அரசு பள்ளிகளுக்கு 100% மின்சாரம் தந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு ! ஒன்றிய நிலை தெரியுமா ?

சமீபத்தில் இந்திய கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வியை மையமாகக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. Unified District Information system of School education Plus (UDISE+) எனப்படும் இந்த கணக்கெடுப்பு அறிக்கையானது, பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம், பள்ளிகளின் எண்ணிக்கை, பாலின சமத்துவம் போன்ற முக்கிய கூறுகளைப் பற்றிய விவகாரங்களைப் பற்றி பேசியுள்ளது.

Advertisement

அவற்றில் ஒன்று தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் தனது குடிமக்களுக்கு வழங்கும் கல்வித் தரத்தின் தெளிவான நிலையை காண்பிப்பதாக அமைத்திருக்கக்கூடிய “பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள்” பற்றியது. UDISE + ஆல் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் (15,07,708) சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.

டிஜிட்டல் கல்வி வழிமுறைகளே படிப்பைத் தொடர ஒரே வழியாக (தற்போது வரை) மாறியுள்ள இந்த கோவிட் காலத்தில், 2019-2020 கல்வியாண்டில் நாட்டில் உள்ள 12% அரசுப் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதிகள் உள்ளன என்பதை இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை முறையே 10,32,570 மற்றும் 84,362. தமிழ்நாடு அதன் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் மற்ற சில மாநிலங்களை விட குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பள்ளிகளையே கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை – 58,897

அரசு பள்ளிகளின் எண்ணிக்கை – 37,579

அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை -8328

Advertisement

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை – 12,382

பிற பள்ளிகள் – 608

தமிழ்நாட்டுக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் முறையே 45,115 மற்றும் 49,834 அரசுப் பள்ளிகள் உள்ளன.

இந்த அறிக்கையின்படி, பள்ளிகளில் 100% செயல்பட்டு வரும் மின்சார இணைப்பு உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் 99% பெற்றுள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் 80% ஐ கடக்கும்போது, வடகிழக்கு மாநிலமான திரிபுரா (37%), மேகாலயா (21%) மோசமான சதவீதத்தை பதிவு செய்துள்ளது. உத்தரபிரதேசம் (76%), ராஜஸ்தான் (73%), ஒடிசா (66%) ஆகியவை அதன் பள்ளிகளுக்கு போதுமான மின்சாரம் வழங்காமல் உள்ளன.

ஒழுங்காக செயல்படும் குடிநீர் வசதி கிடைப்பது குறித்தான கணக்கெடுப்பிலும் தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்கள் முறையே 100% மற்றும் 99% பெற்று முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் 90% ஐ கடக்கின்றன. மேகாலயா (37%) மற்றும் அருணாச்சல பிரதேசம் (63%) என பின்தங்கி மோசமான சதவீதத்தை பதிவுசெய்கிறது.
முக்கியமான ஒன்று, எனினும் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது என்பது பள்ளி வளாகத்திற்கு வெளியேவும் இந்தியாவில் முழுமையாக சரிசெய்யப்படாத ஒரு பிரச்சனை. இருப்பினும், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மாணவர்களுக்கான கழிவறை வசதி சதவீதத்தில் 99.74% பெற்று மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான 99.92% கழிவறை வசதியுள்ளது சிறப்புக்குரியது. தமிழ்நாடு அதன் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளாவுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கி 97.33% பெற்றுள்ளது. ஆந்திராவின் 62% மற்றும் அசாமின் 31% ஆகியவை நாட்டின் மிக மோசமான சதவீதங்களில் ஒன்றாகும்.

மாணவிகளுக்கான கழிவறையைப் பொருத்தவரை 99.75% பெற்று மேற்கு வங்கம் முதலிடத்திலும், பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆந்திராவின் 67% , அசாமின் 28% , மேகலாயாவின் 67% அம்மாநிலங்களின் மோசமான உள்கட்டமைப்புகளை வெளிப்படுத்துகின்றன.

கணினி மற்றும் இணைய வசதி:

தற்போது உள்ள உலகம் டிஜிட்டல் உலகமாக இருந்தாலும் கூட, பள்ளிகளில் சரியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ஒப்பிடும்போது போதிய இணையம் மற்றும் கணினி வசதிகள் இல்லாத குறை குறைத்தே மதிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இவை சாதாரண நேரங்கள் அல்ல, மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போன்று பாடம் கற்பிப்பதற்கு பள்ளிகளுக்கு சரியான இணையம் மற்றும் கணினி வசதிகள் இருக்க வேண்டும். மிக விரைவில் கணினியும் , இணையமும் பள்ளி படிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. எனவே, இந்திய பள்ளிகளின் தற்போதைய நிலை என்ன?

கணினி வசதி :

கணினி வசதி கொண்ட இந்திய பள்ளிகள் – 37%
அரசு பள்ளிகள் – 28%
அரசு உதவி பெறும் பள்ளிகள் – 61%
தனியார் பள்ளிகள் – 58%

ஒட்டுமொத்தமாக 92% உடன் கேரளா முதலிடத்தில் உள்ளது, அங்குள்ள 92.76% அரசுப் பள்ளியிலும் , 89% தனியார் பள்ளியிலும் கணினி வசதி உள்ளது. ஒட்டுமொத்தமாக 76.55% உடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அரசு பள்ளிகள் 79% ஆகவும், தனியாரில் 89% ஆகவும் உள்ளது.

இணைய வசதி :

இணைய வசதி கொண்ட இந்திய பள்ளிகள் – 22%
அரசு பள்ளிகள் – 11.58%
அரசு உதவி பெறும் பள்ளிகள் – 42%
தனியார் பள்ளிகள் – 50%

மாநில பாகுபாடில்லாமல், பெரும்பாலான அரசு பள்ளிகளில் இணைய வசதிகள் இல்லவே இல்லை. இன்னும் தெளிவாக நிலையை எடுத்துரைக்க வேண்டுமானால் , பெரும்பாலான மாநிலங்களில், அரசு பள்ளிகளின் இணைய வசதி சதவீதம் என்பது தனியார் பள்ளிகளில் உள்ள வசதியின் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. சில மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம்.

இந்தியாவிலேயே கேரளா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்கள் தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பளிக்க கூடிய சதவீதத்தில் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டின் எண்ணிக்கையும் மிகவும் மோசமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சதவீதம் 31.95. மிகவும் சிக்கலான விஷயம் என்னவென்றால், தனியார் பள்ளிகளில் 75% இணையம் உள்ளது, அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் இணைய வசதிகளின் சதவீதம் வெறும் 17.95% மட்டுமே.

இணைய வசதிகளின் இந்த சதவீதங்களை பார்த்தாலே குடிமக்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தில் அச்சுறுத்தும் வகையில் உள்ள ஏற்றத்தாழ்வை உணர முடியும்.

இலவச பஸ் பாஸ் , இலவச சைக்கிள் , இலவச மதிய உணவு திட்டம், இலவச மடிக்கணினி அளிக்கும் திட்டம் என குழந்தைகளை பள்ளிகளின் வகுப்பறைக்குள் நுழைய வைக்க பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து சமூகநீதி புரட்சி செய்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் கால சூழலுக்கு ஏற்ப தன்னை புதுப்பிக்க தவறியுள்ளதாகவே இணைய வசதிகளின் சதவீதங்கள் காண்பிக்கின்றன.

இனி இணையம் தான் எதிர்காலம் என்றாகிவிட்ட நிலையில் , சரியான இணைய உள்கட்டமைப்பை வழங்குவதே நாடு முன்னோக்கி நகரும் வழியாக இருக்கும்.

Links :

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/statistics-new/udise_201920.pdf

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button