பட்டியலின மக்கள் மீதான தாக்குதலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் : 2021 என்.சி.ஆர்.பி அறிக்கை

ஆகட்ஸ் 30 தேதியன்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திலிருந்து (என்.சி.பி.ஆர்) கடந்த 2021 ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் வெகுவாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதே தவிர, குற்றங்கள் குறைந்தபாடில்லை.

எம்மாதிரியான தாக்குதல் நடைபெறுகிறது என்றால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை பட்டியலின குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் வயது வேறுபாடியின்றி தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

தாக்குதல் : 

இவ்வறிக்கையில் உள்ள தகவலின்படி, கடந்த 2019இல் இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 45,876. 2020இல் இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலின் எண்ணிக்கை 50,202.

அதுவே 2021இல் இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலின் எண்ணிக்கை 50,744 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை ஒப்பீடு செய்யும்போது, பட்டியலின மக்கள் மீதான தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது என்பதை காண்பிக்கிறது.

மேலும், இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் அதிகம் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. 2021இல் மட்டும் 13,146 தாக்குதல்கள் நடைபெற்று உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. அங்கு 7,524 குற்றங்கள் நடைபெறுகிறது. இது உத்தர பிரதேச மாநிலத்தை ஒப்பீடு செய்யும்போது சரிபாதி விகிதத்தில் உள்ளது.

பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்களின் எண்ணிக்கையில் 7,214 உடன் மத்திய பிரதேசம்  மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இம்மூன்று மாநிலங்கள் தான் கடந்த 2021இல் பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

அதற்கு அடுத்த நிலையில், பீகார் மாநிலத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்களின் எண்ணிக்கையாக 5842 நடைபெற்று இந்திய அளவில் நான்காவது இடத்தில் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா 2,503 உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2019இல் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலின் எண்ணிக்கை1,144 ஆகவும், 2020இல் 1274 ஆகவும் இருந்துள்ளது. இதுவே 2021இல் பட்டியலின மக்களின் மீது நடைபெற்ற தாக்குதலின் எண்ணிக்கை 1,377 ஆக பதிவாகியுள்ளது. என்.சி.பி.ஆர் தகவலின் அடிப்படையில் தமிழகத்திலும் பட்டியலின மக்கள் மீது நடைபெறும் குற்றம் மற்றும் தாக்குதல் அதிகரிக்கவே செய்துள்ளது.

கொலை சம்பவங்கள் : 

இந்தியா முழுவதிலும் கடந்த ஆண்டு பட்டியலின மக்கள் 990 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும், 1045 கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று உள்ளது .

இதில் மாநிலம் வாரியாக பிரித்தால் உத்தர பிரதேசத்தில் 201 கொலைச் சம்பவங்கள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. பீகாரில் 176 கொலைச் சம்பவங்கள் பதிவாகி இரண்டாமிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 93 கொலைச் சம்பவங்கள் பதிவாகி மூன்றாம் இடத்தில் உள்ளது.

கர்நாடகாவில் 86 கொலைச் சம்பவங்களும், ராஜஸ்தானில் 85 கொலைச் சம்பவங்களும் பதிவாகி உள்ளது. இதில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது.

கொலை முயற்சி சம்பவங்கள் : 

இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது கொலை முயற்சி சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடமாக முதலிடத்தில் இருப்பது கர்நாடகா. அம்மாநிலத்தில் மட்டும் 107 கொலை முயற்சி சம்பவங்கள் பட்டியலின மக்கள் மீது நிகழ்ந்துள்ளது.

பீகாரில் 158 சம்பவங்கள் நடைபெற்று மூன்றாவது மாநிலமாக உள்ளது. நான்காவது இடத்தில் உத்திர பிரதேசத்தில் 107கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தானில் 90 கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.

இதில் தமிழகத்தில் 2021இல் மட்டும் 53 கொலை சம்பவங்களும், 61 கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் கடந்த 2021இல் இந்திய அளவில் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.

பாலியல் வன்புணர்வு : 

2021இல் இந்திய அளவில் பட்டியலின பெண்களை பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் 3889 என பதிவாகி உள்ளது. அதில் மாநிலங்கள் வாரியாக ராஜஸ்தானில் 573 சம்பவங்கள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 565 சம்பவங்கள் பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் 561 சம்பவங்கள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து,  மகாராஷ்டிராவில் 397 சம்பவங்களும், தெலுங்கானாவில் 257 சம்பவங்களும், ஹரியானாவில் 234 சம்பவங்களும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் சுமார் 123 பட்டியலின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்திய அளவில் பட்டியலின சிறுமிகள் மீது நடந்த பாலியல் சம்பவங்கள் மொத்தம் 1287. அதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் 189 சம்பவங்கள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 163 சம்பவங்கள் பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில் 145 சம்பவங்களும், தெலுங்கானாவில் 119 சம்பவங்களும், கர்நாடகாவில் 118 சம்பவங்களும் பதிவாகி உள்ளது. இதில், தமிழகத்தில் 89 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

இவ்வறிக்கையின்படி, இந்தியா முழுவதிலும் உள்ள பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் குறித்தான தகவல் அம்மக்களிடம் சற்று கவலை அளிக்கிறது. இந்தியாவில் பட்டியலின மக்களின் சமூக பொருளாதார நிலை உயரவில்லை. மாறாக அம்மக்கள் மீது நடத்தப்படும் அனைத்து விதமான ஒடுக்கு முறைகளும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளன என்று என்.சி.பி.ஆர் அறிக்கையின் அடிப்படையில் அறிய முடிகிறது.

Link : 

CII_2021Volume 2

Please complete the required fields.




Back to top button
loader