This article is from Jun 26, 2021

தடுப்பூசியில் இந்தியா உலக சாதனையா? வெற்று விளம்பரமா?

ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்தியாவின் சாதனை , தற்போது விளம்பரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலாகவே தெரிகிறது.

முன்கதை :

இந்தியாவில் தொடர்ந்து மாற்றங்கள் பெற்று வரும் தடுப்பூசி கொள்கையின் சமீபத்திய மாற்றம் தான் தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய தடுப்பூசிக் கொள்கை. முன்பு இருந்தது போல் 45+ வயதுடையவருக்கான தடுப்பூசிகளை ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு விநியோகிக்கும் , 18-45 வயதுடையவர்களுக்கான தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் குறிப்பிட்ட விலை கொடுத்து கொள்முதல் செய்யவேண்டும் , அதிலும் ஒன்றிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

தடுப்பூசி நிர்வாகத்தில் மாநில அரசுகளை தன்னிச்சையாக செயல்பட விட வேண்டும் என பல அரசியல் கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே கண்டனங்கள் எழுந்து வந்தன இதனிடையில் ஜூன் 2 ஆம் தேதி , ‘நிர்வாகக் கொள்கைகளால் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும்போது “அமைதியான பார்வையாளர்களாக” நீதிமன்றங்கள் இருக்க முடியாது, ஒன்றிய அரசின் இந்த தடுப்பூசிக் கொள்கை முதல் பார்வையிலேயே நியாயமற்ற, பகுத்தறிவற்றதாக உள்ளது.” என உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியதோடு , 18-44 வயதுடையவர்களுக்கு அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்காததைச் சுட்டிக்காட்டி , “2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தடுப்பூசிகளை வாங்குவதற்காக ரூ.35,000 கோடியை ஒதுக்கியிருந்தது. தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கையின் அடிப்படையில் , இந்த நிதிகள் இதுவரை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளன என்பதையும், 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவற்றை ஏன் பயன்படுத்த முடியாது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவிக்கப்படவே, அப்போது தோன்றியது தான் தற்போது நடைமுறை படுத்தப்பட்டு “அனைவருக்கும் இலவச தடுப்பூசி” என அடிப்படைக் கடமையை சாதனை செயலாக பரப்புரையாக்கப்படும் இந்த புதிய தடுப்பூசிக்கொள்கை.

உலக சாதனை:

கடந்த மே 14 ஆம் தேதி இந்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே பால் , “இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஐந்து மாதங்களில் இரண்டு பில்லியன் டோஸ் (216 கோடி) தடுப்பூசிகள் நாட்டில் தயாரிக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து மே 28 ஆம் தேதி , “இந்தியா 216 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் தெளிவுபடுத்தியது, அதாவது குறைந்தது 108 கோடி மக்கள் தங்கள் ஜப்களைப் (jabs) பெற முடியும். எனவே, டிசம்பர் 2021க்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.” என ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இந்த நிலையில் தான் உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் 90 லட்சத்துக்கும் மேலான (90.86) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு , உலக சாதனையுடன் ஜூன் 21 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கியது ஒன்றிய அரசு.

இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேறு எந்த நாட்டிலும் செய்யப்படாத அளவிற்கு ஒரே நாளில் கிட்டத்தட்ட 90 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது சாதனையை தாண்டி ஒரு அத்தியாவசிய தேவையும் ஆகும். அதை தான் ஒன்றிய அரசும் செய்திருக்கிறது.

ஆனால்… சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 2021 கணிப்புகளின்படி, இந்தியாவின் 18 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 86.5 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 173 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.

ஜனவரி 16 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் பணி ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி ஜூன் 25 வரை 31 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. இதில் இரண்டாம் முறையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை வெறும் 5.3 கோடியே!

டிசம்பர் 2021 க்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டுமேயானால் இன்னும் 142 கோடி தடுப்பூசிகள் தேவை. அதாவது இன்னும் 190 நாட்களில் கிட்டத்தட்ட நாள் ஒன்றிற்கு 74 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய முக்கியமான நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணியை ஒவ்வொரு நாளும் முக்கியமான நாளாக கருதவேண்டும்.

மாறாக ,பாஜக ஆளும் மாநிலங்களை எடுத்துக்கொண்டு அந்த மாநிலங்களில் ஜூன் 21க்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை தரவுகளை நோக்கினால் ஜூன் 21 ஆம் தேதி மட்டும் இந்திய அரசு உலக சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கதோடு செயல்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.

ஹரியானா :

கடந்த 30 நாட்களில் அதிகபட்சமாக ஜூன் 17 ஆம் தேதி 1.23 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி வந்த ஹரியானா அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஜூன் 20 ஆம் தேதி வெறும் 37 ஆயிரம் ஊசிகளை செலுத்தி, ஜூன் 21 ஆம் தேதி 5 லட்சம் ஊசிகளை செலுத்தியுள்ளது. மீண்டும் ஜூன் 22 ஆம் தேதி 76 ஆயிரமாக குறைந்துள்ளது.

குஜராத் :

கடந்த 30 நாட்களில்’அதிகபட்சமாக ஜூன் 19 ஆம் தேதி 3 லட்சம் தடுப்பூசி செலுத்திய மாநிலம் 20 ஆம் தேதி 1.89 லட்சமாக குறைந்து ஜூன் 21 ஆம் தேதி மட்டும் 5 லட்ச தடுப்பூசி செலுத்தியுள்ளது. ஜூன் 25 ஆம் தேதி 3 லட்சம் ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் :

இருக்கும் மாநிலங்களிலேயே மிக கடுமையான வேறுபாடுகளைக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம். ஜூன் 17 ஆம் தேதி முதலே இம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி திடீரென்று குறைந்துள்ளது. ஜூன் 14 இல் 4.9 லட்சம் செலுத்திக்கொண்டிருந்த மாநிலம் ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதி செலுத்தப்பட்ட ஊசிகளின் எண்ணிக்கை முறையே 22,000 மற்றும் 692. ஜூன் 21 ஆம் தேதி மட்டும் 17.4 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஜூன் 25 இல் வெறும் 19 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் ஜூன் 20 ஆம் தேதி 68 ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஜூன் 21 ஆம் தேதி 11.5 லட்சம் ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதுபோல பீஹாரிலும் 20 ஆம் தேதி 1.3 லட்சம் ஊசிகள் செலுத்தப்பட்டு ஜூன் 21 இல் 6.4 லட்சம் ஊசிகள் போடப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசம் :

பிஜேபி ஆளும் மற்ற மாநிலங்களில் வெறும் 21 ஆம் தேதி மட்டும் அதிக ஊசிகள் செலுத்தப்பட்டு பின்னாட்களில் அந்த எண்ணிக்கை திடீர் சரிவை சந்திக்க , உத்தர பிரதேசம் மட்டும் ஒரு அளவிற்கு சீரான எண்ணிக்கையை பின்பும் தொடர்ந்திருக்கிறது. ஆனால் அங்கும் ஜூன் 20 இல் வெறும் 8000 தடுப்பூசிகள் போடப்பட்டு ஜூன் 21 இல் 7.6 லட்சம் ஊசிகள் போடப்பட்டுள்ளன. 30 நாட்கள் ஒப்பீடு அளவில் பார்த்தால் இப்படி ஒரு நாள் திடீரென்று எண்ணிக்கை குறைக்கப்படுவது அங்கு வாடிக்கையாகவே இருந்துள்ளது.

தமிழ்நாடு :

தமிழ்நாட்டிலும் இந்த மாறுபாடுகள் உள்ளது , ஜூன் 20 ஆம் தேதி 1.5 லட்சம் ஊசிகள் போடப்பட்டு ஜூன் 21 இல் 4.4 லட்சம் ஊசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் இந்த மாறுபாடு ஒரு திடீர் மாறுபாடாக இல்லை. மற்ற மாநிலங்களில் 21 க்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அபரிமிதமான சரிவை சந்திக்க தமிழ்நாடு அப்படி சரியவில்லை. ஜூன் 25 ஆம் தேதி 3.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதே இதற்கு சான்றாக உள்ளது.

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என உலகெங்கும் தடுப்பூசி செலுத்தும் முனைப்பில் ஈடுபட ஆளும் கட்சியான பாஜக அரசும் அதே ஆயுதத்தை ஒரு நாள் சாதனைக்காக பயன்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

Links:

https://www.businessinsider.in/india/news/supreme-court-slams-centres-covid-19-vaccination-policy-for-being-arbitrary-and-irrational-demands-to-know-details-on-money-spent-on-vaccine-shots/articleshow/83194269.cms

https://www.youtube.com/watch?v=ijLcZ8G84FI

https://dashboard.cowin.gov.in/

Please complete the required fields.




Back to top button
loader