14 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி.. சுவிஸ் வங்கியில் ரூ.30,500 கோடியாக உயர்ந்த இந்தியர்களின் பணம் !

2021-ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபர்கள் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட கிளைகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உள்ளிடவையின் பணமானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.30,500 கோடிக்கு மேல் (3.83 பில்லியன் சுவிஸ் ஃபிராங்கு) உயர்ந்துள்ளது என சுவிட்சர்லாந்து சென்ட்ரல் பேங்க் அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

2020-ம் ஆண்டின் இறுதியில் ரூ.20,700 கோடியாக சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்திய வாடிக்கையாளர்களின் மொத்த பணமானது, 2021-ம் ஆண்டில் 50% அதிகரித்து ரூ.30,500 கோடியாக உயர்ந்து உள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்து இருப்பதைக் குறிக்கிறது .

இதுதவிர, இந்திய வாடிக்கையாளர்கள் உடைய சேமிப்பு மற்றும் டெபாசிட் கணக்குகளில் வைத்திருக்கும் பணம் 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து சுமார் ரூ.4,800 கோடியாக உயர்ந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணமும், இந்தியாவிற்கு வெளியே வைக்கப்படும் கருப்பு பணமும் எப்போதும் இணைக்கப்பட்டே பேசப்பட்டு வந்துள்ளது. அது அரசியல் கட்சிகளுக்கும் விதிவிலக்கு அல்ல. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த இணைப்பு மாறியதை பார்க்க முடிந்தது

2017-ல் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் 50% அதிகரித்து உள்ளதாக சுவிட்சர்லாந்து நேஷனல் வங்கி தெரிவித்து இருந்தது. ஆனால், ” சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பெரும்பாலானோர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணம் இல்லை. இந்தியர்கள் கருப்பு பணம் வைத்து இருந்தால் கண்டறியப்படும் “ என முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அப்போது தெரிவித்தது விமர்சனத்துக்குள்ளானது.

மேலும் படிக்க : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 50 % அதிகரிப்பு..!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50% அதிகரித்து உள்ள செய்தி வெளியான நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலின் போது, ” வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என சபதம் ஏற்கிறேன் ” என பிரதமர் நரேந்திர மோடி பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Please complete the required fields.
Back to top button