80 நாடுகளில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா.. கவலை அளிக்கக்கூடிய வகையாக WHO அறிவிப்பு !

கொரோனா தொற்றைப் பரப்பும் பல SARS-CoV-2 வகைகள் உலகளவில் உள்ளன. இவற்றில் ஒரு வகை தான் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வகை. டெல்டா என அழைக்கப்படும் இந்த வகை ஆனது மற்ற வகைகளைக் காட்டிலும் அதிகமாக பரவும் ஆற்றலை கொண்டுள்ளதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்து மேலும் இதனை “variant of concern- VOC” என அறிவித்துள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகள் அவற்றின் வீரியதின் அடிப்படையில் மூன்று நிலையாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் டெல்டா வகையை இரண்டாம் கட்ட நிலையான VOC ( கவலையலிக்கக் கூடிய வகை) என WHO கடந்த சில நாட்களுக்கு முன்பு வகைப்படுத்தியது. இதனையடுத்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் (CDC) டெல்டா வகையை VOC ஆக தற்போது வகைப்படுத்தி உள்ளது. டெல்டா வகை முன்னர் CDC யால் முதல் நிலையில் (Variant of Interest) வகைப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார மையத்தின் இந்த VOC வகைப்படுத்துதலில் டெல்டாவுடன் UK-யில் கண்டறியப்பட்ட “ஆல்பா” , தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட “பீட்டா” மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட “காமா” ஆகிய வகைகளும் இடம்பெற்று உள்ளன.

காரணம் :

ஒரு கொரோனா வைரஸ் வகை VOC நிலையில் வகைப்படுத்தப்பட்டால் WHOவின்படி, அந்த வகையில் தொற்றுநோயின் பரவல் திறன் (mutation) மிக அதிகமானதாக இருக்கக்கூடும், பரவும் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கக்கூடும் என்று பொருள்.

இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை வெளிட்ட சமீபத்திய தரவுகளின் படி, இங்கிலாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கோவிட் நோய் தொற்றில் 96% டெல்டாவால் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்படும் பெரும்பாலானோருக்கு அங்கேயே உருவான ஆல்ஃபா வகையை விட டெல்டா வகை காரணமாக அமைத்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகைக்கு எதிரான தடுப்பூசி செயல்திறன், இரண்டாம் முறை பாதிக்கப்படுவோரின் சதவீதம், தொற்றின் வாழ்வு காலம் குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் CDC டெல்டா மாறுபாடு வகை ஆல்ஃபாவை விட 50% வேகமாக அங்கு பரவுவதாக கூறியுள்ளது. டெல்டா வகையால் கடந்த மே 22 வரை சுமார் 5% சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு ஜூன் 13ல் 10.3%மாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த டெல்டா வகை, மிக வேகமாக பரவக்கூடிய ஒன்றாகவும், சில ஆன்டிபாடி தடுப்பு சிகிச்சைகளின் விளைவை குறைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டு, இந்தியா, இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டெல்டா வகை தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது என்றும், தொடர்ந்து மாறுதலுடன் (mutation) உலகம் முழுவதும் பரவிக்கொண்டே உள்ளது என்று WHO தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “டெல்டா பிளஸ்” மாறுபாட்டின் சமீபத்திய அறிக்கைகளையும் WHO கண்காணித்து வருகிறது. இது குறித்து WHOவின் கோவிட்-19 தொழில்நுட்ப தலைவர் கூறியதாவது, ” சில டெல்டா வகைகளில், கூடுதல் பிறழ்வுக்கு (mutation) பதிலாக ஒரு குறைவான பிறழ்வு அல்லது ஒரு நீக்குதலைக் கண்டுள்ளோம். எனவே இது தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம் ” என தெரிவித்துள்ளார்.

இந்த டெல்டா பிளஸ் வகை இந்தியாவில் மூன்றாம் கொரோனா அலைக்கு வழிவகுக்கும் என மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்த நிலையில் , “இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த டெல்டா ப்ளஸ் என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லை என்றும், அதன் மாற்றத்தின் விளைவை நாம் கண்காணிக்க வேண்டும்” என நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார்.

Links :

https://www.who.int/en/activities/tracking-SARS-CoV-2-variants/

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/992981/10_June_2021_Risk_assessment_for_SARS-CoV-2_variant_DELTA.pdf

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/993879/Variants_of_Concern_VOC_Technical_Briefing_15.pdf

https://edition.cnn.com/2021/06/15/health/delta-variant-of-concern-cdc-coronavirus/index.html

https://www.cnbc.com/2021/06/16/who-says-delta-covid-variant-has-now-spread-to-80-countries-and-it-keeps-mutating.html

covid-19-delta-plus-variant-not-yet-classified-as-variant-of-concern-niti-aayog-member

Please complete the required fields.
Back to top button