விமானப் படையில் சீனாவை முந்திய இந்தியா.. தரவரிசையை வெளியிட்ட தளத்தின் பின்னணி தெரியுமா ?

உலகின் சக்திவாய்ந்த விமானப்படையில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக தரவரிசை பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. மேலும், தந்தி டிவி சேனல், “இது சும்மா டிரைலர் தான் மா..! சீனாவை அலற விட்ட இந்தியா! ” எனும் தலைப்பில் செய்தியையும் வெளியிட்டு இருக்கிறது

” World Directory of modern military aircraft(WDMMA) என்கிற அமைப்பு பகுப்பாய்வு செய்து வெளியிட்ட குளோபல் ஏர் பவர்ஸ் ரேங்கிங் 2022 தரவரிசையில், சீனா விமானப்படையை இந்திய விமானப்படை முந்தி உள்ளது. ஒவ்வொரு நாட்டின் ராணுவ விமானப் படை வலிமை என்பதை அதன் மொத்த விமானங்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யாமல் அதன் தரம், திறமை, நவீனம் ஆகியவற்றை பற்றி ஆராய்ந்து True Value Rating எனும் ரேங்கிங்கை அளித்து இருக்கிறது.

இதன்படி, இந்திய விமானப்படை(IAF) தற்போது மொத்தமாக 1,645 விமானங்களை வைத்து உள்ளது. People libertion army force(சீனா) 2,040 விமானங்களை கொண்டு இருந்தாலும் கூட TVR ரேட்டிங்  படி இந்தியா 69.4 புள்ளிகள் உடன் சீனாவை பின்தள்ளி உள்ளது. சீனாவின் விமானப்படை 63.8 புள்ளிகளைப் பெற்று உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா விமானப்படை முதல் இரண்டு இடங்களில் உள்ளன ” என செய்தியிலும், பதிவுகளிலும் கூறப்பட்டுள்ளது.

பின்னணி என்ன ?  

விமானப்படையில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா என வைரல் செய்யப்படும் தரவரிசையை வெளியிட்ட WDMMA இணையதளம் குறித்து தேடுகையில், ஒரு அமைப்பாக பகுப்பாய்வு செய்து தரவுகளை வெளியிடும் ஒரு நம்பத்தகுந்த தளத்திற்கான அறிகுறிகள் ஏதும் அந்த இணையதளத்தில் தென்படவில்லை.

இந்த இணையதளத்தில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விமானங்கள் தொடர்பான விவரங்கள் தனித்தனியாக இடம்பெற்று இருக்கிறது. பின்னர், 2022-ம் ஆண்டிற்கான தரவரிசை மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ஆனால், ஒரு அதிகாரப்பூர்வ தளத்திற்கு தேவையான அமைப்பு குறித்த விவரங்களோ,  தொடர்பு எண்கள் போன்ற அடிப்படை தகவல்கள் கூட அந்த இணையதளத்தில் இல்லை. அதுமட்டுமின்றி, இந்த இணையதளமே 2019-ல் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி WDMMA இணையதளமே அதிகாரப்பூர்வமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இல்லாமல் இருக்கையில், அந்த இணையதளம் வெளியிட்ட தரவரிசையை எதன் அடிப்டையில் நம்பி தந்தி டிவி உள்ளிட்ட செய்தி தளங்கள் செய்தியை வெளியிட்டு வருகிறார்கள் எனத் தெரியவில்லை. குறிப்பாக, இதுபற்றி இந்திய அளவில் முன்னணி செய்தி நிறுவனங்கள் ஏதும் செய்தி வெளியிடவில்லை.

இந்தியாவின் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்த பான்காங் பகுதியில் இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகி பாஜக அரசின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், விமானப்படையில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளியதாக நம்பத்தன்மை இல்லாத இணையதளத்தின் தரவரிசையைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Please complete the required fields.
Back to top button
loader