மே 26 முதல் சமூக வலைதளங்கள் முடக்கப்படுமா ? புதிய விதிமுறைகளுக்கான எதிர்ப்புகள் ஏன்?

நடைமுறையில் இருந்த டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்திற்கான இடைத்தரகர்கள் வழிகாட்டு விதிகள் 2011(Intermediary guidelines 2011)-ஐ நீக்கிவிட்டு புதிய விதிகளை (இடைத்தரகர்கள் வழிகாட்டு விதிகள் 2021) கடந்த பிப்ரவரி 25, 2021-ல் வெளியிட்டது மத்திய அரசு.
இந்த புதிய டிஜிட்டல் மீடியா விதிகளின் கீழ் இணங்க டிவிட்டர், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற இணையதள சமூக ஊடக இடைத்தரகர்கள் பல்வேறு மாற்றங்களை வரும் மே 25 க்குள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு மாற்றங்கள் செய்யப்படாத பட்சத்தில் அவை இந்தியாவில் இயங்க தடை விதக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்கள் எதுவும் புதிய விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த புதிய விதிமுறைகள் மக்களின் அடிப்படை உரிமையான தனியுரிமையை பறித்து மத்திய அரசின் கண்காணிப்பு நோக்கத்தினை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய விதிகள் இந்திய அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு, ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்தியாவின் இணையதள பயன்பாட்டு முறையையே எதிர்மறையாக மாற்றும் வகையாக உள்ளது என இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation) தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் வலுவான தரவுப் பாதுகாப்புச் சட்டம் (data protection act) இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவர் போட்ட பதிவு அரசால் “சட்டவிரோதமானது” எனத் தடைசெய்யப்பட்டால், அந்த தரவின் பதிவாளரை 36 மணி நேரத்துக்குள் குறிப்பிட்ட சமூக வலைதள நிர்வாகிகள் கண்டறிய வேண்டும்.
மேலும், டிஜிட்டல் செய்தி ஊடக அமைப்புகளைப் பொறுத்தவரை, “ நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது அண்டை நாடுகளுடனான நட்பு உறவுகள் ஆகியவற்றின் பார்வையில் இருந்து ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் எந்தவொரு செய்தியையும் அகற்றக்கோரும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்பது போன்ற விதிகள் இந்த புதிய வழிமுறைகளில் இடம்பெற்று உள்ளன. இவை அனைத்தும் அடிப்படை கருத்து உரிமைக்கு பாதகமாக அமைந்துள்ளது.
இந்த புதிய விதிகளால் இணையம் மற்றும் ஓடிடி தளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே யூடர்ன் செய்திகளை வெளியிட்டு உள்ளது.
சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு.. கருத்து சுதந்திரத்திற்கு பாதகமா ?
ஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?
இந்த விதிகளில் உள்ள அதிகப்படியான சர்ச்சைகளின் காரணமாக இதனை எதிர்த்து இந்தியாவின் மூன்று வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் குறைந்தது ஆறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய இணக்கங்கள் என்னென்ன ?
• 2011 விதிகளின் படி , இணைய பயனாளர் ஒருவர், அதன் விதிகள் குறித்து எதாவது புகார்களை முன்வைத்தால் புகார்களைப் பெறுவதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கும் குறை தீர்க்கும் அதிகாரி ஒருவர் பொறுப்பேற்பார். இதற்கு அவருக்கான கால அவகாசம் ஒரு மாதம். தற்போது அவை 24 மணிநேரமாக குறைக்கப்பட்டு, அவர் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
• அரசு புறம்பானது எனக் கருதும் பதிவுகளை நீக்க 2011 விதிகளின் படி இடைத்தரகர்கள் (சமூக வலைதளங்கள்) 36 மணிநேரத்துக்குள் செயல்பட்டு, பொருத்தமான சூழல் ஏற்பட்டால் அத்தகைய பதிவு செய்தவர்களுடன் இணைத்து பணியாற்றும் சூழலும் இருந்தது. ஆனால் ஐ.டி சட்டத்தின் பிரிவு 79 (3) இன் கீழ் பதிவை நீக்கும் செயல்முறையை இடைத்தரகர்கள் கட்டாயமாக 36 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என புதிய விதிகள் நிர்பந்திக்கிறது. அதுமட்டும் அல்லாமல் பதிவு செய்த நபர் பற்றிய தகவல்களை தர வேண்டும் அல்லது விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை இடைத்தரகர்கள் 72 மணி நேரத்திற்குள் சட்ட அமலாக்க துறைக்கு தரவேண்டும்.
• மேற்கொண்ட வழிமுறைகளுக்கு ஒத்துழையாவிட்டால் இடைத்தரகர்கள் மீது ஐ.டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்படும்.
இவை அனைத்துக்கும் மேலாக இடைத்தரகர் விதிகள், விதி 4-ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு பல கூடுதல் இணக்கங்கள் விதிக்கப்பட்டுள்ளன. மே 25 முதல் நடைமுறைக்கு வரும் இடைத்தரக விதிகளின் சில சிக்கலான விதிகள் உள்ளன. அவை விதிகள் 4(2) மற்றும் 4(4).
விதி 4(2)-ன் கீழ், செய்தியிடல் சேவைகளை (உதாரணமாக வாட்ஸ்அப்) வழங்கும் குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்கள் செய்திகளைத் தோற்றுவிப்பவரை கண்டுபிடிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும். இது அனைத்து குடிமக்களின் அடிப்படை பேச்சு மற்றும் தனியுரிமையின் உரிமைகளுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும். இறுதி முதல் இறுதி குறியாக்கம் ( end to end encryption) போன்ற பாதுகாப்பு வசதிகளை இது மட்டுப்படுத்தும். ஒருவரது தனிப்பட்ட உரையாடல்களை கண்காணிக்கும் வகையில் இது அமையும். இது போல ஏராளமான அரசுக்கும் அதீத அதிகாரத்தை ஈட்டு தரக்கூடிய விதிகள் இந்த புதிய வழிமுறைகளில் இடம்பெற்று உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை இணைய பயன்பாடு என்பது பெரும்பான்மை மக்களுக்கு சமூக வலைதள பயன்பாடுகளே. படிக்க, உரையாட, செய்தி வாசிக்க, இணைப்பில் இருக்க, பல்வேறு தலைப்புகளைப் பற்றியும், பல்வேறு சம்பவங்கள் பற்றியும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கலந்துரையாட, ஏன் அவசர மற்றும் பேரழிவு காலங்களில் உதவி கேட்க, உதவி கரம் நீட்ட என சமூக வலைதளங்கள் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை அளிக்கக்கூடியதாகவே இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாதது.
Link :
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.