2024 மக்களவைத் தேர்தலில் உலக சாதனை படைத்த இந்தியா.. 64.2 கோடி பேர் வாக்களித்து வரலாற்று சாதனை!

64.20 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்!

2024 மக்களவைத் தேர்தல் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. 64.20 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். மேலும் 31.2 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர், இதுவே உலகில் அதிகளவில் வாக்களித்துள்ள பெண் வாக்களர்களின் எண்ணிக்கை. ஆனால் இந்த எண்ணிக்கையில் தபால் வாக்குகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்துள்ள 2024 மக்களவைத் தேர்தல்:

2019 பொதுத் தேர்தலில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 91.2 கோடியாக இருந்த நிலையில், 2024 பொதுத் தேர்தலில், இது 96.8 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 64.20 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய அனைத்து G7 நாடுகளின் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட இது 1.5 மடங்கு அதிகம்.

மேலும் 2019 பொதுத்தேர்தலில் 540 மறுவாக்குப்பதிவுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 39 மறுவாக்குப்பதிவுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன என்றும், 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டனர் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

2024 பொதுத்தேர்தல் வாக்கு சதவீதம்:

ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2024 பொதுத்தேர்தலில், இந்திய அளவில் 65.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 67.40 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது இந்த வாக்கு சதவீதம் குறைந்துள்ளதை தெளிவாக காண முடிகிறது. வாக்குப்பதிவு சதவீதம் ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பதிவாகியுள்ள விதம் குறித்து கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தல்: இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு ஏப்ரல் 19, 2024 அன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரண்டாம்கட்ட தேர்தல்: கேரளாவில் உள்ள 20 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் ஏப்ரல் 26, 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மூன்றாம்கட்ட தேர்தல்:  11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் மே 7, 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நான்காம்கட்ட தேர்தல்: இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் மே 13, 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 69.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஐந்தாம்கட்ட தேர்தல்: ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 49 இடங்களில் மே 20, 2024 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 62.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆறாம்கட்ட தேர்தல்: எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் மே 25, 2024 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஏழாம்கட்ட தேர்தல்: எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் ஜூன் 1, 2024 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:

மாநிலவாரியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ததில், மாநிலங்களைப் பொறுத்தவரையில் அஸ்ஸாமில் அதிகபட்சமாக 81.56 சதவீத வாக்குகளும், யூனியன் பிரதேசதங்களைப் பொறுத்தவரையில் லட்சத்தீவில் 84.16 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் 69.72 % ஆக உள்ளது.

மாநிலங்களிலேயே 56.19 சதவீத வாக்குகளுடன் பீகார் கடைசி இடத்தில் உள்ளது.

ஆதாரங்கள்:

https://www.ndtv.com/video/world-record-of-642-million-voters-says-election-commission-799088

https://www.newsonair.gov.in/cec-rajiv-kumar-says-india-has-created-world-record-with-642-million-voters/

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader