ஓராண்டில் 60% உயர்ந்த பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை.. சமையல் எண்ணெய் விலை ஏன் உயருகிறது ?

கோவிட்-19 பாதிப்பு, ஊரடங்கு என சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் இச்சூழ்நிலையில் சில்லறை வணிக சமையல் எண்ணெய்களின் மாத சராசரி விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மே 2021ல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, மக்களால் அதிகம் புழங்கப்படும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களின் விலை கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 60% அதிகரித்துள்ளது.

Advertisement

நிலக்கடலை, கடுகு, வனஸ்பதி, சோயா, சூரியகாந்தி மற்றும் பாமாயில் போன்ற சமையல் எண்ணெய்களின் விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அரசு தரவுகளின்படி, கடலை எண்ணெயின் சில்லறை விலை 2020 ஜூன் உடன் ஒப்பிடுகையில் ஜூன் 2021ல் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதுபோலவே கடுகு எண்ணெய் கிட்டத்தட்ட 50 சதவீதமும், வனஸ்பதி விலை 45 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலைகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 60 சதவீதமும் அதிகரித்து உள்ளது.

மே மாத நிலவரம்படி, கடந்த ஆண்டு கிலோ ரூ.90 ஆக இருந்த வனஸ்பதியின் விலை இந்த ஆண்டு ரூ.140 ஆக அதிகரித்து உள்ளது. அதுபோல பாமாயிலின் சில்லறை விலை ரூ.87.5லிருந்து 132.6 ரூபாயாகவும், சோயா எண்ணெய் ரூ.55 லிருந்து ரூ.158 ஆகவும், கடுகு எண்ணெய் 110 ரூபாயிலிருந்து 163.5 ரூபாய் ஆகவும் அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையின் அளவு சுமார் 230 லட்சம் டன் லிட்டர்கள். அதில் 70-80 லட்சம் டன் லிட்டர்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் தேவையில் 56% இறக்குமதி மூலமாகவே இந்தியா பூர்த்தி செய்கிறது. பாமாயிலை எடுத்துக்கொண்டால், இந்தியா தான் உலகிலேயே அதிகளவு பாமாயில் இறக்குமதி செய்து வருகிறது. எனவே, உள்நாட்டு எண்ணெய் விலைகள் சர்வதேச விலையின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. வர்த்தக அமைப்பான சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (எஸ்இஏ) தரவின் படி ஒரு வருடத்திற்கு முன்னர் 599 டாலராக இருந்த கச்சா பாமாயிலின் ஒரு டன் விலை 2021 ஏப்ரலில் 1,173 டாலராக அதிகரித்து உள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில், பாமாயில் 7 மில்லியன் டன், சோயா எண்ணெய் 3.5 மில்லியன் டன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் 2.5 மில்லியன் டன் என ரூ.61,559 கோடி மதிப்பிலான சுமார் 13.35 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

பாமாயிலை பொருத்தவரை உலக உற்பத்தியில் 85 சதவீத பங்கைக் கொண்ட மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை இந்தியா நம்பி உள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக இவ்விரண்டு நாடுகளிலும் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரித்து உள்ளது.


இவையேல்லாம் விலையேற்றத்திற்கு காரணமாக இருந்தாலும், இந்திய அரசு சமையல் எண்ணெய்களின் மீது போடப்படும் வரியும் அதிகமாக உள்ளது. இந்திய அரசு கடந்த பிப்ரவரி 2021 முதல், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் மற்றும் சமூக நலன் செஸ் ஆகியவற்றை உள்ளடங்கிய கச்சா பாமாயில் இறக்குமதி வரியை 36.75 % சதவீதமாக உயர்த்தியது.

Advertisement

அதேபோல், தற்போது சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் இறக்குமதி வரி 59.40% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெயின் வரி 49.50% ஆகவும் உள்ளது. இந்த இறக்குமதி வரியை குறைத்தால் விலை உடனடியாக குறையும் எனவும் கூறப்படுகிறது.

Links :

why-edible-oils-are-costlier

edible-oil-prices-rise-factors-at-play-and-how-govt-action-is-impacting-it-explained

govt-expects-edible-oil-prices-to-cool-off-with-release-of-imported-stock

import-duty-on-edible-oils

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button