத்தன்மை சரியாக வழங்கவில்லை’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 21ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதை விட பல மடங்கு அதிக மழை பொழிந்தது என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாக மாநில அரசு சார்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிச.12 அன்றே வெள்ளம் வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை கிளை எச்சரிக்கை விடுத்ததாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதன் உண்மைத்தன்மையை பார்ப்பதற்கு முன், மழையின் அளவு எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதனை முதலில் பார்ப்போம்.

மழையின் அளவு:

மழையின் அளவைப்பொறுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை வகைப்படுத்துகிறது. மழையின் அளவு மில்லி மீட்டர்களில் கணக்கிடப்படுகிறது. 10 மில்லி மீட்டர் என்றால் ஒரு செண்டி மீட்டர் ஆகும். அதன்படி மழை கணக்கிடப்படும் அளவுகள் பின்வருமாறு:

  • 0.1 to 2.4mm – Very Light Rain (மிக லேசான மழை)
  • 2.5 to 15.5mm – Light Rain (லேசான மழை)
  • 15.6 to 64.4mm – Moderate Rain (மிதமான மழை)
  • 64.5 to 115.5mm – Heavy Rain (கனமழை)
  • 115.6 to 204.4mm – Very heavy rain (மிக கனமழை)
  • Above 204.4mm – Extreme Heavy Rain (அதி கனமழை)

நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மையா ?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிவிப்புகளை பார்க்கையில், டிச.12 அன்று வெளியான அறிக்கையில் தென் தமிழ்நாட்டில் லேசானது முதல் கன மழை (6 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை) பொழிவு இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டிச 13,14 ஆகிய தேதிகளில் வந்த செய்திக்குறிப்புகளிலும் இதே தான் கூறப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி வெளியான செய்திக்குறிப்பில் மிக கனமழை பெய்யும் (20 செ.மீ வரை) என்று ‘ஆரஞ்சு அலர்ட்’  கொடுக்கப்பட்டு, 16ஆம் தேதியும் அதே எச்சரிக்கை தான் அளிக்கப்பட்டது.

17ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் தான் ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும், மழையின் தீவிரத்தன்மையை சரியாக குறிப்பிடப்படவில்லை. 17ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 18ஆம் தேதி காலை 8:30 மணிக்குள் பெய்த மழை தான் மிகத்தீவிரமானது. அப்போது பெய்த மழையின் போது தான் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 94.6 செ.மீ மழை பெய்தது. அந்த மழை குறித்து ‘ரெட் அலர்ட்’ 17ஆம் தேதி மதியம் தான் வருகிறது.

12ஆம் தேதியில் இருந்து வெளியாகும் அறிவிப்புகள் அனைத்தும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை மழை பெய்யும் என்றும், பின்னர் வந்த அறிவிப்புகள் மிக கனமழை பெய்யும் (ஆரஞ்சு அலர்ட்) என்று தான் தெரிவித்தன. அதி கனமழை பெய்யும் என்கிற அறிவிப்பு வெளியானதே மழை அதிகம் பொழிந்த நாள் (டிச.17) மதியம் தான்.

ஒன்றிய நிதி அமைச்சர் கூறிய கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் இவ்வளவு பெரிய மழை பெய்யும், பல இடங்களில் 60 செ.மீ மழை பெய்யும் என்றெல்லாம் கணிக்கத் தவறியதற்கு:

  • உண்மையிலேயே இயற்கை காரணமாக இருக்கலாம். அப்படி இருந்தால், ஒன்றிய அரசு அதனை பதிலாக சொல்லலாம்.
  • அல்லது, நம்மிடம் இருக்கும் ஆய்வுக் கருவிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தென் தமிழ்நாட்டிற்கென இரண்டு அல்லது மூன்று ரேடார்கள் பிரத்யேகமாக வைக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கலாம். மாறிவரும் பருவ நிலை காரணமாகவும், உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களால தற்போது இருக்கும் கருவிகளின் போதவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்திருக்கலாம்.
  • அல்லது உண்மையிலேயே 50-60 செ.மீ அளவிற்கு மழை பெய்யும், அரசு போர்க்கால அடிப்படையில் தயாராக வேண்டும், மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படப்போகிறது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் அதனை சுட்டிக்காட்டிடலாம்.

மலிவான அரசியல்:

சென்னை வெள்ளத்தின் போதும் மழையின் தீவிரத்தன்மையை மறைக்கும் வேலை நடைபெற்றது. தற்போதும் அதே போன்று ஒரு வேலை நடந்து வருவதாகவே தோற்றமளிக்கிறது.

அரசின் மீட்பு நடவடிக்கைகளை விமர்சிப்பது, கேள்வி கேட்பது வேறு. ஆனால், ஒரு பெருமழை நிகழ்வை சாதாராண ஒரு நிகழ்வு போல் சித்தரித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்று தவறாக வழி நடத்துவது வேறு. அதனைத்தான் பலர் செய்து வருகின்றனர். தென் தமிழ்நாட்டில் பெய்தது போல் 24 மணி நேரத்தில் 50-60 செ.மீ மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மாநில அரசால் தடுக்க முடியும் என்று ஒரு மாய பிம்பம் எழுப்பப்படுகிறது. இந்த அளவிற்கான மழையானது வளர்ந்த நாடுகளைக்கூட நிலைகுலைய வைக்கும். இதில் இருக்கும் எதார்த்தத்தை சொல்லிவிட்டு, அதன் பின் மாநில அரசிடம் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டினால் அதில் நேர்மை உள்ளதாக கருதலாம்.

ஏன் IMD மீது கேள்விகள் எழுகின்றன

இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தொடர்ந்து கேள்விக்கு உள்ளாவதற்கு அதன் கடந்த கால நிகழ்வுகளே காரணமாக உள்ளது. 2017 ஓக்கி புயல், 2022 அசானி புயல், 2021 & 2022 டெல்லி மழை, 2021-22 சென்னை மழை என்று இதற்கு முன் பல்வேறு முறை மழையை கணிக்கத்தவறியதாக IMD மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் ரேடார் கருவிகள் பழுதாவதால் பல நேரங்களில் வானிலை கணிப்புகள் வழங்குவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என்றால் பெய்யாது, சொல்வது தவறாகத்தான் இருக்கும் என்று கிண்டலும் கேலியுமாக நம்மில் பலர் பேசி இருப்போம். அந்த அளவிற்கு தவறாக வானிலை கணிப்பு இருப்பது தான் எதார்த்தம். இது ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமான பிரச்சனை அல்ல. இந்தியா முழுமைக்கும் இந்த சிக்கல் உள்ளது. இன்று இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக பெங்களூர் திகழ்கிறது. ஆனால், அதற்கென்று பிரத்யேக Doppler Weather Radar இல்லை. கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது செயல்பாட்டிற்கு வராமலேயே உள்ளது.

தற்போது இந்தியாவில் இருப்பது வெறும் 39 Doppler Weather Radar-கள் தான். இதுவே அமெரிக்காவில் 150க்கும் மேல், சீனாவில் 200க்கும் மேல் Doppler Weather Radar-கள்  உள்ளன. வெறும் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலே இதில் இந்தியாவிற்கு உள்ள போதாமை புரியும். இதனை மறைப்பது தேவையற்றது என்பதைத்தாண்டி மோசடியானதும் கூட. இந்த போதாமையை அங்கீகரிப்பதனால் எந்தவித பாதிப்பும் ஒன்றிய அரசிற்கு ஏற்படப்போவது இல்லை. இருப்பினும், இதனை மறைத்து அரசியல் கணக்குகளுக்காக இந்த பேரிடரை பயன்படுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், கூடுதல் நிதி வழங்குவதில் இவ்வளவு பிடிவாதம் காட்டுவது மிகவும் ஆபத்தான போக்கு.

 

ஆதாரங்கள் : 

12th Dec: https://internal.imd.gov.in/press_release/20231218_pr_2700.pdf
13th Dec: https://internal.imd.gov.in/press_release/20231213_pr_2688.pdf
14th Dec: https://internal.imd.gov.in/press_release/20231214_pr_2690.pdf
15th Dec: https://mausam.imd.gov.in/Forecast/marquee_data/Press%20Release%2015-12-2023.pdf
16th Dec: https://internal.imd.gov.in/press_release/20231216_pr_2693.pdf
17th Dec: https://internal.imd.gov.in/press_release/20231217_pr_2695.pdf

Please complete the required fields.
Ramasamy Jayaprakash

Ramasamy works as a Senior Sub-Editor at YouTurn and writes articles in Tamil and English. He also makes videos for YouTurn's Tamil & English YouTube channels.
Back to top button
loader