இந்தியாவில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 83% பேர் இளைஞர்கள்.. சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் இதோ..!!

சமீபத்தில், மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 என்ற தலைப்பில் இந்திய வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டனர். இந்தியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரம், தொழிலாளர் சந்தை, கல்வி, திறன்கள் மற்றும் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்து இந்த அறிக்கை விளக்குகிறது.

மனித மேம்பாட்டுக்கான நிறுவனம் (IHD) என்பது 1998 ஆம் ஆண்டில் இந்திய தொழிலாளர் பொருளாதார சங்கத்தின் (ISLE) கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது வறுமை இல்லாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பை வளர்க்கும் ஒரு சமூகத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதே போன்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) என்பது சர்வதேச அளவில் தொழிலாளர்கள் சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைய, ஐ.நா வின் கீழ் செயல்படும் சிறப்பு நிறுவங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ளது.

மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் மூலம், இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்மையால் இன்றும் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR), தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR) மற்றும் வேலையின்மை விகிதம் (UR) ஆகியவை 2000 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலங்களில் நீண்டகால சரிவைக் கண்டுள்ளன என்றும், ஆனால் 2019 க்குப் பிறகு இவை முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

வேலையின்மையால் அவதிப்படும் இளைஞர்கள்:

‘இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024’ வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2022 இல் இந்தியாவில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 83% பேர் இளைஞர்கள் என்பதை அறிய முடிகிறது. மொத்த வேலையற்ற இளைஞர்களில், படித்த இளைஞர்களின் பங்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் 54.2% இல் இருந்து 2022 இல் 65.7% ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. மேலும் 2000, 2012, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தொழிலாளர்கள் (Labour Force) பங்கேற்பு விகிதம் குறித்த தரவுகளை கீழே “The Hindu” குறிப்பிட்டுள்ள வரைப்படத்தின் மூலம் தெளிவாகக் காணலாம்.

அதன்படி பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் பல ஆண்டுகளாக மோசமான வேலைவாய்ப்பு பிரச்சனைகளுடன் போராடி வருகின்றன.

மேலும் 2021 ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் 27 சதவீதமாக இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை, 2036 ஆம் ஆண்டில் 23 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் இளைஞர்களிடையே வேலையின்மை குறையும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் ஏறத்தாழ 90% தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளிலேயே (Informal Work) ஈடுபட்டுள்ளனர். மேலும் கணிசமான இளைஞர்களுக்கு அடிப்படை டிஜிட்டல் கல்வியறிவே இல்லை என்றும், கிட்டத்தட்ட 75 சதவீத இளைஞர்களுக்கு மின்னஞ்சல்களுடன் இணைப்புகளை (Attachments) சேர்த்து அனுப்ப தெரியவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

வேலைவாய்ப்பில் அதிகரித்துக் காணப்படும் பாலின இடைவெளி:

இந்திய வேலைவாய்ப்புகளில் கணிசமான அளவு பாலின இடைவெளி காணப்படுகிறது. குறிப்பாக உயர்கல்வி பெற்ற பெண்களிடம் வேலையின்மை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனை “The Hindu” வெளியிட்டுள்ள வரைபடத்தில் தெளிவாகக் காணலாம்.

மேலும் 2022 கணக்கெடுப்பின் படி, தொழில் துறையில் (Labour Force) வேலைக்கு சேரும் ஆண்களின் எண்ணிக்கை 61.2% ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 21.7% ஆகவும் உள்ளது. 2012 முதல் 2019 வரையில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாகவும், 2019 கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பே, பெண்கள் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதிகம் சென்றதால் இந்த எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

வேலையின்மையால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகள்:

2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் இடம்பெயர்வு விகிதம் (Migration Rate) சுமார் 40% இருக்கும் என்றும், நகர்ப்புற மக்கள் தொகை 607 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கடந்த இருபது ஆண்டுகளில் (2000-2021) இந்தியாவில் இடம்பெயர்வு விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கீழே உள்ள வரைபடத்தின் மூலம் அறியலாம்.

மேலும் இந்த இடம் பெயர்வு இந்தியாவில் பெரும்பாலும் கிழக்கு , வடகிழக்கு மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து, தெற்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கியே பெரும்பாலும் இருக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 

வேலையின்மையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

வேலைவாய்ப்பின் தரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர் சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் பின்வரும் உத்திகளை இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.

  • வேலைவாய்ப்புகளை அதிகளவில் ஏற்படுத்தி தருதல்.
  • தொழில் துறைக்குத் தேவைப்படும் திறன் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அளிப்பதன் மூலம் வேலையின்மையைக் குறைத்தல்.
  • இளைஞர்களுக்கான அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய இளைஞர்களை ஊக்குவித்தல்
  • நகரமயமாக்கல் மற்றும் தொழிலார்களின் இடம்பெயர்வுகளை அதிகளவில் ஊக்குவித்தல்
  • வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை கணிசமாக உயர்த்துதல்

ஆதாரங்கள்:

https://www.ilo.org/wcmsp5/groups/public/—asia/—ro-bangkok/—sro new_delhi/documents/publication/ wcms_921154.pdf

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader