தூய்மையான நகரங்கள் பட்டியலில் பின்தங்கியுள்ள தமிழ்நாடு.. தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் ம.பி.யின் இந்தூர்..!

தரவரிசைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன ? சிறந்த தரவரிசையில் உள்ள நகரங்கள் கடைப்பிடிக்கும் அளவுகோல்கள் என்னென்ன ?

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) நாட்டின் தூய்மையான நகரங்களுக்கான வருடாந்திர தரவரிசையை பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது. தூய்மை கணக்கெடுப்பு என்று பொருள் தரும் வகையில் இந்த அறிக்கைக்கு “Swacch Survekshan 2023” என்று  சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது. இது அனைத்து திட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயரிடும், ஒன்றிய அரசின் இயல்பையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அறிக்கையின்படி, ம.பி.யின் இந்தூர் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத் ஆகிய இரண்டு நகரங்களும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் ம.பி.யின் இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து நவி மும்பை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 நகரங்களான விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் திருப்பதி முறையே 4வது, 6வது மற்றும் 8வது இடங்களுடன், முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போன்று தூய்மையான ராணுவக் குடியிருப்பு வாரியங்களில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் ராணுவக் குடியிருப்பு வாரியமும், தூய்மையான கங்கை நகரங்களில் வாரணாசியும் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் மோசமான செயல்பாடு:

பொதுவாக பல சமூக குறியீடுகளில் (Social Indicators) முதன்மையான இடங்களை வகிக்கும் தமிழ்நாடு, இந்த ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகளுக்காக, தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள 446 நகரங்களில், முதல் 100 இடங்களில் கூட இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரியதாகும். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சிராப்பள்ளி நகரம், நாட்டிலேயே 112வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 262-வது இடத்தில் இருந்த திருச்சி நகரம், இந்தாண்டு 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதே போன்று தூத்துக்குடி 179வது இடத்திலும், கோவை 182வது இடத்திலும், நாகப்பட்டினம் 196வது இடத்திலும், மாநிலத்தின் தலைநகரான சென்னை 199வது இடத்திலும் உள்ளன. இதன் மூலம் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு, 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே போன்று ஒட்டுமொத்த மாநிலங்களின் செயல்திறனில், தமிழ்நாடு நாட்டிலேயே 10வது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

தரவரிசையில் பின்தங்கியுள்ள இந்தியாவின் முக்கிய நகரங்கள்:

தரவரிசையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 2022 அறிக்கையின் படி 44வது இடத்தில் இருந்தநிலையில், தற்போது 199வது இடத்திற்கு சென்றுள்ளது. இதே போன்று பெங்களூர், கொச்சி, மும்பை, கோயம்பத்தூர் மற்றும் பாட்னா போன்ற பெருநகரங்களும் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட தரவரிசையை விட, தற்போது பின்தங்கியே காணப்படுகின்றன என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரைப்படத்தின் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

தரவரிசைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன ?

பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மொத்தமாக 9,500 மதிப்பெண்களுடன் இந்த அறிக்கை மதிப்பிடப்படுகிறது. இதில் சேவை நிலை முன்னேற்றம், சான்றளிப்பு மற்றும் குடிமக்களின் குரல் என்ற மூன்று பிரிவுகளின் முறையே 4830, 2500 மற்றும் 2170 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறன என்பதை ‘Swacch Survekshan 2023’ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கீழே உள்ள புகைப்படத்தின் மூலம் நன்கு அறிய முடிகிறது.

சேவை நிலை முன்னேற்றம் (4830 மதிப்பெண்கள்) :

இந்தப் பிரிவு, கழிவுகளை சேகரித்தல், அவற்றின் செயலாக்கம் மற்றும் பொது இடங்கள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் போன்ற இடங்களில் நிலவும் தூய்மைநிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட கழிவுகள் எவ்வாறு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் கழிவுகள் எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகின்றன என்பதை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், இந்த பிரிவு மிகவும் விரிவாக கணக்கிடப்படுகிறது. இதில், பிரிக்கப்பட்ட கழிவுகளின் சேகரிப்பு பிரிவில் 1600 மதிப்பெண்கள், கழிவுகளின் செயலாக்கம் & அகற்றல் பிரிவில் 1910 மதிப்பெண்கள், பயன்படுத்திய நீரின் மேலாண்மை (UWM) மற்றும் சஃபைமித்ரா சுரக்ஷா பிரிவுகளின் கீழ் 1320 மதிப்பெண்கள் என பல துணைப்பிரிவுகளும் காணப்படுகின்றன.

சான்றிதழ் (2500 மதிப்பெண்கள்) :

இந்த நிலையில், இரண்டு பிரிவுகளின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அவற்றிற்கு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. அவை ‘குப்பை இல்லாத நகரங்களின் (GFC) தரமதிப்பீட்டு நிலை’ மற்றும் ‘திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) நிலை’ என்ற பிரிவுகளின் முறையே 1375 மற்றும் 1125 மதிப்பெண்களுடன் சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன.

குடிமக்களின் குரல் (2170 மதிப்பெண்கள்) :

இந்த பிரிவின் கீழ், குடிமக்களின் கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மக்களிடமிருந்து நேரடியான கருத்துக்களைப் பெறுவதுடன், உள்ளூரில் இருக்கும் ‘Brand Ambassadors மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) மூலமாகவும் குடிமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்படுகின்றன.

மேலும் உள்ளூர் மக்கள், குழுக்கள், வார்டு கவுன்சிலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து ‘ஸ்வச்சதா சாம்பியன்கள்’ அடையாளம் காணப்பட்டு, வார்டு வாரியாக தரவரிசைகள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவின் கீழ், நகரத்தின் தூய்மையை மேம்படுத்துவதற்காக கலைப்படைப்புகள், ஓவியங்கள், சுவரோவியங்கள் போன்றவற்றை உருவாக்குவதிலும் குடிமக்கள் ஈடுபடுகின்றனர்.

‘ஸ்வச் பாரத்’ (‘Swacch Bharat’) திட்டம்:

‘ஸ்வச் சர்வேக்ஷன்’ (தூய்மை கணக்கெடுப்பு) என்பது நாட்டின் தூய்மையான நகரங்களுக்கான வருடாந்திர தரவரிசையை பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி செயல்படுத்தப்படும் ஒரு வருடாந்திர கணக்கெடுப்பு முறையாகும். மேலும் இந்த கணக்கெடுப்பு, ‘ஸ்வச் பாரத்‘ (தூய்மையான இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டின் ஸ்வச் சர்வேக்ஷன் 2022 மதிப்பெண் முறைகளை ஆய்வு செய்தால், இந்த ஆண்டில் இந்த முறை கணிசமாக மாறியுள்ளதையும் அறிய முடிகிறது. மேலும் இந்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட 2016 ஆம் ஆண்டிலிருந்தே இந்த முறை மாறி வருகிறது என்பதையும் காண முடிகிறது. எனவே வரும் ஆண்டுகளில், இந்த கணக்கெடுப்பு பல முன்னேற்றங்களுடன் செயல்படுத்தவேண்டியதும், அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஆதாரங்கள்:

Swacch Survekshan 2023 Toolkit

Chennai Report

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader