1931க்கு பிறகு எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஏன் அவசியமாகிறது ?

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம், அதன் முக்கியத்துவம் என்ன? விளக்கம் இதோ..!!

இந்தியாவைப் பொறுத்தவரை இறுதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டிலும், சாதிவாரியான கணக்கெடுப்பு கிட்டத்தட்ட 92 ஆண்டுகளுக்கு முன்னர் 1931-ம் ஆண்டிலும் நடைபெற்றது. இவை இரண்டும் எப்போது நடைபெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2021-ல் நடைபெறவிருந்த 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பீகார் அரசு அக்டோபர் 02 அன்று வெளியிட்டுள்ள சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியாவின் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவிற்கு முன்னுதாரணமான பீகார்:

பீகார் மாநில அரசு தங்களது கொள்கைகள் மற்றும் திட்டங்களை, தனது மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 13 கோடி மக்களுக்கும், சமூக அந்தஸ்து அடிப்படையில் திறம்பட கொண்டு சேர்ப்பதற்காக, ‘பீகார் ஜாதி ஆதாரித் கணனா’ என்று அழைக்கப்படுகின்ற சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை காந்தி ஜெயந்தி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மக்கள் தொகை 27.1286% என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (EBC) மக்கள் தொகை 36.0148% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பட்டியலின மக்கள் தொகை 19.6518% ஆகவும், பட்டியல் பழங்குடியின மக்கள் தொகை 1.6824% ஆகவும், பொதுப் பிரிவினர் மக்கள் தொகை 15.5224% ஆகவும் உள்ளது. இதேபோன்று அம்மாநில மக்கள் தொகையில் இந்துக்கள் 81.9986% ஆகவும், முஸ்லீம்கள் 17.7088% ஆகவும் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 214 சாதிகளுக்கும் வெவ்வேறு தனி குறியீடுகளையும் ஒதுக்கியுள்ளது. ஆனால் இதில் துணை சாதி உட்பிரிவுகள் எதுவும் கணக்கிடப்படவில்லை. 

பீகாரில் இதுவரை 27% உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவு(BC) மக்களுக்கு 12% இடஒதுக்கீடும், 36% உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு(EBC) மக்களுக்கு 18% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதுவே 15% மட்டுமே உள்ள பொதுப்பிரிவினருக்கு (EWS)10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவை மறுபரிசீலனை செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்கள்தொகை கணக்கெடுப்பு Vs சாதிவாரி கணக்கெடுப்பு:

பல்வேறு தரப்பினரும் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்த வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு கணக்கெடுப்புகளும் இந்தியாவில் இதுவரை எவ்வாறு நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே காணலாம்.

இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு (ஒத்திசைவற்ற கணக்கெடுப்பு– non synchronously type) 1865 இல் தொடங்கி 1872 வரை 8 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. எனவே 1872-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. அதே போன்று இந்தியாவில், முதல் ஒத்திசைவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை. 

இவ்வாறு கடந்த 1931-ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்று வந்தன. ஆனால் இரண்டாம் உலகப் போர் காரணமாக, 1941-இல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இடையூறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. எனவே அந்த ஆண்டு முதல் சாதி குறித்த தகவல்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்தியா குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதிலும் சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 341, 342-இன் படி பட்டியலின மற்றும் பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் இந்தக் கணக்கெடுப்பில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இவற்றில் மற்ற சாதிப்பிரிவுகள் கணக்கிடப்படுவதில்லை.

பின்னர் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கவேண்டி பல்வேறு கோரிக்கைகள் வந்தநிலையில், ஒன்றிய அரசு, அனைத்து வீடுகளிலும் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC) என்ற பெயரில் கடந்த 2011ல் இந்த கணக்கெடுப்பை நடத்தியது.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பானது, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 இன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்தச் சட்டத்தின்படி, தனிநபரின் தனிப்பட்ட தகவல்களை அரசாங்கம் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த SECC கணக்கெடுப்பில் தரவுகள் அனைத்தும் பொதுவில் சமர்பிக்கப்பட்டதால் இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி தோல்வியில் முடிந்தது.

சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம்:

    • இந்தியாவில் சமூகத்தில் பின்தங்கிய மக்களும் முன்னேற கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு விகிதங்கள், 1931-இல் கணக்கிடப்பட்ட சாதிரீதியான மக்கள் தொகைக்கு ஏற்பவே, தற்போது வரை வழங்கப்பட்டு வருகின்றன. 1931-லிருந்து தற்போது வரை நாட்டின் மக்கள்தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இடஒதுக்கீடு சரியான முறையில் வழங்கப்பட, சாதிவாரியான தரவுகள் கட்டாயம் தேவை.
    • மேலும் பீகாரில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு 15% மட்டுமே உள்ள பொதுப்பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, ஆனால் 63% உள்ள ஓபிசி பிரிவினருக்கு 30% இடஒதுக்கீடே இதுநாள்வரையில் வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே பீகாரில் தற்போது எடுக்கப்பட்டுள்ள சாதிவாரியான கணக்கெடுப்பின் மூலம் இந்த இடஒதுக்கீடு விகிதங்கள் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 
    • சாதிவாரியான கணக்கெடுப்பின் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும்.
    • மேலும் சாதிவாரியான கணக்கெடுப்பில் ரகசியங்கள் கசிந்தால், அவை ஓட்டு அரசியலுக்காக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-இல் உள்ளபடியே, இந்த கணக்கெடுப்பிலும் பொதுமக்களின் தரவுகள் பாதுகாக்கப்படவேண்டும்.
    • மேலும் சாதிவாரியான கணக்கெடுப்பு தனியாக நடத்தப்பட்டதால் அதிக பொருளாதார செலவுகள் அரசுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இவை 1931ல் நடந்தது போலவே மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படவேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
    • சாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியத்தை, நாட்டில் மக்களிடையே நிலவும் பொருளாதார வேறுபாட்டின் மூலமும் நன்கு அறியலாம். 2020 ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 10% பேர், இந்தியாவின் மொத்த செல்வத்தில் 74.3% வைத்துள்ளனர் என்று கூறுகிறது. இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவலாகும். அதே போன்று நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40% மக்கள், 22.9% செல்வத்தையும்; இவர்களுக்கு கீழே உள்ள 50% பேர் வெறும் 2.8% பங்கு செல்வங்களை மட்டுமே வைத்துள்ளனர். இத்தகைய சமத்துவமற்ற பொருளாதாரப் பகிர்விற்கு முக்கிய காரணம் இந்திய சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவிய சாதி பிரிவினையே தவிர வேறேதுமில்லை.

    • மேலும் 2011-இல் வெளியிடப்பட்ட SECC அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள 24.49 கோடி குடும்பங்களில் 17.97 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களில் 10.74 கோடி குடும்பங்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். 17.97 கோடி குடும்பங்கள் கொண்ட கிராமப்புறங்களில், சுமார் 30% குடும்பங்கள் நிலமற்றவர்களாக உள்ளனர். இவர்கள் முக்கியமாக தங்கள் உடல் உழைப்பில் இருந்து மட்டுமே வருமானத்தைப் பெறுகின்றனர். இதன் மூலம் SC, ST வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலானோர்கள் நிலமற்றவர்களாக இருப்பதை அறிய முடிகிறது

இந்தியா முழுவதும் சமூக நீதியை வலுப்படுத்த சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதற்கு ஏற்றார்போல் இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என நாடுமுழுவதும் வலுவான குரல்கள் தற்போது எழத் தொடங்கி உள்ளன..!

 

ஆதாரங்கள்:

https://www.indiatoday.in/news-analysis/story/whats-behind-oppns-caste-census-chorus-can-it-challenge-pm-modi-in-2024-2361498-2023-04-18

https://indianexpress.com/article/political-pulse/nitish-kumar-plea-against-caste-survey-hc-8591381/

https://www.thehindu.com/news/national/bihar-caste-survey-obcs-ebcs-comprise-more-than-63-of-population/article67371818.ece

https://www.epw.in/journal/2011/33/special-articles/census-colonial-india-and-birth-caste.html

https://timesofindia.indiatimes.com/education/news/first-census-in-india-conducted-from-1865-to-1872/articleshow/7939579.cms

https://censusindia.gov.in/census.website/sites/default/files/2022-05/SSDIV-ENG.pdf

https://www.hindutamil.in/news/opinion/columns/610121-caste-survey-2.html

https://www.oxfam.org/en/india-extreme-inequality-numbers

https://thewire.in/caste/why-does-india-fear-a-caste-census-answers-from-a-conference

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader