பஜனை பசியை போக்காது பிரதமரே, உணவு மானியத்தை குறைப்பது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக உரையாற்றுவது வழக்கம். அதன்படி ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி பேசியிருந்தார். 

பிரதமர் மோடி குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பாகப் பேசுகையில், ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கப் பாடல்கள்-இசை, பஜனைப்பாடல்கள் கூட பயனாகும் என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? மத்தியப் பிரதேசத்தின் ததியா மாவட்டத்திலே “என்னுடைய குழந்தை இயக்கத்தில்” இது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது எனப் பேசியிருந்தார்.

பஜனை பாடல்களின் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்க முடியும் என்பது போலப் பேசியிருக்கிறார். உண்மையில் அக்குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கியது, அதற்காக செயல்படுத்திய திட்டம் . அதன்படி  அப்பகுதி பெண்கள் அங்கன்வாடி மையத்திற்காக கை நிறையத் தானியங்களைக் கொண்டு வந்து குழந்தைகளுக்கான உணவை தயார் செய்து  கொடுத்தனர்  . பிரதமர் மோடி இந்நிகழ்வினை குறிப்பிடுவதை விட  பஜனையையே  முக்கியமாக குறிப்பிட்டுள்ளார் . 

உலக பசி தரவரிசையில் இந்தியாவின் நிலை 

ஊட்டச்சத்துக்கு பஜனை போதும் எனில் அதைச் செய்ய பூசாரி போதும் , பிரதமர் தேவை இல்லை . உண்மையில் ஊட்டச்சத்து குறைப்பாட்டை சரி செய்யவேண்டிய விஷயங்கள் செய்யப்பட்டதா ?

உலக அளவிலான பசி குறியீட்டுத் தரவரிசையில் 135 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டது. இத்தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலை 101-வது இடமாகும். பாகிஸ்தான் 92-வது இடத்திலும்,  சீனா முதல் 18 இடங்களுக்கு உள்ளாகவும் இருக்கிறது. பாகிஸ்தானை விட பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம் என்பது எத்தனை மோசமானது ?

2019-ல் உச்சநீதிமன்றத்தில் ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பட்டினி சாவு குறித்து எந்த விவரங்களும் இல்லை. அப்படி என்றால், நாட்டில் பட்டினி சாவே இல்லையா? என அம்மனுவினை விசாரித்த நீதிபதி ரமணா கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், எந்த உறுதியான பதிலும் தரப்படவில்லை . பசிக் குறியீட்டில் பின்தங்கிய நிலையில் பட்டினிச் சாவு பற்றிய ஒரு முழுமையாக தகவல் கூட சேகரிக்கப்படவில்லை ஏன் ?

ஒன்றிய அரசு ஒதுக்கிய உணவு மானியம் 

ஒன்றிய அரசு ஒதுக்கிய உணவு மானிய நிதியினை கடந்த 2016-17-ம் நிதியாண்டிலிருந்து முழுமையாகச் செலவு செய்யவில்லை . தொடர்ந்து  உணவிற்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது .  

2016-17-ம் நிதியாண்டில் உணவு மானியத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,34,835 கோடியில் 82 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நிதியாண்டுகளாக 2017-18ல் ஒதுக்கப்பட்ட நிதியில் 69 சதவீதமும், 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் முறையே 60 மற்றும் 59 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் உணவு மானியத்திற்கான செலவினை ஒன்றிய செலவு குறைத்ததை அறிய முடிகிறது.

கொரோனா காலமான 2020-21 நிதியாண்டில் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் அதிகமாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியோ ரூ.1,15,570 கோடி, ஆனால், செலவு செய்ததோ ரூ.4,22,618 கோடி.  அதன் பின் மீண்டும் நிதி குறைத்தே  ஒதுக்கப்பட்டுள்ளது 

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து 

உணவு என்பதைத் தாண்டி சத்துள்ள உணவு என்பது சரிவிகித வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் 2021-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி புள்ளிவிவரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்தகவலின்படி இந்தியாவிலுள்ள குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் 35.5 சதவீதம், உயரத்திற்கேற்ப உடல்  எடை இல்லாதவர்கள் 19.3 சதவீதம் மற்றும் குறைவான எடை உள்ளவர்கள் 32.1 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெண்களின் ஊட்டச்சத்து பற்றிய தகவலில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 18.7 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறப்பு விகிதம் 

1000 குழந்தைகள் பிறக்கிறார்கள் எனில், அதில் எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்பதே இறப்பு விகிதமாகும். 2021-ன் தரவுகளின்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 27 குழந்தைகள் இறக்கின்றனர்.

2022, பிப்ரவரி 8-ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலின்படி 2019-ல் இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 30 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேறுகால இறப்பு விகிதம் என்பது ஒரு லட்சம் குழந்தைகள் பிறக்கும் போது இறக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இதன்படி, இந்தியாவில் பேறுகாலத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2017-19-ன் படி 103. 2030-ல் இவ்விகிதத்தை 70-ஆகக் குறைக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்தியாவின் ஊட்டச்சத்து நிலை இவ்வாறாக இருக்க உணவிற்காக ஒதுக்கப்படும் மானியமோ முழுமையாகச் செலவு செய்யப்படாமல் இருக்கிறது. பஜனை பாடல்களோ, இசையோ மக்களின் பசியை போக்கவும் செய்யாது, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவினை உயர்த்தவும் செய்யாது.

link : 

Tamil II 92nd Edition of Mann Ki Baat || 28th August 2022

மனதின் குரல், ஆகஸ்ட் 2022

2021 GHI report

Malnutrition-Free India

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781982

infant-mortality-rate

Status of IMR and MMR in India

Maternal health

india-maternal-mortality-ratio-declines-by-10-points

Please complete the required fields.




Back to top button
loader