Articles

ஒரே நாளில் பெண்களுக்கு எதிராக வெளியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் !

இந்தியாவில் பெண் என்பவள் குழந்தையாக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனும் நிலை அதிகரித்து வருகிறது. எத்தனை எத்தனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து தேசிய அளவில் கண்டனங்களையும், வழக்குகளையும் சந்தித்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முடிந்தபாடில்லை. மாறாக, அதிகரித்து வருகின்றன.

Advertisement

தெலுங்கானாவில் 29 வயதான கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட உடலை எரித்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அச்சம்பவம் நிகழ்ந்த அதேநாளில் இந்திய அளவில் வெளியான பெண்களுக்கு எதிராக நடந்த பல பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் குறித்து ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஞ்சி : 

நவம்பர் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு ராஞ்சி பகுதியின் சங்கரம்பூர் கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்த 25 வயதான பழங்குடியினரைச் சேர்ந்த சட்டம்படிக்கும் மாணவிடம் இருவர் தவறாக நடந்து கொண்டுள்ளனர். பின்னர், தங்களின் நண்பர்களை அழைத்து அப்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளார். அங்கிருந்து கிராமத்திற்கு அருகில் இருந்த பகுதிக்கு பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் 2 நாட்டு துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் பைக் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது பெண் தனியார் தோட்டத்தில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருந்த செய்திகள் அங்கு போராட்டத்தை முன்னெடுக்க காரணமாகியது . ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கண்ணாடி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அப்பெண்ணும், அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த 30 வயதான ராஜேஷ் என்பவரும் காதலித்து வந்ததாகவும், ராஜேஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவரின் மனைவி தற்பொழுது பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

நவம்பர் 22-ம் தேதி காலையில் வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை. இளம்பெண் காணாமல் போன பிறகு அவரின் அண்ணன் ராஜேஷ்க்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது அப்பெண் தன்னுடன் தான் இருப்பதாக கூறியதை காவல்துறையிடம் தெரிவித்து இருந்தார். ஆனால், நவம்பர் 27-ம் தேதி இளம்பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கலாம் என பெற்றோர்கள் அளித்த புகாரில் ராஜேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் நவம்பர் 27-ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

நெய்வேலி : 

31 வயதான விதவைப் பெண் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் அருகே உறவினர் ஒருவருடன் வாகனத்தில் சென்ற போது அவர்களை கார்த்திக், சதீஷ்குமார் , ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகிய 5 பேரும் வழி மறித்து உடன் வந்தவரை துரத்தி விட்டுள்ளனர். அதன்பிறகு, அப்பெண்ணை அருகில் இருந்த தோட்டத்துக்கு தூக்கிச் சென்று மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர், அப்பெண்ணை சாலை பகுதிக்கு யார் அழைத்து செல்வது என்ற பேச்சில் அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. அதில், பிரகாஷ் என்பவரை கல்லால் தாக்கி கொன்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் நான்கு பேரும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் நவம்பர் 27-ம் தேதி வெளியாகின.

குஜராத் : 

நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் 14 வயது பெண் தன் ஆண் நண்பருடன் Navlakshi மைதானத்தில் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள சென்ற பொழுது அங்கு வந்த இருவர் தங்களை போலீஸ் எனக் கூறிக் கொண்டு மிரட்டி உள்ளனர். அப்பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் விரட்டப்பட்டு, அங்கிருந்து சாலைக்கு வந்தவர் போலீஸ்க்கு தகவல் கொடுத்த பொழுது சம்பவம் இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் இரத்தத்துடன் அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.  உடனடியாக, அப்பெண்ணை மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சண்டிகர் : 

சண்டிகர் ரயில் நிலையில் உறவினரால் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது பெண் குழந்தை ஆட்டோவில் ஏறிச் சென்ற பொழுது, ஆட்டோ ஓட்டுனர் அக்குழந்தையை கடத்திச் சென்று தாம் வசித்து வரும் பகுதியில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் போலீஸ் நவம்பர் 27-ம் தேதி தெரிவித்து உள்ளனர்.

இந்திய அளவில் பெண்களை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்து, எரித்த சம்பவங்கள் நவம்பர் 27-ம் தேதியில் செய்திகளாய் வெளியாகி இருக்கிறது. ஒரே நாளில் இத்தனை பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வெளியாகி இருக்கும் பொழுது, ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்து , அதையும் தவறாக மத சார்ந்த வன்மத்தை உருவாக்க பரப்பி இருக்கின்றனர். அனைத்து சம்பவங்களும் பெரிதாய் பேசப்பட வேண்டும் என்பதே சரியானது.

2014-ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையில், ” 13 ஆண்டுகளாக பகுப்பாய்வு செய்யப்பட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பான தரவுகளில் இருந்து, 13 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளிலும் 57 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும், ஒருமணி நேரத்திற்கு 2 வன்புணர்வு சம்பவங்கள் வீதம் நடக்கின்றன ” எனத் தெரிவித்து இருந்தனர்.

இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறார் என்பது தரவுகள் மட்டுமல்ல, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல். இத்தனை ஆண்டுகள் ஆகியும், சட்டங்கள் இருந்தும் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்புணர்வு கொடுமைகள் முடிவில்லாமல் செல்கிறது.

Proof links : 

Dragged behind bushes during driving lesson with friend, minor girl gang-raped in Vadodara

20-year-old girl found dead with burn and stab injures in Kancheepuram

32-year-old TN woman allegedly gangraped by 5 while returning from grocery run

Chandigarh Auto Driver Allegedly Kidnaps, Rapes 11-Year-Old Girl Abandoned By Aunt

Jharkhand: Woman abducted, gang-raped in Ranchi village, 12 arrested

One rape every 30 minutes in India

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button