இந்தியாவின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து செக் வைக்கும் சீனா ! : அதிர்ச்சி அலசல்

சீனா – இந்திய பிரச்சனை புதிதல்ல ஆனால் சீனா எடுக்கும் நடவடிக்கை அது தரும் நெருக்கடி புதிய உச்சமாக இருப்பது கவனிக்கத்தக்கது . அது எதிர் நின்று சமாளிக்கும் வேலையை நம் அரசு எப்படிச் செய்கிறது என்பதும் முக்கியமானது . உலக அரங்கில் இந்திய பாதுகாப்பு எப்படியானது என பிரதிபலிக்கும் கண்ணாடி அது .

ஐநா பாதுகாப்பு ஆணையத்தின் 1267 பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளைச் சேர்க்க இந்தியா முயற்சித்து வருகிறது. இந்தியாவின் இம்முயற்சிக்குக் கடந்த மூன்று மாதத்தில் மூன்று முறை சீனா முட்டுக்கட்டை.

ஒரு நபரினை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தால் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். மேலும், அந்நபர் மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்படும். இத்தகைய முயற்சிக்குத்தான் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

மும்பையில் தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி சஜித் மிர் என்பவனைச் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சியை இந்தியா ஐநாவில் முன்னெடுத்தது.  சஜித் மிர் அமெரிக்கா மற்றும் டென்மார்க் நாடுகளிலும் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளான்.

இதற்கு முன்னதாக லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சார்ந்த அப்துர் ரஹ்மான் மக்கி மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன்  ரவூப் அஸ்கர் ஆகியோரை இப்பட்டியலில் சேர்ப்பதற்கான முன்மொழிவுகள் இந்தியாவின் துணையுடன் அமெரிக்க ஐநாவில் கொண்டு வந்தது. அப்போதும் ஐநா சபையில் தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தினை கொண்டு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இந்தியா, அமெரிக்காவிற்குச் சாவல் விடும் வகையில் தனது பலத்தைக் காட்டி வருகிறது. 

சஜித் மிர்

மும்பை தாக்குதல் இந்திய வரலாற்றில் முக்கிய துயர சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. இத்தாக்குதல் திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சார்ந்த சஜித் மிர்.

கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதுடன், 238 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரில் 9 பேரினை பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் இந்திய பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்டான். பின்னர் 2012, நவம்பர் 21ம் தேதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

கடந்த 2022, செப்டம்பர் மாதம் ஐநாவின் பயங்கரவாத பட்டியலில் சஜித் மிரை சேர்ப்பதற்கான முன்னெடுப்பினை இந்தியா மேற்கொண்டது. அம்முயற்சிக்குச் சீனா தனது வீட்டோ அதிகாரத்தினை கொண்டு தடுத்தது

ரவூப் அஸ்கர் 

ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவனாக ரவூப் அஸ்கர் செயல்படுகிறான். 1999, டிசம்பர் மாதம் IC-814 என்ற இந்தியப் பயணிகள் விமானத்தைக் கடத்தியது, 2019 புல்வாமாவில் இந்தியத் துணை ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் நடத்தியதில் 42 பேர் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் தொடர்புடையவன். 

ரவூப் அஸ்கரை கடந்த ஆகஸ்ட் மாதம் ஐநாவின் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சியையும் சீனா தடுத்தது. 

அப்துல் ரஹ்மான் மக்கி

இவ்வருடம் ஜூன் மாதத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க அமெரிக்க மற்றும் இந்தியா முன்மொழிந்தது. அதனையும் சீனா தடுத்து நிறுத்தியது. 

இந்தியா சீனா எல்லை பிரச்சனை

இந்தியா மொத்தம் 22,623.3 கிலோ மீட்டர் நீளத்தை தனது எல்லையாக கொண்டுள்ளது. இதில் 15,106.7 கிலோமீட்டரினை நில எல்லையாகவும், 7516.6 கிலோமீட்டரினை கடல் எல்லையாகவும் கொண்டுள்ளது. 

நில எல்லையில் 3,488 கி.மீ தொலைவினை சீனாவுடன் இந்தியா பிரித்து கொள்கிறது  (ஜம்மு & காஷ்மீர் 1597 கி.மீ., இமாச்சல் பிரதேசம் 200 கி.மீ., உத்தரகாண்ட் 345 கி.மீ., சிக்கிம் 220 கி.மீ., அருணாச்சல் பிரதேசம் 1126 கி.மீ.). 

1962ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா சீனா போருக்கு பிறகு இந்தியாவின் சில பகுதிகளை சீனா உரிமை கோரியது. இதன் விளைவாக மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control) என்ற பதத்தினை அறிமுகம் செய்தனர். அதாவது, மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் போது எந்த நிலையில் இருக்கிறதோ அப்படியே தக்க வைத்துக் கொள்ள, மெய்யான எல்லை கட்டுப்பாடுக் கோடு என்பதை நிர்ணயித்தனர்.

ஆனால், 2020 ஜூன் மாதம் இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அம்மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பிறகு கல்வான் பகுதில் தொடர் பதட்டம் நீடித்து வந்தது . இந்நிலையில் பல கட்ட பேச்சு வர்த்தைக்குப்பின் இரண்டு நாட்டு ராணுவமும் பின் வாங்கியது.

பேச்சு வார்த்தை வெற்றி என பலரும் சொல்லி வந்த நிலையில், மெய்யான எல்லை கட்டுப்பாடுக் பகுதியில் இருந்து மேலும் இந்தியா பின்வாங்கியது. இது  மிகப்பெரிய இழப்பு. 

அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள், 2022, ஆகஸ்ட் மாதம் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் சீனா இயந்திரங்களை கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக வீடியோ வெளியானது. மேலும் , ஒரு கிராமத்தையே எல்லையில் உருவாக்கியது என பல சிக்கல்களை தருகிறது.

இந்தியா சீனா வர்த்தக உறவு 

பொருளாதார ரீதியாக பல சீன ஆப்களை தடை செய்து விட்டோம் என வலதுசாரிகள் பலரும் பெரிய சாதனையாக பேசி வந்தனர்.

ஆனால் நிலை வேறானது, கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 87.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதே ஆண்டில் இந்தியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 22.9 பில்லியன் அமெரிக்க டாலராகும். இவ்வளவு பெரிய வித்தியாசம் !

இந்தியா சீனாவிற்கு பெரும்பாலும் மூலப் பொருட்களையே (Raw materials ) ஏற்றுமதி செய்கிறது. ஆனால் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவதோ முடிவுற்ற பொருட்களாகும்.(finished goods )

இந்தியா சீனாவிற்கு இடையேயான ஏற்றுமதி இறக்குமதி நிலவரம் இவ்வாறாக இருக்கிறது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு சீனாவை சார்ந்த சுமார் 200 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டன. அதை தொடர்ந்து 2022ம் ஆண்டும் 54 செயலிகள் தடை செய்யப்பட்டது. செல்போன் செயலிகள் தடை செய்யப்பட்டதுக்கு தகவல் பாதுகாப்பு காரணங்கள் ஒரு பக்கம் கூறப்பட்டது. மறுபக்கமோ, சீனாவின் பொருளாதாரத்தை குறைக்கவே ஒன்றிய அரசு இவ்வாறு தடை விதித்ததாக கூறப்பட்டது. 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து இருந்த வண்ணமே உள்ளன. மேலும் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா கட்டுமான பணிகளை செய்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம்  இந்தியாவின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஐநா-வின் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பது குறித்த முன்னெடுப்புகளில் சீனா முட்டுக்கட்டையாகவும் உள்ளது.

இந்தியாவின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் சீனா தொடர்ந்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கிறது. நமது ஒன்றிய அரசோ போன் ஆப்புகளை தடை செய்வதை, பின் வாங்கியதை எல்லாம் முன்னேற்றம், வெற்றி என்று பறைசாற்றுகிறது.

பல ராஜதந்திர நடவடிக்கை மூலம் நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. சீனா போன்ற நாட்டை பல உறுதியான நடவடிக்கை மூலம் எதிர்கொள்ளுமா அல்லது மீண்டும் மீண்டும் ஆப் தடையே தொடருமா ? பார்ப்போம்.

Links

https://www.business-standard.com/article/economy-policy/india-s-exports-to-china-jump-34-to-22-9-billion-in-2021-shows-data-122012801852_1.html

https://economictimes.indiatimes.com/news/defence/china-blocks-proposal-by-us-and-india-to-blacklist-pakistan-based-26/11-let-handler-sajid-mir/articleshow/94259499.cms

https://www.thehindu.com/news/national/india-us-proposal-lists-rauf-asghar-role-in-every-jem-terror-attack-from-ic-814-to-pulwama/article65759108.ece

https://www.thehindubusinessline.com/news/world/china-blocks-india-us-bid-to-designate-pakistan-based-abdul-rehman-makki-as-global-terrorist-by-un/article65539267.ece

Please complete the required fields.
Back to top button
loader