This article is from May 11, 2022

ராஜபக்சேவை இந்தியாவிற்கு அனுப்பவில்லை, இந்தியா ராணுவத்தை அனுப்பாது : இந்திய தூதரகம் !

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பு காரணமாக, இலங்கையின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அந்நாடு முழுவதும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, அவர் இந்தியாவிற்கு சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அதை மறுத்து உள்ளது.

Twitter link 

மே 10-ம் தேதி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், ”  குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதை உயர் ஆணையரகம் மறுக்கிறது. இது போலியான மற்றும் பொய்யான அறிக்கை, இவ்வாறன செய்திகளை கடுமையாக மறுக்கிறோம் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.

மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலையின் கடற்படை தளத்தில் உள்ள pillow house எனப்படும் மாளிகையில் தஞ்சம் புகுந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிற நிலையில், நாட்டின் அரசியலிலும், பொருளாதரத்திலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற கேள்விகள் எழுந்து வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader